மனிதவுரிமை, தேசியப் பாதுகாப்பில் தலையீடுகள் இருக்கவே கூடாது | தினகரன் வாரமஞ்சரி

மனிதவுரிமை, தேசியப் பாதுகாப்பில் தலையீடுகள் இருக்கவே கூடாது

நாட்டின் சட்டவாட்சியையும், ஜனநாயகத்தையும், மனிதவுரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்ட அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடுகள், அழுத்தங்களிலிருந்து சட்டவாட்சியை நிலைநாட்ட அரச நிறுவனங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரதும் கொள்கைளையும் ஒரே மேடையில் வெளிப்படுத்தும் வகையில், மார்ச் 12 இயக்கம் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் நேற்று ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.  

கேள்வி: இலங்கையில் சட்டவாட்சி, மனிதவுரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் அரச நிறுவன கட்டமைப்புகள் எவ்வாறு செயற்பட வேண்டும். அதற்கான திட்டங்கள் என்ன?  

கேள்வி: ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கடன் சுமை, வரவு – செலவுத்ட்டத்தில் காணப்படும் வேறுபாடு, துண்டு விழும் தொகை மற்றும் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணிப்பதற்கான திட்டங்கள் என்ன?  

கேள்வி: இலங்கையின் தனித்துவத்தைக் கட்டியெழுப்பவும் இலங்கையர் என்ற அடையாளத்தை இன, மதங்களுக்கு அப்பால் உறுதிப்படுத்தவும் உள்ள திட்டங்கள் என்ன?  

கேள்வி: நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 21ஆம் நூற்றாண்டில் புதிய மனிதர்களை உருவாக்க உகலம் தயாராகிவருகிறது. அதன் அடிப்படையில் இலங்கைக்குத் தேவையான மனிதவர்களை எவ்வாறு உருவாக்க வேண்டும்?  

இவ்வாறு நான்கு கேள்விகள் சஜித் பிரேமதாசவிடம் பொது மக்களின் கேள்விகளாக மார்ச் 12 இயக்கம் எழுப்பியது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாச,  

சட்டவாட்சியையும், மனிதவுரிமையையும், தேசியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பல செயற்பாடுகள் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை அரசியலிலிருந்து விடுவிக்க வேண்டும்.

அத்தகைய அரச நிறுவனங்களை சுயாதீனமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும்.  

நீதியை நிலைநாட்டும் நிறுவனங்களில் அரசாங்க மற்றும் தனிநபர் தலையீடுகளை நாம் பார்க்கின்றோம். அத்தகைய நிறுவனங்களைப் பலர் தவறாகப் பயன்படுத்த பார்ப்பதுடன், அழுத்தத்தையும் கொடுக்கின்றனர். மனிதவுரிமைகளைப் பாதுகாக்கும் போது அனைத்து மக்களும் சமமான நீதியைப் பெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.   

தேசிய பாதுகாப்பை இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் மாத்திரம் உறுதிப்படுத்த முடியாது. இன, மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் நீக்கப்பட்டு மனிதவுரிமைகளுடன் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளையும் சமமாக உறுதிப்படுத்த வேண்டும்.  

வேலைத்திட்டங்களை உருவாக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கும் பலனுள்ளதாக இருக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை உறுதிப்படுத்தி நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.  

எமது நாடு சிக்கியுள்ள கடன் பொறியிலிருந்து நாட்டை மீட்டுச் சாதாரண மனிதர்களது துன்பம் வாழ்க்கையை நீக்க உற்பத்தி பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.  

தகுதியானவர்களுக்குத் தகுதியான இடங்கள் நாம் கொடுப்போம். கடன் சுமையை குறைக்கவும் துண்டுவிழும் தொகையைக் குறைக்கவும் தேவையான விடயங்களை தகுதியுடையவர்கள் மூலம் செய்வோம்.  

பொருளாதாரத்தை மேம்படுத்தும் போது அரச உரிமை இருக்க வேண்டும். கூட்டு உரிமையையும் வளப்படுத்த வேண்டும். வெளிநாட்டு கடனைப் பெற்றால் அதனை மூலதனக் கடனாகப் பெற வேண்டும். இது சன சமூகத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  

இனம், மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் தோற்கடிக்கப்பட்டு அடிப்படைவாதத்திற்கு இடமளிக்காது செயற்பட வேண்டும். அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒற்றிணைய வேண்டும். அனைவரும் ஒரே இலக்கிற்கு வர முடியும் என்றால், இன, மத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகள் தோற்கடிக்கப்படும்.   நாட்டை ஆளும்போது அதனை சேவையாக கருத வேண்டும். அரச நிர்வாகம், தனிநபர்களுக்கும், ஓர் இனம், மதங்களுக்கு அப்பால் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒருமித்த நாட்டில் அனைத்தின மக்களும் சமமாக சமநீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் முழுமையான அதிகாரப் பரவலாக்கல் செய்யப்படும் என்றார்.

நமது நிருபர்

Comments