உப்புத் தட்டுப்பாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கெப்பெட்டிபொல | தினகரன் வாரமஞ்சரி

உப்புத் தட்டுப்பாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கெப்பெட்டிபொல

ஆங்கிலேய இராணுவத்திடம் சிக்கிக் கொண்ட முன்னாள் போராளி ஒருவன் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவன் உமிழ்ந்து தள்ளிய உண்மைகளில் காட்டிக் கொடுப்பவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள் பற்றியும் செய்திகள் வெளிவந்தன. 

1817ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி ஈத்தனவத்தை தேவாலயத்திற்கு அருகாமையில் சுதேச போராளிகளிடம் சிக்கிய ஆங்கிலேயர்களுக்கும் அவர்களுக்கு துணைபோன சுதேசிகளுக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. தியபெத்மேயில் அமைந்துள்ள அரச மாளிகைக்கு வெளியே இவ் விசாரணைமன்றம் கூடியது. வழக்கு விசாரணையையும் தண்டனை வழங்கப்பட்டமையையும் அக்கைதி நேரடியாக அவதானித்துள்ளான். 

“ஈத்தனவத்தை தேவாலயத்திற்கருகில் ஆற்றங்கரையில் மேஜர் வில்சன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோது நான் அவர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள் ஓடினேன். அங்கு லெப்டினண்ட் நிவ்மன் படையணியுடன் இணைய எனக்கு வாய்ப்பு கிட்டியது. சுதேசிகளின் இடையறா தாக்குதல்கள் காரணமாக நிவ்மனின் படையணி பின்வாங்க நேர்ந்தது. அவர்களோடு நானும் சென்றேன். ஆதிவாசிகளினால் ஏவப்பட்ட அம்பு தாக்கியதால் மரண மடைந்த சிப்பாய் ஒருவனது உடல் எம்வசமிருந்தது. அச் சடலத்தை அடக்கம் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். எதிரிகளின் தாக்குதல் ஓய்ந்தபோது நாம் பிரேதத்தை பொல்வத்தைக்கு எடுத்துச் சென்றோம். 

பொல்வத்தையில் அவ்வுடலை புதைப்பதற்கு எமக்கு வாய்ப்பு கிட்டவில்லை. கெப்பெட்டிபொலையின் ஆட்கள் அங்கும் எம்மீது தாக்குதல்களை தொடர்ந்தனர். நிவ்மனின் சிப்பாய்கள் எதிர்தாக்குதல் மேற்கொண்டு துப்பாக்கிகளை இயக்கியபோது படையணியின் முன்னணியில் இருந்த ஹஜ்ஜி முகாந்திரம் மற்றும் கணேதன்ன விதானகே உட்பட பலர் காட்டுக்குள் ஓடி உயிர் தப்பினர். இச் சந்தர்ப்பத்தில் படையணியில் அங்கம் வகித்த சுதேசிகளில் சிலரும் காட்டுக்குள் ஓடி மறைந்தனர். அவர்கள் பின்னால் நானும் ஓடினேன். இவ்வாறு காட்டுக்குள் ஓடிய நாம் எண்மர்களாகும். 

காட்டுக்குள் ஓடிக்கொண்டே எமது மேலாடைகளைக் களைந்து கோவணமாக தரித்துக்கொண்டும் உடம்பு முழுதும் சேற்றை வாரி பூசிக்கொண்டும் விவசாயிகள் போன்று வேடம் தரித்து செல்வது நல்லதென கணேசதன்னவிதான குறிப்பிட்டதை நாம் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செயல்பட்டோம்.   எவ்வித இடையூறுகளுமின்றி பதுளை கோமாரிக்கா என்னும் கிராமத்தை நாம் அடைந்தோம். அங்குள்ள மக்கள் கணேதன்ன விதானையை நன்கு அறிந்திருந்தமையினால் எமக்கு உபசரிப்போடு தரிப்பிட வசதியும் கிடைத்தது. 

