மக்கள் நிம்மதியையே தேடுகிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் நிம்மதியையே தேடுகிறார்கள்

நாட்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பது நிம்மதியையும், அமைதியையுமே ஆகும். எவ்வளவு செல்வம், வசதிகள் நிறைந்திருந்த போதும் மக்களிடம் நிம்மதி இல்லாது போனால், அமைதி காணப்படாவிட்டால் துயரக் கடலில்தான் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. நாம் முன்னெடுக்க வேண்டிய முதற்பணி மக்களிடம் அமைதியை ஏற்படுத்தி நிம்மதிச் சூழலை உருவாக்குவது தான். இந்த நிம்மதியை பெற்றுத்தரக் கூடியவராக நான் பார்ப்பது சஜித் பிரேமதாஸவையே ஆகும் என முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக இருந்தவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தினகரன் வார மஞ்சரிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 41 நாட்களே உள்ள நிலையில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை உரியமுறையில் அடையாளம் காண வேண்டியதொரு நிலையில் நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டு வரும், பள்ளிப் பருவத்திலிருந்தே அரசியல் செய்யத்தொடங்கிய முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை வாரமஞ்சரிக்காக நேர்காணலை கண்டோம். அன்னார் ஆழ்ந்த அரசியல் புலமை மிக்கவர். அவசரப்பட்டு பிழையான தகவல்கள் வெளிவரக் கூடாது என்பதில் உறுதியுடன் இயங்குபவர். 

அன்னாருடனான நேர்காணல் விபரம் வருமாறு: 

கேள்வி: இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்: இன்று மக்கள் சம்பிரதாய அரசியலிலிருந்து தூரவிலகிச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. சம்பிரதாய அரசியலை மக்கள் வெறுத்து நிராகரித்துள்ளனர். சிறுபான்மைச் சமூகங்கள் கூட மிகக் கஷ்டத்துடனேயே காணப்படுகின்றனர். இன ரீதியில் புறக்கணிக்கப்படுவதாக சிறுபான்மை மக்கள் கருதுகின்றனர். சமமான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றனவா? என்ற கேள்வி இதன் மூலம் எழுகின்றது. 

முதலில் மக்கள் நிம்மதியை எதிர்பார்க்கின்றனர். சிறுபான்மை மக்கள் முதலில் எதிர்பார்ப்பது நிம்மதியான சூழ்நிலையைத்தான். கடந்த காலங்களில் எங்கு பார்த்தாலும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டிருந்தனர். தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மனநிலை வேதனை தரக் கூடியதாகவே காணப்பட்டது. தாங்கள் புறந்தள்ளப்படும் சமூகங்கள் என்ற மனவிரக்தியையே காண முடிந்தது. 

இனிமேலும் நாம் ஏமாற முடியாது. தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நிம்மதியும், அமைதியுமே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. நீண்ட காலமாக மக்கள் நிம்மதி இழந்த நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ராஜபக்ச ஆட்சியில் சிறுபான்மை மக்கள் அச்சம் நிறைந்த காலமாகவே பார்த்தனர். கோத்தாபயவின் செயற்பாடுகள் சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்துவதாகவே காணப்பட்டது. 

இன்று மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிம்மதியை, அமைதியை பெற்றுத்தரக் கூடியவர் சஜித்பிரதேதாஸவா? அல்லது கோத்தா பய ராஜபக்சவா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் நிம்மதியிழந்து வாழ வேண்டுமா, அமைதியற்று பயந்து பயந்து காலம் கடத்த வேண்டுமா என்பது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இன்று மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். மாற்றம் வரும்? என்ற சந்தேகத்திலேயே மக்கள் வாழ்த்து கொண்டிருக்கின்றனர். 

சரியான முடிவுக்கு வரவேண்டிய தருணம். இனியும் ஏமாற முடியாது. இளிச்ச வாயர்களாக இருக்க முடியாது. எமக்கு நிம்மதியை பெற்றுத்தரக் கூடியது சஜித் முகமா கோட்டா முகமா என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும். வாக்குறுதிகளை நம்பி தொடர்ந்தும் ஏமாறமுடியாது என்பதை உணர்ந்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். 

கேள்வி: ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்.? 

பதில்: சஜித் பிரேமதாஸ சாதாரண மக்களிலிருந்து எழுத்துவந்த ஒருவராகவே பார்க்கின்றேன். மக்களைப் பற்றியே 24 மணிநேரமும் சிந்திக்கும் ஒருவராகவும் மக்களை துன்பக்கடலிலிருந்து மீட்க வேண்டுமென்ற சிந்தனைகொண்டவராகவுமே நோக்கமுடிகிறது. அவரது வேலைத்திட்டத்தை பார்க்கும் போது எவராலும் அவரை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை உற்று நோக்கினால் பேதமற்ற சேவையையே காணலாம், வடக்கு கிழக்கை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை தெற்கில் போன்றே வடக்கு கிழக்கிலும் வீடமைப்புத் திட்டங்களை அமைத்து. சிறுபான்மை சமூகங்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றார். 

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உட்பட நாட்டு மக்கள் இன்று நம்பிக்கைக்குரிய தலைவர் ஒருவரையே எதிர்பார்க்கின்றனர். தங்கள் எதிர்பார்ப்புகளை எட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற்றுத்தரக் கூடியவரையே எதிர்பார்க்கின்றனர். சஜித் பிரதேசதாஸ மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை சமீபகாலமாக உணரமுடிகிறது. நம்பிக்கைக் குரிய தலைவராகவே எம்மால் சஜித்தை பார்க்க முடிகிறது. ஏற்றத்தாழ்வு, பாரபட்சமற்ற இனமத மொழி பேதமின்றி சகல சமூகங்களையும் ஒரே கண்ணால் பார்க்கக்கூடிய நேர்மையான அரசியல் தலைவராகவே அவரை எம்மால் பார்க்க முடிகிறது. எமது மக்களுக்கு நல்ல தொரு எதிர்காலத்தை அவரால் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் காணப்படுகிறது. 

கேள்வி: இந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பை எந்த அளவுகோல் கொண்டு அளந்து கொண்டுள்ளீர்கள்? 

பதில்: அவரது செயற்பாடுகளை நான் நீண்டகாலமாகவே அவதானித்து வருபவன். சஜித்திடம் இனம், மதம், மொழி என்ற பேதமை கிடையாது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று எந்தச் சமூகத்தையும் அவர் பிரித்துப்பார்ப்பதில்லை. 

அனைவரையும் இந்த நாட்டின் பிரஜைகளாகவே நோக்குகின்றார். இனம், மதம், மொழி கடந்து மனிதர்கள் என்ற அளவுகோல்தான் அவரிடம் காணப்படுகின்றது. வறுமைக்கோட்டில் சிக்கியுள்ள மக்களை அதிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணக்கருவை அவர் கொண்டிருக்கின்றார். 

தெற்கில், மட்டுமல்ல வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் இந்த வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றார். இதுதான் அவரிடம் காணப்படக்கூடிய சிறப்பான பண்பாடும் தனது தந்தை காட்டிய அந்தப் பாதையில் அவர் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மக்களின் மனங்களை புரிந்து கொண்ட ஒரு தலைவராகவே சஜித்தை என போட முடிகின்றது. 

அவர் பௌத்தனாக இருந்த போதும் ஏனைய மதங்களையும் மதிக்கின்ற ஒருவர். மத விழுமியங்களை சரியாக பின்பற்ற வேண்டும் என்ற எண்ணப்பாட்டைக் கொண்டவர். உண்மையான பௌத்தன் ஒருபோதும் ஏனைய மதங்களை புறக்கணிக்க முடியாது. ஏனைய மதங்களை மதிக்க வேண்டும், ஏனைய மதங்களுக்கு உரிய இடமளிக்கப்பட வேண்டும் என்ற உண்ணத இலட்சியத்தைக் கொண்டவர் இவற்றைத்தானே மக்கள் எதிர்பார்ப்பது. 

கேள்வி: இந்த ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்ன செய்தியை கூறவிரும்புகின்றீர்கள்? 

பதில்: இந்த விடயத்தில் நான் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பிரித்துப்பார்க்க விரும்பவில்லை. அனைவரையும் இலங்கை மக்கள் என்ற கோணத்திலேயே நோக்குகின்றேன். மக்கள் கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும், எமது கலாசார பாரம்பரியங்களை, மத விழுமியங்களை பின்பற்றுவதில் எந்தவொரு மதத்தவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். 

நல்லாட்சியிலும் குறைபாடுகள் இல்லாமலில்லை ஆனால் நன்மைகளையும் மறுக்க முடியாது தகவலறியும் உரிமை, உட்பட பல விடயங்களையும் நோக்க வேண்டும். அரசின் பயணம் ஜனாதிபதியின் சில செயற்பாடுகளால் குழம்பியது. கயிறிழுப்புச் செயற்பாடுகளால் நெருக்கடிநிலை ஏற்பட்டது. இது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.  

இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்து எதிர்காலத்தில் உறுதியான ஆட்சியை உத்தரவாதப்படுத்த இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சஜித் பிரேமதாஸவின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் தேசத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன். முஸ்லிம் சமூகம் கடந்த காலத்தை மனதில் கொண்டு எதிர்காலத்தில் நிம்மதியைத் தேடித் தரக்கூடிய யுகத்தை எட்டுவதற்கு சரியான முடிவை எடுக்க முன்வர வேண்டும். நாம் மீண்டும் கை சேதப்படக்கூடிய நிலைமைக்குள் சிக்கி விடமுடியாது என்பதை வலிறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.  

நாளைய விடியலுக்காக நாமனைவரும் இனம், மதம், மொழி கடந்து ஒரே அணியில் ஒன்றிணைவோம் என்ற அழைப்பை விடுவிக்கின்றேன்.   

எம்.ஏ.எம். நிலாம்   

Comments