ஜனாதிபதி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு ஏற்பு | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு ஏற்பு

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை நாளை திங்கட்கிழமை (07) ஏற்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில், இதுவரை கட்டுப் பணம் செலுத்தியுள்ள சுயேச்சை வேட்பாளர்களையும் கட்சிகளின் செயலாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (06) சந்தித்துப் ​பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வேட்பு மனுக்களை ஏற்கும் தினத்தன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படவிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட 70 கட்சிகள் இருந்தபோதிலும், அவற்றில் 18 கட்சிகளே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வரை 33பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இதில் 15 பேர் சுயேச்சையாகக் களமிறங்குகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிவரை கட்டுப் பணம் செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் காலை ஒன்பது மணி முதல் முற்பகல் 11 மணிவரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். முப்பது நிமிடங்கள் ஆட்சேபனை தெரிவிப்பதற்காகக் கால அவகாசம் வழங்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். வேட்பு மனுக்களைக் கையளிப்பதற்கு வேட்பாளருடன் சேர்த்து மூவர் அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரம், வெளியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் திரையில் பார்வையிடுவதற்கு ஐவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் கூறினார்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று தேர்தல்கள் செயலக வளாகத்தில் உள்ள கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறைவழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கடமைகளுக்கென பொலிஸ், அதிரடிப்படையென சுமார் இரண்டாயிரம்பேர் அமர்த்தப்படுவர் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் களமிறங்கும் ஒரு தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளதாகக் கூறிய அவர், இதன் காரணமாகத் தேர்தல் செலவுகளும் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

ஏற்கனவே 4500 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், அது தற்போது ஐயாயிரம் மில்லியன் ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் களமிறங்கவில்லை. குறிப்பாக ஐக்கிய ​தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடவில்லை. மேலும், சுதந்திரக் கட்சியின் சார்பில் எந்தவொரு வேட்பாளரும் களமிறங்கவில்லை. அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவரோ, முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ களமிறங்காத ஒரு ஜனாதிபதி தேர்தலாகவும் இந்தத் தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றது.

அதேசமயம், ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் களமிறங்கும் முதல் ஜனாதிபதி தேர்தலாகவும் இந்தத் தேர்தல் விளங்குகிறது.

பொதுவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும் நோக்கில் பலர் சுயேச்சையாகவும் சிறிய கட்சிகளிலும் களமிறங்குவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர்ந்த ஏனைய சில கட்சிகளின் சார்பில் சில வேட்பாளர்கள் சுயேச்சையாகக் களமிறங்கத்  தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், குமார வெல்கம ஆகிய இருவரும் சுயேச்சையாகக் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர். இருந்தபோதிலும் கட்டுப் பணம் செலுத்திப் போட்டியிடும் வேட்பாளர்கள் வேறு ஒருவருக்காகப் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஆணைக்குழுவின் தலைவர் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும், ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் தமது சொந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடாது தேசிய மக்கள் முன்னணியின்சார்பில் போட்டியிடுகிறார். அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் அல்லாது அன்னம் சின்னத்தில் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்தியிருக்கிறார்.

முன்னொருபோதும் அரசியலில் தொடர்புபட்டிராத முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் புதிதாக உருவாக்கப்பட்ட தமது சகோதரர்களின் கட்சியின் சார்பில் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) போட்டியிடுகிறார். அதேநேரம், அவரது மற்றொரு சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எனவே, இந்த ஜனாதிபதி தேர்தல் பல்வேறு அரசியல் குழப்பங்களும் சர்ச்சைகளும் நிறைந்ததொன்றாகவே நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்புத் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதுடன் விசேடமாகத் தேர்தல் செயலக வளாகப் பகுதியில் இன்று முதல் கடும் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிக்கவென இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தவிரவும், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் சுய விருப்பின்பேரில் வருகை தருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார். (வி)

எம்.ஏ.எம். நிலாம்

Comments