எனினும் இரவு வில் அம்பு தரித்த குழுவொன்று எம்முன்னால் வந்து நின்றதோடு தாம் மன்னன் ஸ்ரீ இராஜசிங்கனின் காவல் துறையினர் எனவும் எங்களை கைது செய்வதற்காக வந்திருப்பதாகவும் கூறினர். அவர்களின் முன்வரிசையில் நின்ற இருவரை எமது அணியிலிருந்த ஹஜ்ஜி முகாந்திரம் தாக்கினார். அவ்விருவரும் தரையில் வீழ்ந்தனர். எனினும் பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் எம்மைப் பிடித்து கைகளை பின்புறமாக வைத்து கட்டி எம்மை அரசனிடம் அழைத்துச் சென்றனர். ஸ்ரீ இராஜசிங்கன் என்னும் பெயர் பூண்ட துரைசாமி அச்சந்தர்ப்பத்தில் ஊசன்வெல்லையை அண்மித்த தியபெத்மே என்னும் இடத்தில் அமைந்திருந்த மாளிகையில் வசித்து வந்தான். நாம் அனைவரும் அம்மாளிகையின் முன்னால் மாளிகையை பார்க்கும்படி நிறுத்தப்பட்டோம். மன்னர் வருகை தருவதாக கட்டியம் கூறப்பட்டது. எம்மைச் சுற்றியிருந்தவர்கள் தரையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து மரியாதை செலுத்தினர். மன்னருக்கு பின்புறமாக கிவுல் கெதற மொஹட்டால நின்று கொண்டிருந்தான். மன்னன் கைதிகளைப் பார்த்து கேள்விகளை கேட்கலானான். அரசனின் வார்த்தைகளை உரத்த குரலில் கூறுவதும் எம்மால் அளிக்கப்படும் பதில்களை மன்னனுக்கு எடுத்துக் கூறுவதும் கிவுல்கெதற மொஹட்டாலவின் கடமையாக விருந்தது. 

முதன்முதலாக ஹஜ்ஜி முகாந்திரமிடம் கேள்விகளை தொடுக்கப்பட்டது. தாம் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு எதிராக ஆங்கிலேயருடன் இணைந்து செயல்படுவதாக எவ்வித அச்சமுமின்றி பிரஸ்தாபித்தான் ஹஜ்ஜி முகாந்திரம். அப்போது கிவுல்கெதற மொஹட்டால முன்னால் பாய்ந்து வந்து ஹஜ்ஜி முகாந்திரத்தின் தலைமயிரைப் பிடித்தாட்டியும் தலைமயிரை வெட்டியும் கோபாவேசமாக செயல்பட்டான். 

“நீ என்னுடைய தலைமயிர்களை வெட்டி உனது மனைவிக்காக கொண்டுபோகப் போகிறாய்?”என ஹஜ்ஜி முகாந்திரம் அப்போது கிவுல்கெதறவிடம் கேட்டான். வலியைப் பொறுத்துக்கொண்டு கோபத்துடன் ஹஜ்ஜி காணப்பட்டான். 

“உனது இந்த கேலிவார்த்தைகளால் இன்று எதுவும் நடக்கப்போவதில்லை. ஒரு தடவை வெள்ளைக்காரர்களிடம் என்னைப் பிடித்துக் கொடுத்த கும்பலில் நீயும் இருந்தாய்!” என கர்ஜித்தான் கிவுல்கெதற. அப்போது அங்கிருந்த ஒருவன் கல்லுடைக்கும் ஆயுதமொன்றை கொண்டுவந்து மொஹட்டாலவிடம் கையளித்தான். தரையில் வீழ்ந்து வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஹஜ்ஜி முகாந்திரத்தின் மார்பில் பல தடவைகள் அப்பாரிய ஆயுதத்தினால் தாக்கினான், கிவுல்கெதற மொஹட்டால. பின்னர் ஹஜ்ஜி முகாந்திரத்தின் கழுத்தைத் துண்டித்து சிரம் கொய்தான். ஹஜ்ஜி முகாந்திரத்தின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது. 

அதனைத் தொடர்ந்து கணேதன்னை விதானை முன்னால் கொண்டுவரப்பட்டான். 

“மலைநாட்டின் புதிய மன்னருக்கு அன்பளிப்புகள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு அரசனுக்கு வெகுமதிகள் கொண்டுசெல்பவர்கள் ஆங்கிலேய அரசினால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று நீ உரைத்த தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு நீ கூறும் பதில் என்ன?”  

ஸ்ரீ இராஜசிங்கன் (துரைசாமி) இவ்வாறு கணேதன்னையிடம் விசாரணையை ஆரம்பித்தான். மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக தாம் குற்றவாளியே எனக் கணேதன்னை ஒப்புக்கொண்டான். 

“அப்படியானால் நீ இந்த இடத்திலேயே கொல்லப்படுவது பாவமில்லையே?” மீண்டும் மன்னன் கேள்வி எழுப்பினான். கொலை செய்வது பாவமாக இல்லையா என்பது பற்றி தனக்குத் தெரியாதென்றான கணேதன்னை. கைதியாக இருக்கும் தனக்கு மன்னரின் விருப்பத்தை குறை கூற இயலாதென்றான் கைதி. 

