கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபையின் 377வது நிறைவாண்டு விழா இன்று | தினகரன் வாரமஞ்சரி

கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபையின் 377வது நிறைவாண்டு விழா இன்று

“ஒல்லாந்தர் சீர்திருத்த திருச்சபை” என்று அழைக்கப்பட்ட இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டு 377நிறைவை இன்று கொண்டாடுகிறது.  

இலங்கையின் தென் பகுதியின் அடையாள சின்னமாக விளங்குவது காலி கோட்டையும் அதனுள் அமைந்திருக்கும் டச் ஆலய கட்டடமுமாகும். இந்த கோட்டையில் அமைந்துள்ள டச் ஆலயமே இலங்கையின் முதலாவது சீர்திருத்த சபையாகும். இதுவே இலங்கையின் தாய் சபை என்று கூறப்படுகிறது. இத்திருச்சபை 1642அக்டோபர் 6ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு, தேவ செய்தி வழங்கப்பட்டது. அதன் பின்பே இலங்கை யாழ்ப்பாணம், கொழும்பு, மாத்தறை, கற்பிட்டி, மன்னார் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சீர்திருத்த ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.  

இந்த ஆலய ஸ்தாபகத்தைத் தொடர்ந்து நாட்டிலுள்ள சகல கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபைகளிலும் விசேட ஆராதனைகள் திருவிருந்து ஆராதனையாக நடைபெறும். கொழும்பு உட்பட நாட்டில் சீர்திருத்த திருச்சபை ஆராதனை நடைபெறும் இடங்களில் விசேட ஸ்தாபக தின ஆராதனையாகவே நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  

ஒல்லாந்தர் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தியதுமன்றி தமது வர்த்தக நடவடிக்கைக்காக கிழக்கிந்திய கம்பனியை நடத்தினர். தீவிலுள்ள மக்களை சீர்திருத்தவும், கல்வி மற்றும் சமூக சேவைகள் மற்றும் மறை போதனை வழங்குவதற்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட ரீதியிலும் மிஷனரிமார்களின் வருகை தந்து தங்களது சேவையினை விஸ்தரித்திருந்தனர்.  

போர்த்துக்கேயர் கத்தோலிக்க திருச்சபையை இலங்கையில் ஸ்தாபித்ததைப் போல் ஒல்லாந்தர் வருகையோடு கிறிஸ்தவ மிஷனரிகளும் வருகை தந்து சீர்திருத்த ஆலயங்களை உருவாக்கினர். அதேபோல் ஆங்கிலேயரினால் எங்கலிக்கன் (இலங்கை திருச்சபை) பிரிவு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுங்கள்” (மத். 28- -: 19) என்று இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்கு ஏற்ப தேவ ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க மிஷனரிகள் உலகெங்கும் பரவிச்சென்று கிறிஸ்தவ ஆலயங்களை ஸ்தாபித்தனர்.  

மிஷனரிகளினால் “தேவ வார்த்தை எனும் விதை” பரிசுத்த வேதாகமப் போதனைகள் இலங்கை மண்ணில் விதைக்கப்பட்டது. 377வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட சீர்திருத்த சபை இன்று கனிதரும் ​விருட்சமாக முழுநாட்டிலும் வியாபித்துள்ளது.  

ஜோன் கெல்வின் கொள்கைவாத திருச்சபையாக சீர்திருத்த திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. பரிசுத்த வேதாகமத்தினால் நிரூபிக்க முடியாத எதையும் ஜோன் கெல்வின் ஏற்றுக் கொள்ளவில்லை. சீர்திருத்த சபையில் சீரான வேதவாசிப்பு, வேதவார்த்தைக்கு முக்கியத்துவமான செய்தி பரி. வேதாகமமே சகலத்திற்கும் விடை என்பதுடன், சம்பிரதாயம் சடங்காச்சாரத்தை துடைத்தெறிந்து விட்டு தேவவார்த்தையில் விசுவாசிகளை ஸ்திரப்படுத்துவதாகும். ‘தேவவார்த்தையே எண்ணத்தில் முதன்மையான இடத்தில் இருத்தல் வேண்டும்’ எனும் கொள்கையில் திருச்சபை கட்டப்பட்டுள்ளது.  

1662இல் முதன்முதலாக கொழும்பில் தமிழ் மொழியில் வேதாகமம் வாசிக்கப்பட்டு, வேத அறிவுரையும் வழங்கப்பட்டது. ஆனாலும் 1927ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வூல்வெண்டால் ஆலயத்தில் தமிழ் சபை உருவாகியது. அன்று முதல் இன்று வரை பல ஆலயங்களில் தமிழ் மொழியுடனான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.  

இத்திருச்சபையின் நிர்வாகம் மூப்பர் குழாமின் ஆளுகைக்குட்பட்டதாகும். இதன் இலச்சினை வெட்டப்பட்ட ஒரு மரத்தில் துளிர் விடும் தன்மையைக் காட்டுவதாகும். “திரும்பத் தழைக்கும்” எனும் பதம் மேல் விலாசமாகக் காணப்படுகிறது. “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு அது வெட்டிப் போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும் அதன் இளங்கிளைகள் துளிர்க்கும்” (யோபு 14:7) எனும் வசனத்தை வரைவிலக்கணமாகக் கொண்டு திருச்சபைகட்டப்பட்டுள்ளது.  

வெளிநாட்டு உல்லாச பயணிகளை ஈர்க்கும் இடங்களாக ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கட்டிடங்கள், கோட்டைகள் ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் பல கட்டடங்கள் சிதைவடைந்து விட்டாலும் சில கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கற்பிட்டி பழைமை மிகு டச் ஆலயம் இலங்கை சீர்திருத்த திருச்சபைக்கு மீளகிடைக்கப் பெற்றது தேவகிருபையாகும். யுத்தத்தினால் சிதைவுற்ற யாழ். டச் கோட்டையும் ஆலயமும் மீளக்கட்டப்பட நடவடிக்ைக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இன்றைய சூழ்நிலைகளில் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தேவனுக்குள் நாட்டின் சிறந்த பிரஜைகாக திகழ வேண்டும். அத்துடன் இவர்களின் வாழ்க்ைகயும் ஒரு முன்மாதிரியாக இருப்பதுடன், கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம், வேதவாசிப்பு, தியானம் அனுதினமும் வாழ்வில் காணப்பட வேண்டும்.

 

போல் வில்சன்

Comments