உலக இயக்கத்தின் எரிபொருள் ஆசிரியமே | தினகரன் வாரமஞ்சரி

உலக இயக்கத்தின் எரிபொருள் ஆசிரியமே

உலகத் தொழில்களெல்லாமே நேரடி உற்பத்தியொன்றுடன் மட்டுப்பட்டு விடுகின்றன. அவைகளுக்கு அப்பால் சென்று துறைசார் ஆய்வாளர், மருத்துவர், சமுதாய வழிகாட்டி, உளவியளாளர், கணிதவியலாளர், எழுத்தாளர் எனப் பல்வேறு தளங்களில் நின்று உலகை இயக்கும் இயக்க சக்திகளுக்கு எரிபொருளாக திகழ்வது ஆசிரியமே.  

உலகளவில் பல்வேறு தினங்கள் நினைவு கூரப்படுகின்ற போதிலும் எல்லாத் தரப்பினரும் நினைத்துப் பார்க்கின்ற தினம் ஆசிரியர் தினம் மட்டுமே. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் ஒக்டோபர் 06 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. எனினும் செப்டம்பர் 5 இல் இந்தியாவிலும் ஒக்டோபர் 5 இல் ரஷ்யாவிலும் மே 2 இல் ஈராக்கிலும் ஜனவரி 16 இல் தாய்லாந்திலும் நவம்பர் 24 இல் துருக்கியிலும் என வெவ்வேறு நாடுகளிலும் பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுவதுடன் சில நாடுகளில் விடுமுறை தினமாகவும் இது பிரகடனப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.  

கல்வி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிடும் போது, 'கல்வியின் நோக்கம் என்பது சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆசையை தூண்டுவதாக இருக்க வேண்டும். கல்வியின் மூலம் பெற்ற அறிவை தன்னலத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் சமூக நலத்திற்கும் பயன்படுத்த வேண்டும்' என்றார்.  

இவ்வாறாக தன்னலமற்று சமூகத் தரப்பினைச் சீர்செய்யத் தம்மை மெழுகுவர்த்தியாய் ஆக்குகின்ற சேவையாளர்கள் ஆசிரியர்களே.  

ஆசிரியன் என்பவன் பாடப்புத்தகங்களோடு மாத்திரம் நின்று விடுபவனல்ல. அவன் மாணவர்களின் “றோல் மொடலாக” (Role Model) மாறுகிறான். அதனால்தான் சமூகத் தரப்பிலுள்ள ஏனைய எல்லா அமைப்பினரது வழிகாட்டலை விடவும் மாணவ சமூகத்தால் கௌரவமாக உவந்தேற்கப்படுகின்ற வழிகாட்டல் ஆசிரியர்களுடையதாகப் பார்க்கப்படுகிறது.  

ஆசிரியன் வெறும் வழிகாட்டி மாத்திரமல்ல அவன் நிலையான உருவாக்கி. அவனது உருவாக்கத்தில் ஏற்படும் வளைவும் நெளிவு சுளிவுகளும் ஒரு சமூகத்தையே பாதிக்கின்றது என்பதே சமூகவியலாளல்களின் வாதமாகும். தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற மாணவ பயிர்களை பல்வேறு தியாகங்களுக்கும் பொறுமைகளுக்கும் மத்தியில் வளர்த்தெடுக்கின்ற கைங்கரியங்களின் சொந்தக்காரனை ஞாபகமூட்டினால் மாத்திரம் போதாது என்பதே பொதுப்படையான கருத்தாகும்.  

இருப்பினும் இன்றைய தினத்தில் நாம் செய்கின்ற வழமையான கொண்டாட்டங்கள் கௌரவிப்புக்கள் என்பவற்றிற்குப் புறம்பாக ஆசிரிய- மாணவ வழிநடத்துதலில் ஏதாவது கீறல்கள் எற்பட்டிருப்பின் அதனைப் பரஸ்பரம் விட்டுக் கொடுப்புக்கள் மூலம் நீக்கி நல்லதொரு ஐக்கியத்தை வளர்த்துக் கொள்கின்ற சந்தர்ப்பமாக ஆசிரியர் தினம் பயன்படுத்தப்பட வேண்டும்.   அப்போதுதான் வெறுமனே தின வழிபாடாக மட்டுமின்றி உணர்வு பூர்வமான நோக்க அடைவை விதைக்கின்ற தினமாக இத்தினம் மாற்றமடையும்.  

எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற ஆத்தி சூடி வாக்கியம், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு எனும் திருக்குறளின் முதலாவது பதிவு,ஒதுவீராக ! படிப்பீராக ! என்கின்ற அல் குர்ஆனின் முதல் கட்டளை என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆசிரியம் அல்லது கற்பித்தல் என்பது இறைமகிமையின் வெளிப்பாடென்பது புலனாகிறது. அவ்வாறான ஆசிரியர்களின் தியாகத்தை கௌரவிக்கும் ஓர் ஏற்பாடே ஆசிரியர் தினமாகும்.  

கிருஸ்ணரின் குருவாக சண்டிப்பணியும் அகத்தியரின் குருவாக சிவனும் நபித் தோழர்களின் கற்பிப்பாளராக முஹம்மது (ஸல்) அவர்களும் இருந்தமையினை வேதநூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இப்படிப்பட்ட உயர் நிலையில் வைத்து மதிக்கப்படும் ஆசிரியர்கள் தமது நிலைமையினையும் தம் பொறுப்புக்களையும் பற்றிச் சிந்தித்துக் தம்மைப் புடம் போடுகின்ற நாளாக ஆசிரியர் தினத்தை அமைக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் அடைவு நோக்கமாகும்.  

ஆசிரியர்களின் காலில் விழுதல், அவர்களை சந்திக்கும் வேளைகளில் பயபக்தியுடன் நடத்தல், எழுந்து நின்று கை உயர்த்துதல் போன்றன மரியாதையின் ஏற்பாடுகளாக பல்வேறு நாடுகளிலும் எஞ்சியிருக்கின்ற போதிலும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்காமை, குருகுல வாசகக் கல்வி முறையின் மாற்றம், கட்டாய வகுப்பேற்றம் முதலிய கல்விக் கொள்கையின் முன்னெடுப்புக்களால் ஆசிரியர்த்துவம் வலுவிழந்து வருகின்றது என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது என்பது ஆசிரிய சமூகத்தின் ஆதங்கமாகும்.  

வரலாற்றுக் காலங்களில் வலம் வந்த அவைக் கள புலவர்கள் முதல் அல்பேட் ஐன்ஸ்டீன், மரீயா மொண்ட சோரி, ஸ்டிபன் ஹாக்கின்ஸ் போன்ற விஞ்ஞான துறை அறிஞர்கள் மற்றும் இந்திய ஆசிரியர் தின மூலகர்த்தவான

இந்தியாவின் மூன்றாவது ஜனாதிபதி ​ெடாக்டர் சர்வாப்பள்ளி ராதாகிருஷ்ன் அடங்கலாக இன்று பல முதன்நிலை அதிகாரம் படைத்தவர்கள் ஆசிரியர்களாகவே தம்பணி தொடர்ந்திருக்கின்றனர் என்பது கௌரவமான வரலாற்றுத் தடயமாகும்.  

ஏனைய தொழில்களைப் போன்று ஆசிரியத்தை மேலோட்டமான வகைப்பாட்டுக்குள் கூறினாலும் ஆசிரியம் என்பது சேவை-பணி என்கின்ற அடைகளுக்கே உரியது. இப்படிப்பட்ட சேவையாளர்களைக் கௌரவிப்பதற்கான இத்தினம் உணர்வுபூர்வமான சங்கமமாக மாற வேண்டும். அப்போதுதான் அதன் உண்மைத்துவம் மேலோங்கும்.  

இலவசக் கல்வியை வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு தனியிடமுண்டு. இலங்கையின் கல்விக் கொள்கையும் தரமும் உயர்ந்து கொண்டு வருகிறது.

இவ் உயர்ச்சிக்குப் பின்னால் நிற்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்க ஆண்டுதோறும் அரசு “பிரதீப பிரபா” விருது வழங்கி வருவது மெச்சத்தக்க செயலாகும்.

எனினும் இதற்கான தெரிவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது இதன் கௌரவத்தை இன்னும் உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை  

ஏட்டுக் கல்வியினை மட்டும் வழங்காது வீட்டுக் கல்வி,நாட்டுக் கல்வி என அனைத்தையும் வழங்கி நல்லதொரு மனிதனை உருவாக்கும் தூர நோக்குடையாக பணியாளர்களான ஆசிரியர்களுக்கான மாதாந்த வேதனம் அணமையிலுள்ள இந்தியாவுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்னணியில் இருப்பது தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுகின்ற விடயமாகும். வேறு வருமான வழிகளில் தங்களை உட்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கும் சமூகக் கௌரவம் மிக்க பெருமளவானவர்களைக் கொண்ட ஆசிரிய சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஆசிரியர்களின் தற்காலக் கோரிக்கையாகும் என்பது இவ் ஆசிரியர் தினத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.   ஒரு மனிதனின் வாழ்வியல் நகர்வில் எல்லாக் கட்டங்களிலும் ஞாபகப்படுத்தப்பட வேண்டிய பாத்திரம் ஆசிரியமே.

அதனை உணர்வுபூர்வமாக வரவேற்பதும் நினைவு கூருவதும் கௌரவிப்பதும் மாணவர் சமூகத்தின் பொறுப்பும் கடமையும் உணர்வுமாகும்.  

ஜெஸ்மி எம். மூஸா

Comments