“முப்பத்திரண்டு வகையான சித்திரவதைகளையும் மேற்கொண்டு பின்னர் இவனை கொன்றுவிடுங்கள்!” என அரசன் தீர்ப்பு வழங்கினான். இச்சந்தர்ப்பத்தில் மன்னன் ஸ்ரீ இராஜசிங்கன் (துரைசாமி) கிவுல்கெதற மொஹட்டாலையை ‘வலப்பனை திசாவை’ எனவே அழைத்தான். எம்மிடமிருந்து தலைமறைவாக இழுத்துச் செல்லப்பட்ட கணேதன்னை நிலமே சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் கொண்டுவரப்பட்டு எம் கண்முன்னால் கொலை செய்யப்பட்டான். ஏனையோருக்கு தற்காலிகமாக விடுதலையளிக்கப்பட்டது.” என அக்கைதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். 

‘செங்கண்டகல’ எனவும் ‘செங்கட கல’ எனவும் அழைக்கப்பட்ட கண்டி இராசதானியின் ஆரம்பகாலம் முதல் மத்திய மலைநாட்டுக்கு உப்பு விநியோகித்தவர்கள் முஸ்லிம் வியாபாரிகளாகும். அவற்றை கொள்வனவு செய்வதற்கு பொறுப்பான செயலாளராக (குனம்மடுவே லேக்கம்) சிங்களவர்களே நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் அவனது கடமை; அரண்மனையின் உப்பு களஞ்சியசாலைக்குத் தேவையான உப்பு மூடைகளை மத்திய மலைநாட்டுக்கு தருவித்துக் கொள்வதற்கான வண்டிகளுக்கு தேவைப்படும் எருதுகளை முஸ்லிம்களிடமிருந்து தேடிக் கொடுப்பது மாத்திரமேயாகும். 

மேற்படி செயலாளரின் அனுமதி பெற்ற முஸ்லிம் வியாபாரிகள் கரையோர பிரதேசங்களிலிருந்து மலை நாட்டுக்கு உப்புபொதிகளை எடுத்துச் சென்றனர். ஆங்கிலேயர்களுக்கும் அவர்கள் சார்பானவர்களுக்கும் தேவையான உப்பு தாராளமாகக் கிடைக்கப்பெற்றபோதும் ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுதேசிகளுக்கு உப்பு கிடைப்பதில் பெரும் தடங்கல்கள் நிலவின. 

கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கும், சிங்கள குடிமக்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதிருந்தபோதும் அவர்களுக்குத் தேவையான உப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக முழு நாடும் உப்பு தட்டுப்பாட்டுக்குள்ளாகியது. இவ்வாறு சுதேச போராளிகள் மாத்திரமன்றி நாட்டு மக்களும் புதிதாக உப்பு கிடைக்காத துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகினர். 

நாடளாவிய உப்பு தட்டுப்பாடு கெப்பெட்டிப்பொலை தலைமையிலான சுதேசி சுதந்திர போராட்டவீரர்கள் முகம் கொடுக்க வேண்டிய புதிய பிரச்சினையாக மாறியது. பாரிய வயிற்றுப் பிரச்சினையாகவும் விளங்கியது. உப்பு பாவனைக்கு பழக்கப்பட்டுவிட்ட குழந்தைகள் முதல் பெரியோர் வரையிலான நாட்டு பிரஜைகள் பேரவதிக்குள்ளாகினர். 

கரையோரங்ளிலிருந்து கொண்டுவரப்படும் உப்புப் பொதிகள் ஆங்காங்கே முளைத்துள்ள வெள்ளையர்களின் இராணுவ முகாம்களில் தரித்து நிற்போருக்கும், ஆங்கிலேயருக்குச் சார்பானவர்களாகிய சுதேசிகளுக்கும், முஸ்லிம் கிராமங்களுக்கும் மாத்திரமே சென்றடைந்தன. எனவே நாட்டுமக்களின் உப்பு தேவையைச் சமாளிப்பதற்காக கெப்பெட்டிப்பொல மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கையாக கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து மலைநாட்டுக்குக் கொண்டுவரப்படும் உப்புப் பொதிகளை கொள்ளையிடுவதாக அமைந்தது. 

(தொடரும்)

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(சிங்ஹலே ஜாத்திக சட்டன்)
சி.கே. முருகேசு

Comments