நேர்மையான அரசியல் தலைவர் சஜித் | தினகரன் வாரமஞ்சரி

நேர்மையான அரசியல் தலைவர் சஜித்

சிவன் அறக்கட்டளை இயக்குனரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகமுமான கணேஷ் வரன் வேலாயுதம் ஞாயிறு தின கரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி

சாதாரண அமைச்சரைச் சந்திப்பது கடினம். அவ்வாறு சந்தித்தாலும் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த ஒரு சாதாரண வாக்காளர் அந்த அமைச்சரைச் சந்தித்துப் பேச முடியாத சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் வாழும் உலகில் எனினும் தற்போதைய கடினமான வேலைப் பழுவுக்கும் மத்தியில் எங்களுடைய மக்கள் முன்னேற்றக் கூட்டணியினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார் சஜித் பிரேமதாஸ. அவருக்ேக எமது ஆதரவுகள் என்றார் சிவன் அறக்கட்டளை இயக்குனரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகமுமான கணேஷ்வரன் வேலாயுதம். 

தமிழ்தேசியக்கூட்டமைப்பே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தொடர்பான நிலைப்பாடுகளை அறிவிக்காமல் அடக்கி வாசிக்கும் சந்தர்ப்பத்தில் உங்கள் கட்சியான மக்கள் முன்னேற்றக் கூட்டணி முண்டியடித்துக் கொண்டு முதன் முதலாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான காரணம் என்ன?  

கோத்தபாய ராஜபக்க்ஷ யார் என்பதை நாங்கள் தமிழ் மக்களுக்கு கோடிட்டுக் காட்டத் தேவையில்லை. ஏனென்றால் உள்ள வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர் சஜித் என்பதை தமிழ் மக்கள் எல்லோரும் தீர்மானித்து விட்டார்கள். அது மட்டுமல்ல, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மலையகம், கொழும்பு உள்ளிட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் சஜித் பிரேமதாசதான் நல்லவர் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் கட்சியான மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் தலைவர், முன்னாள் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் மோகனதாஸ் தலைமையில் ஒன்று கூடிய போது நாங்கள் எல்லோரும் ஏகமானதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம்.  

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற சொல் முதன்மையானதாக இருந்தாலும் தமிழ் மக்கள் யுத்தத்தின் கஷ்டத்தை கனதியாக அனுபவித்து விட்டார்கள். அவர்களுடைய வாக்குப் பலத்தை சரியாகப் பாவித்து தற்போதைய  அரசாங்கம் ஒரு நிம்மதியாக வாழக்கூடிய ஒரு இடத்தில் இருக்கிறது. ஆகவே தொடர்ந்து அதைத் தக்க வைக்க வேண்டும். அதில் இருந்து மேலும், கல்வி நடவடிக்கை, அபிவிருத்தி, பொருளாதாரம் போன்ற விடயங்களில் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து பங்கேற்று உழைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.  

சஜித் துடிப்புடன் வேலை செய்யக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர்.  அடி மட்ட மக்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். கிராமத்திலுள்ள அடி மட்ட மக்கள் மத்தியில் அதிகளவு செல்வாக்கு அவருக்கு இருக்கிறது. நடுநிலையாகச் சிந்திக்கக் கூடியவர்.  

நாங்கள் எங்களுக்காக அவரிடம் எதையும் கேட்வில்லை. எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் உண்மையிலேயே ஒரு நேர்மையான அரசியல் தலைவராகத் தென்படுகின்றார். நாங்கள் நேர்மையான வழியில் சென்று எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நம்புகின்றோம்.  

நீங்கள் சஜித் பிரேமதாச வை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் மக்கள் தொடர்பான எவ்வகையிலான கோரிக்கைகளை முன் வைத்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டீர்கள். அந்த பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமாக கூற முடியுமா?  

30-.9. 2019 அன்று இரவு 9.15 அளவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது இல்லமான ரோயல் பார்க்கில் அமைந்துள்ள வீடமைப்பு கட்டிடத் தொகுதிக்கு வருமாறு கோரியிருந்தார்கள். அந்த வகையில் உரிய நேரத்துக்கு ஒழுங்கு முறையாக இயங்குபவர் என்ற அடிப்படையில் நேரம் தவறாது உரிய நேரத்துக்கு நாங்கள் அவர் இல்லம் சென்றோம்.  

அவர் வீடு பெரியதாக இருக்க வேண்டும் எனவும் அவரைச் சந்திக்கும் முன்னர் பாதுகாவல் அதிகாரிகளின் பாதுகாப்பு அனுமதி நடவடிக்கைகளையும் கடந்து தான் அவரை சந்திக்க வேணடும் எனவும் மனதில் எண்ணியிருந்தேன். ஆனால் அவர் எல்லோரையும் போல் ஒரு சாதாரண மனிதனாக எளிமையான வீட்டிலும், எந்தவிதமான பாதுகாப்பு கெடுபிடிகளுமின்றி இருந்தார்.  

ஏனென்றால் ஒரு சாதாரண அமைச்சரைச் சந்திப்பது கடினம். அவ்வாறு சந்தித்தாலும் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த ஒரு சாதாரண வாக்காளர் அந்த அமைச்சரைச் சந்தித்துப் பேச முடியாத சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் வாழும் காலகட்டத்திலேயே நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனினும் அவர் தற்போதைய கடினமான வேலைப் பழுவுக்கும் மத்தியில் எங்களுடைய மக்கள் முன்னேற்றக் கூட்டணியினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியமை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  

அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பாக உங்களுக்கு என்ன உறுதி மொழிகளை வழங்கினார்?  

வாய்மொழிமூலமோ அல்லது எழுத்து மூலமோ பேசி எங்களால் செய்யக் கூடியதை குழப்பாமல் செய்வது தான் எங்களுடைய திட்டமாக இருக்கிறது.  நாங்கள் எங்களுடைய சொந்தப் பணத்தை கொடுத்துத்தான் மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றோம்.   எனினும் கடந்த நான்கரை ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்கின்றோம். வெள்ளை வேன் கடத்தல் அச்சுறுத்தல் இன்றி நாங்கள் வாழ்கின்றோம். அது தொடர வேண்டும். சில கட்சிகள் அவர்களுடன் பேரம் பேசப் போகின்றோம். இவர்களுடன் பேரம் போசுகின்றோம் என்று கூறுவார்கள். இதன் உண்மைத் தன்மை யாதெனில் அதனால் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் இலாபம்தான்.

இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் ஒன்றும் ஈடேறவில்லை. ஒரு மாற்றம் வரவில்லை. அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய தீர்வை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றுக்கு வடபுல மக்கள் அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு இணங்க நாடு பிளவுபடாமல் நாட்டின் இறையாண்மையுடன் உச்ச அதிகாரத்தை வழங்குவேன் என்று எம்மிடம் தெரிவித்தார். எம்முடன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் உரையாடிவர். அதனைச் சற்று நிறுத்தி விட்டு தந்தையின் ஆட்சி காலத்தில் கூறியது போன்று தமிழ் மொழில் நாடு பிளவு படாமல் எல்லாம் தருவேன் என்று கூறினார்.  

எதிர்காலத்தில் இனம் மதம் போன்ற முரண்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று உறுதிப்படத் தெரிவித்தார். சிறுபான்மை என்ற சொல்லுக்கு இடம் இல்லை. எல்லா மனிதர்களும் சமம். எல்லோரும் ஒரு நாட்டு மக்கள் என்ற உயர்ந்த நிலையையும் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர் இம்ராகானின் தலைமைத்துவப் பண்புகளைப் போன்று தானும் ஒரு புதுயுகம் ஒன்றை உருவாக்குவதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் பாடுபடப் போவதாகவும் பேச்சுவார்த்தையின் போது எம்மிடம் தெரிவித்தார்.  

