தராதரம் பாராது அனைவருக்கும் பொதுவான சட்டம் பேண வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தராதரம் பாராது அனைவருக்கும் பொதுவான சட்டம் பேண வேண்டும்

எமது நாட்டின் சட்டவாட்சி செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் வெவ்வேறு விதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இன, மத பேதங்கள் மற்றும் தராதரம் பாராது அனைவருக்கும் பொதுவான சட்ட சமநிலையும், பொருளாதார சமநிலையும் பேணப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

இராணுவத்தினர் பீரங்கி தாங்கிய வாகனங்களுடன் பாதையில் பயணிப்பதில் மாத்திரம் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரதும் கொள்கைளையும் ஒரே மேடையில் வெளிப்படுத்தும் வகையில் மார்ச் 12 இயக்கம் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘மக்கள் மேடை’ விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். 

இலங்கையில் சட்டவாட்சி மனிதவுரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் அரச நிருவாகக் கட்டமைப்புகள் எவ்வாறு செயற்பட வேண்டும். அதற்கான திட்டங்கள் என்ன? உள்ளிட்ட நான்கு கேள்விகள் அநுர குமார திசாநாயக்கவிடம் பொது மக்களின் கேள்விகளாக மார்ச் 12 இயக்கம் எழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர்,

"எமது நாட்டில் சட்டத்தை உறுதிப்படுத்தலில் சட்டங்களில் உள்ள தவறுகளை நான் பார்க்கவில்லை. அரசியல்வாதிகளால் அது வீழ்ச்சியடைந்துள்ளது.

செல்வந்தர்களுக்கு வேறு நீதியும் வறுமையானவர்களுக்கு வேறு வேறு நீதி பேணப்படுகிறது. தராதரம் பாராது சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். தேசியப் பாதுகாப்பு என்பது உள்ளக ரீதியான மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் என வகைப்படுத்த முடியும். 

தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய பாதுகாப்புக்கும், பொருளாதார கொள்கைகளுக்கும் மற்றும் நாட்டுக்கும் அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை கைச்சாத்திடக்கூடாது. அனைவருக்கும் பொருளாதார சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும். 

உலகத்துடன் சிறப்பான கணக்கு வழக்குகளைப் பேண வேண்டும். ஆனால், அவை எமது கொள்கைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் என்பது சுதந்திரமாகச் செயற்படுவதும் நடமாடுவதுமாகும். எந்தவிதமான தீவிரவாதத்திற்கும் நாம் இடமளிக்க மாட்டோம். 

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் கடன் சுமை முக்கிய தாக்கம் செலுத்துகிறது. கடன் தான் நாம் எதிர்க்கொண்டுள்ள பிரதான பிரச்சினையாகவுள்ளது. 11 ட்ரில்லியன் கடன் எமக்குள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு ட்ரில்லியன் சொத்துதான் எம்மிடம் உள்ளது. பெற்றப்பட்ட கடன்களில் தேவையான சொத்துகள் உருவாக்கப்படவில்லை. 

மக்களின் வாழ்க்கைத்தரமும் அபிவிருத்தியும் வெவ்வேறானதாக உள்ளது. துன்பத்தை வியாபாரமாகச் செய்கின்றனர். அதனை துடைத்தெறிய வேண்டும். 

அரச நிறுவனங்களைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். நான் மில்க்ரோ நிறுவனத்தை அமைச்சராக பொறுப்பேற்ற போது 50 மில்லியனுடனே பொறுப்பேற்றேன். ஆனால், 200 மில்லியனுடன்தான் அதனைக் கையளித்தேன் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments