கோட்டாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்களுக்கு அச்சுறுத்தல் எனப் புகார் | தினகரன் வாரமஞ்சரி

கோட்டாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்களுக்கு அச்சுறுத்தல் எனப் புகார்

காமினி வியாங்கொட, சந்திரகுப்த தேனுவர

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமைக்குச் சவால் விடுத்து வழக்குத் தாக்கல் செய்தவர்களுக்கும் அவர்களின் சட்டத்தரணிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.  

இதனையடுத்து அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைஎடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரட்ண, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. 

சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்திரகுப்த தேனுவர ஆகிய இருவருக்கும் அவர்களின் சட்டத்தரணிகளுக்கும் இவ்வாறு பாதுகாப்பு வழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.  

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான மனு கடந்த வெள்ளிக்கிழமை நிராகரிக்கப்பட்டதன் பின்னர், தமக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக அவர்கள் முறையிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை நீதிமன்றம் அறிவித்தவுடன் அது பற்றி மேன்முறையீடு செய்வது பற்றி தமது சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.(வி)

நமது நிருபர்

Comments