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமாசவிடம் வேறு என்ன தேவைகளை முன்வைத்தீர்கள்?  

எங்களுடைய நாடு நீர் வளமுள்ள நாடு. அதை நாங்கள் சரியாகச் செய்யவில்லை. வட மாகாணத்தில் ஊழல்கள் அதிகரித்துள்ளன. இந்த ஊழல் மோசடிகளில் அதிகாரிகளும் துணை போய் இருக்கின்றார்கள். 

இந்த ஊழல் அதிகரித்த வண்ணமிருந்தால் அடுத்த ஐந்து வருடங்களும் இதே மாதிரித்தான் செல்லப் போகின்றது. இரணைமடு விடயம் தொடர்பாக அவரிடம் சுட்டிக் காட்டினேன். யாழ்ப்பாணத்திலும் அப்படி நடைபெறுகின்றதா என்று ஆச்சரியத்துடன் எம்மிடம் வினவியதோடு எதிர்காலத்தில் இப்படியான ஊழல் மோசடிகளுக்கு தான் இடமளிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். உண்மையிலே இவரது வருகையுடன் வட மாகாணத்தில் ஊழலற்ற ஆட்சியை நிறுவுவார் என்று நாங்கள் திடமாக நம்புகின்றோம்.  

நீங்கள் வட புலத்தில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்ன?  

யுத்தங்கள் இடம்பெற்ற நாடுகளான யப்பான், ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் இன்னும் இருக்கிறது. நாங்கள் அந்த நாட்டில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளன. நாங்கள் தேவையில்லாமல் நெருக்கடிகளை எதிர்நோக்காமல் எங்களை நாங்கள் வளர்த்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். தேவையற்ற விடயங்களுக்காக கால நேரத்தைப் பேசி பேசி வீணடிப்பதை தவிர்த்து விட்டு எமது சமூகத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவில்லை. எமது வடபுல மண்ணை ஜப்பானாகவும் ஜெர்மனாகவும் எம்மால் மாற்றியமைக்க முடியும். சகல வளங்களும் இருக்கின்றன. பொலிஸ், காணி அதிகாரங்களை விட சகல அதிகாரங்களும் எமக்குள்ளன.

எம்முடைய கல்வி பின்னடைவில் இருக்கின்றது.  விளையாட்டுத் துறையில் பெரியளவில் கவனம் செலுத்துவதில்லை. எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாங்கள் செயற்பட வேண்டும். எமது எதிர்காலத்தை அரசியலுக்காக மக்களை உசுப்பேத்தி அவர்களின் சிந்தனைகளை வேறு திசைகளுக்கு மாற்றியமைப்பதை விடுத்து கல்விக்காக சிந்தனைகளைத் தூண்டக் கூடிய வகையிலான தம் பிரதேசத்தில் புதிய செயற் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.. அதற்காக நாங்கள் எல்லோரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். கல்வி அனைவருக்கும் சமம் என்ற வகையில் சகல மாணவர்களும் சமமான கல்வியை பெற வேண்டும் என்பது பேச்சளவில் இல்லாமல் உண்மைக்கு உண்மையாக செயற்படுத்தும் போது எமது இலக்கை இலகுவாக அடைந்து கொள்ளலாம்.  

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு யாழ்ப்பாணத்தில் எத்தகைய அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றீர்கள்?  

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக நாங்கள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தயாரா இருக்கின்றோம். அதேவேளை தமிழ் மக்களுடைய உள்ளத்தை வசீகரித்துக் கொண்ட பிரதி அமைச்சர் பாலித தேவப்பெருமவும் எமது பகுதிக்கு வருகை தரவுள்ளார். இப்படி எங்களுடைய பிரசார முன்னெடுப்புக்களுக்கு பக்கபலமாக உதவி செய்வதற்கு பல அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கொள்ளவுள்ளனர்.  

இக்பால் அலி   

Comments