ரயில்வே வேலைநிறுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

ரயில்வே வேலைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்துக் கட்டமைப்பில் ரயில்வே துறை முக்கிய பங்காற்றுகிறது. மொத்த சனத்தொகையில் சுமார் 30 இலட்சம் பேருக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கும் ரயில்வே துறை இன்று முடங்கிப்போயிருக்கிறது.  

கடந்த பத்து நாட்களாகப் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது இந்த ரயில்வே. என்னதான் பாதை அபிவிருத்திகள் மேற்கொள்ளப் பட்டு பஸ் வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், ரயில்வே போக்குவரத்துதான் எல்லோருக்கும் வசதியாக இருக்கிறது. காரணம் குறித்த நேரத்தில் பயணத்தை ஆரம்பித்துக் குறித்த நேரத்தில் நிறைவுசெய்ய ரயில் போக்குவரத்தில் மட்டுமே சாத்தியம். அதனால்தான் கூடுதலான அலுவலகப் பணியாளர்கள் ரயிலையே நம்பியிருக்கிறார்கள். இன்று எல்லாமே முடங்கிக்கிடக்கின்றது. அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருப்பது மட்டுமல்லாது, புதிதாகப் பணிகளில் இணைய எதிர்பார்த்திருப்போரின் எதிர்பார்ப்புகளும் சூனியமாகி வருகின்றன. ஏனெனில், நேர்முகத் தேர்வுகள், நியமனங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கான கடிதங்கள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.  

கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் கடிதங்கள் ரயிலிலேயே அனுப்பப்படுகின்றன. பெரும்பாலும் ரயிலிலேயே அவை தரம் பிரிக்கப்படுகின்றன. அதுதான் கடிதங்களைக் கொண்டு செல்லும் ரயில்களுக்கு இரவு தபால் ரயில் என்ற பெயர்.  

இப்போது முதற்தடவையாக மிக நீண்டநாள் ஸ்தம்பித்துப்போகும் அளவிற்கு வேலை நிறுத்தம் இடம்பெற்று வருகிறது. ரயில்வே சங்கங்களின் கோரிக்ைககளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்ைக எடுக்கப்பட்டிருப்பதாகத் துறைசார்ந்த அமைச்சர் தெரிவித்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்குச் சங்கங்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக நாளாந்தம் இடம்பெறும் சுமார் 400 ரயில் சேவைகளில் சுமார் 15 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை அழைத்து இந்தச் சேவைகள் நடத்தப்படுகின்றன. ரயில்வே துறையில் தற்போது மொத்தமாக சுமார் 18 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் ஆற்றும் பணியானது சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கானது என்பதை மறந்துவிட்டுள்ளார்கள் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.  

பொதுப்பணி என்பது ஊதியத்தைவிட ஊழியத்தைக் கண்ணாகக்ெகாண்டது என்பதை இன்றைய அரச துறையினர் மறந்துவிட்டுள்ளதையே ரயில்வே வேலை நிறுத்தம் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு முன்பும் பல தடவை ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், இம்முறை கட்டுக்கடங்காதவாறு அவர்களின் போராட்டம்   நீடித்துச் செல்கிறது. அவர்களின் கோரிக்ைகயின்படி ரயில்வே துறையை ஒன்றிணைந்த சேவையிலிருந்து வரையறை சேவையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருக்கிறது. அவ்வாறு மாற்றும்போது சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படுவதற்கு வழியேற்படும். ஒன்றிணைந்த சேவையின்படி சம்பள உயர்வுகள் வழங்கப்படும்போது ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். அதனால், ஒரே துறையிலுள்ளவர்களுக்குப் பாகுபாடு ஏற்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என்பது முக்கியமான கோரிக்ைக. அடுத்தது, சாரதி ஆட்சேர்ப்பின்போது கூடுதல் திறமை கோரப்படக்கூடாது. இந்தக்ேகாரிக்ைக எந்தளவிற்கு நியாயமானது என்று தெரியவில்லை. இதுபற்றிச் சாரதி தொழிலுக்கு வரவிருப்பவர்களே கவலைப்பட வேண்டும். அதனைவிடுத்துச் சாரதியாகக் கடமையாற்றுவோருக்கு இதில் என்ன பிரச்சினை?  

அப்படியென்றால், அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத கோரிக்ைகயை முன்வைத்து அல்லது நியாயமற்ற கோரிக்ைகயை முன்வைப்பதன் மூலம் நாட்டை இக்கட்டுக்குள் தள்ளும் முயற்சியா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கின்றதா? என்பது அடுத்த கேள்வி.  

இந்தச் சந்தேகத்தினைப் புரிந்துகொண்டுள்ள அரசாங்கம், ரயில்வே துறையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மூன்றாந்திகதி வெளியிடப்பட்டுள்ளது.  

அத்தியாவசிய சேவை என்பது எந்த விதத்திலும் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்பட முடியாதது. மக்களின் உயிர் வாழ்வதற்குத் தேவையான சேவையென்பதால், அதில் இடையூறை ஏற்படுத்தவோ, தடுக்கவோ எந்த ஓர் ஊழியருக்கும் முடியாது. ஆனால், ரயில்வே ஊழியர்கள் அதனை மீறியே தற்போது நடந்துகொள்கிறார்கள். இதனால், ரயில்வே துறையில் இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்ைக எடுக்கப்போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க அறிவித்திருக்கிறார்.  

அரசாங்கம் இதனைக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிவித்திருந்தது. 2017இல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, இலங்கையிலுள்ள சகல ரயில் நிலையங்களையும் இராணுவத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று துறைசார்ந்த அமைச்சர் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இராணுவத்தினரை இந்தியாவிற்கு அனுப்பி தேவையான பயிற்சிகளை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.  

தற்போது ரயில்வே துறையைச் சுமுகமாக இயக்குவதற்கு இராணுவத்தைக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்ைகக்குப் பொதுமக்கள் தரப்பிலும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ரயில்வே ஊழியர்களின் போராட்டம் அரசியல் நோக்கங்கொண்டது என்பதைப் பொதுமக்களும் புரிந்துகொண்டிருப்பதால், இராணுவத்தினரைப் பணியில் அமர்த்தியேனும் ரயில் போக்குவரத்தைச் சீராக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.  

ஆனால், அதற்கும் ரயில்வே துறையினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால், பணி நீக்கம் செய்யப்போவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்ைகயை வாபஸ்பெற வேண்டும்; இராணுவத்தை அழைக்கும் யோசனையைக் கைவிட வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் புதிய கோரிக்ைகயாக உள்ளது. தங்களின் பழைய கோரிக்ைகயை அதாவது வேலை நிறுத்தத்திற்கான கோரிக்ைகயையும் மறந்துவிட்டுப் புதிதாக இந்தக் கோரிக்ைகயை முன்வைத்ததன் மூலம், அவர்களுடைய எதிர்பார்ப்பு வேறு என்பதையே புலப்படுத்துகிறது. சுருங்கற் சொன்னால், நியாயமான கோரிக்ைககளையும் மழுங்கடித்துக்ெகாண்டுள்ளார்கள் என்பதே உண்மை.  

ரயில்வே ஊழியர்களின் செயற்பாடுகளில் ஏற்கனவே பொதுமக்களுக்குத் திருப்தி இல்லாத நிலையே காணப்படுகிறது. சாரதிகள் மதுபோதையில் ரயிலை செலுத்தி கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சந்தர்ப்பங்களில், அவர்கள்மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்ைக எடுத்திருந்தார்கள். ஆனால், அவ்வாறு நடவடிக்ைக எடுக்கக்கூடாது என்று ரயில்களை இடைநடுவில் நிறுத்திவிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பின்னர், நடவடிக்ைக வாபஸ் பெறப்பட்டு ரயில் சேவை தொடர வழிவகுக்கப்பட்டது. ரயில் சாரதிகள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களாக இருந்துகொண்டு இவ்வாறு பொதுமக்களை இம்சிக்கும் நடவடிக்ைககளில் ஈடுபடுவது நியாயமானதுதானா? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்க வாய்ப்பில்லலை. ஏனெனில், சாரதி ஒருவர் குறைந்தபட்சம் ஒரு இலட்சமாவது சம்பளம் பெறுகிறார் என்கிறார்கள் விடயம் அறிந்தவர்கள்.  

மறுபுறம், ரயில் நிலையங்களில் பணியாற்றும் இதர ஊழியர்களும் பயணிகளிடம் பண்பாக நடந்துகொள்வதில்லை என்ற முறைப்பாடுகளும் உண்டு. பொதுவாகப் பயணச் சீட்டு வழங்கும் உத்தியோகத்தர்கள் பயணிகளை எடுத்தெறிந்து பேசுவதும் தேவையற்ற கேள்விகளைக் கேட்பதும் ரயில் பற்றி விசாரித்தால் உதாசீனமாகப் பதில் வழங்குவதும் ரயில்வே ஊழியர்களின் குணாம்சங்களாக உள்ளதென்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இதுபற்றி ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தாலும் எந்த நடவடிக்ைகயும் எடுப்பதில்லை என்கிறார்கள்.  

ஆக, வசதியான போக்குவரத்தாக இருந்தாலும், பயணிகளை வருத்தும் ஒரு துறையினராகவே ரயில்வே துறையினர் இன்று மாறியிருக்கிறார்கள்.  இலங்கையில் ஒரே கட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு போக்குவரத்தான ரயில்வே துறையை, அவ்வாறே தொடர்ந்து அரசாங்கத்தின் கீழ் ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு. நமது அண்டைய நாடான இந்தியாவில், ரயில்வே துறையைப் பரீட்சார்த்தமாகத் தனியார்மடுத்துவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருப்பதையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.  

தனியார்மயப்படுத்தப்பட்டால், இப்போது முரண்டுபிடிப்பதைப்போல் வேலை நிறுத்தம் செய்துகொண்டிருக்க முடியாது. அரசாங்கத்தைப்போன்று தனியார் நிர்வாகங்கள் மென்போக்ைகக் கடைப்பிடிக்கா தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.   

என்றாலும், கடந்த காலங்களில் வேலை நிறுத்தம் இடம்பெற்ற போது, அதனைத் தீர்த்து வைப்பதற்குப் பதில், அடக்கி வைத்த வரலாறுகளும் இலங்கையில் இல்லாமல் இல்லை. தற்போது கோரிக்ைககளை நிறைவேற்றுவதற்கு ஏதோ ஒரு வகையில் நடவடிக்ைக எடுத்திருக்கும்போது, ரயில்வே துறையினர் அடம்பிடித்துக்ெகாண்டிருப்பது பொதுமக்களைத் துன்புறுத்துவதாகவே கொள்ள வேண்டியிருக்கும். இதுவிடயத்தில், அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்ைகயைப் படிப்படியாகத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையேல், பொதுமக்களின் நலன்கருதி அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.  

விசு கருணாநிதி

Comments