விமானத்தில் கண்டெடுத்த 1.2 மில்லியன் பணத்தை ஒப்படைத்த முன்மாதிரி ஊடகர் | தினகரன் வாரமஞ்சரி

விமானத்தில் கண்டெடுத்த 1.2 மில்லியன் பணத்தை ஒப்படைத்த முன்மாதிரி ஊடகர்

கொழும்பிலிருந்து கனடா சென்ற இலங்கை தமிழர் ஒருவர், விமானத்தில் விட்டுச் சென்ற பன்னிரண்டு இலட்சம் ரூபாய் பணத்தைக் கண்டெடுத்து மீள ஒப்படைத்த ஊடகவியலாளர் ஒருவரை கனேடிய தூதரகம் நற்சான்று வழங்கி கௌரவித்துள்ளது. குறித்த விமானம் சென்னையிலிருந்து கொழும்பு வந்தபோதே இந்த ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாள் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி 2019. நேரம் காலை 5.55சென்னையிலிருந்து கொழும்பு நோக்கி (கட்டுநாயக்க) செல்லும் ஏயர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறிய எமது கதாநாயகன், அவருக்குரிய 31எப் இலக்க இருக்கையில் அமர்ந்தார். அவ்வரிசையில் வேறு பயணிகள் யாரும் பயணிக்கவில்லை. விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் அவரின் ஆசனத்தின் முன்னாலுள்ள பத்திரிகைகள் பாதுகாப்பு ஆலோசனைகள் வைக்கப்படும் பையில் பத்திரிகைகள் ஏதேனும் உண்டா என கையை விட்டுப் பார்த்தார். அப்போது அதில் பணப்பையொன்றை கண்டார். அதில் கனடா டொலர் உள்ளிட்ட பெருமளவு பணம் காணப்பட்டது.  

தனிப்பட்ட பயணமொன்றை சென்னைக்கு மேற்கொண்ட பின்னர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த அவர் சிலுமின பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தாரக விக்ரமசேகர ஆவார். அந்த பணப்பையை கையிலெடுத்த தாரக விமானப் பணிப்பெண்ணிடம் கனடா நாட்டவரோ அல்லது கனடா நாட்டுடன் தொடர்புடைய யாரேனும் விமானத்தில் உள்ளார்களா? என வினவினார். ஆனால், அவர் சிறிய விசாரணையொன்றையே மேற்கொண்டார். ஒரு புறம் அவருக்கு அதனை செய்வதற்கு நேரமும் இருக்கவில்லை. ஏனென்றால், பயணிகளுக்கு உணவு வழங்க ஒன்றரை மணித்தியாலமே இருந்தது. அந்தக் குறுகிய காலத்துக்குள் உணவுகளை வழங்கி அவற்றை சுத்தம் செய்யவும் வேண்டும். அவ்வேளையில் சீரற்ற கால நிலையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்ததால், விமானத்தில் ஏற்பட்ட குலுங்கல் காரணமாக விமானப்பணிப்பெண்கள் சிறிது நேரம் உணவு வழங்குவதையே நிறுத்தியிருந்தார்கள். விமானம் காலை 7.55க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தது. அவர் பணப்பையுடன் விமானத்திலிருந்து இறங்கினார். பெருந்தொகை பணம் இருப்பதால் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது சரியல்ல என எண்ணினார். முதலில் விமான நிலைய மலசலகூடத்துக்குச் சென்று அதில் போதைப்பொருட்களோ சட்ட விரோத ஏதேனும் உள்ளதா என ஆராய்ந்தார். அவ்வாறு ஏதேனும் இருந்தால், வீணான சந்தேகம் ஏற்படும் என்பதால், அவர் அவ்வாறு ஆராய்ந்தார். அதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லாததால் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.  

அப்பணப்பை கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு சொந்தமானதென அதிலிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் மூலம் அறிந்து கொண்டார். அதில் அவரது முகவரி இருந்தது.  

கனேடிய டொலர், அமெரிக்க டொலர், இந்திய ரூபாய்கள், கிரடிட்காட், டெபிட் காட், 6வெப் காட்கள் என்பன காணப்பட்டன. அவற்றின் மொத்தப் பெறுமதி 1.2மில்லியன் (12இலட்சம்) எனப் புரிந்தது. தாரக முதலில் செய்தது எயார் இந்தியா விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அறியத் தந்ததாகும். ஆனால், அவர்களிடமிருந்து சாதகமான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. உலகெங்குமுள்ள அவர்களின் காரியாலய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொடர்புகள் பற்றி மாத்திரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள். ஏதேனும் தகவல் கிடைத்தால் அறிவிப்பதாகவும் கூறினார்கள். பின்னர் உடனடியாக கடிதமொன்றை கனடாவுக்கு தபால் மூலம் அனுப்பினார்.  

இரண்டு வாரங்கள் கடந்தும் எதிவித பதிலும் கிடைக்காததால், தாரக கனடா உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு எழுத்துமூலம் அறியத் தந்தார். மறுநாளே பிரதி உயர்ஸ்தானிகர் தாரகவை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டார். அதுபற்றி விசாரிப்பதாகப் பிரதி உயர்ஸ்தானிகர் அறிவித்தார்.  

அன்று மாலை கனடாவிலிருந்து மின்னஞ்சல் தகவலொன்று கிடைத்ததோடு அது அவர் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலாக அமைந்திருந்தது. அதில் தாரகவின் நேர்மையைப் பாராட்டியதோடு அப்பணப்பையை இந்நாட்டில் எட்டியாந்​ேதாட்டையிலுள்ள தனது நண்பரிடம் வழங்குமாறு விரைவில் இலங்கை வரவுள்ள தனது மாமியாரினூடாகப் பணப்பையை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்திருந்தார்.    அதேவேளை, கனடா உயர்ஸ்தானிகர் காரியாலயத்திலிருந்து பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன. பணப்பையின் உரிமையாளருக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க உயர்ஸ்தானிகராலயத்தால் இயலுமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். அதன்படி கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கனடா உயர் ஸ்தானிகராலயத்துக்குச் சென்ற தாரக விக்கிரமசேகர கனடா பிரஜைக்கு சொந்தமான பணப்பையை இந்நாட்டிலுள்ள உறவினரான நண்பரிடம் கையளித்தார்.  

உயரிஸ்தானிகர் காரியாலய கொன்சியூலர் அதிகாரிகள் முன்னிலையிலேயே கையளிக்கும் நிகழ்வு நடந்தது. உயர்ஸ்தானிகராலய சட்ட திட்டங்களுக்கு அமைய அதன் அதிகாரிகள் விசேட விழாக்களின்போது அல்லது அரச விழாக்களின்போது மாத்திரம் புகைப்படம் எடுக்க முடியும். அதனால், அவர்கள் புகைப்படத்திற்குத் தோற்றவில்லை. ஆனால், குறிப்பிட்ட பணப்பையை அவர்கள் முன்னிலையில் ஒப்படைப்பதாக உரிமையாளர்களுக்கு அச்சந்தர்ப்பத்திலேயே கடிதம் மூலம் அறிவித்தார்கள்.  

உயர்ஸ்தானிகராலயத்தினர் தாரக விக்ரமசேகரவை பாராட்டியதோடு அவ் அதிகாரிகள் இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறான சம்பவம் இந்நாட்டில் இடம்பெறவில்லையென்றும் கூறினார்கள்.  

நமது நிருபர்

Comments