அமெரிக்கா: சுயபால் சேர்க்கையாளர்களுக்கு சொர்க்க பூமி அல்ல! | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்கா: சுயபால் சேர்க்கையாளர்களுக்கு சொர்க்க பூமி அல்ல!

அப்போது காலை பத்து மணி இருக்கும். ஆனால் வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஏதோ கதிர்காமம், அநுராதபுரத்தில் இருப்பதுபோன்றதொரு உணர்வு. தெற்காசிய பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு வெயிலொன்றும் புதிது அல்ல என்றாலும் அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டனில் நான் அப்படியொரு வெயிலை எதிர்பார்த்தேயிருக்கவில்லை. 

அமெரிக்கா செல்லத் தயாரானபோதே அங்குள்ள காலநிலையை இணையத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். இப்போ அங்கே கோடைக்காலம் என்று கூறினார்கள். ஆனாலும் இப்படியொரு அனல் பறக்கும் வெயிலாக இருக்கும் என்பது நான் எதிர்பாராதது. எனவே இது எனக்கு புது அனுபவம்தான். 

வொஷிங்டன் டி.சியில் 'பெலமர்' எனும் ஹோட்டலில் நான் தங்கியிருந்தேன். காலை 10 மணிக்கு அனைவரையும் வரவேற்பறையில் கூடுமாறு எமக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எமது பெயர் மற்றும் நாடு பொறிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டையும் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனையும் மாட்டிக் கொண்டு எனது அறை அமைந்திருந்த மாடியிலிருந்து மின்னுயர்த்தியின் உதவியுடன் வரவேற்பறையை வந்தடைந்தேன். எனக்கு முன்னரே ஏனைய அனைவரும் அங்கு கூடி நின்றனர். மொத்தமாக பத்து பேர். அதில் ஒருவரைத் தவிர ஏனைய எட்டுப்பேரும் எனக்கு புதியவர்கள். ஒருவருக்கொருவர் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த அடையாள அட்டையை வாசித்து அறிமுகமாகிக் கொண்டோம். நாங்கள் அனைவரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சருமத்தின் நிறத்தில் கூடக் குறைய இருந்தாலும் பார்ப்பதற்கு கிட்டதட்ட ஒரே சாயலிலேயே இருந்தோம். 

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான மனித மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டமொன்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரதிநிதிகளுக்காக அமெரிக்காவில் ஓகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 09 வரையான மூன்று வாரக் காலப்பகுதியில் நடத்தப்பட்டது. அதில் இலங்கைச் சார்பில் ஊடகவியலாளராக நானும் அரசாங்க நிர்வாகச் சேவையை சேர்ந்த உதவிச் செயலாளரராக பணியாற்றி வரும் நிஹரில்காந்த் என்பவரும் கலந்துகொண்டோம். எம்மை கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், சர்வதேச விருந்தினர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் தெரிவு செய்து அனுப்பியிருந்தது.  

அறிமுகத்தை தொடர்ந்து நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து தனியார் பஸ்ஸில் ஏறி வொஷிங்டனை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம். நாங்கள் ஆறு பெண்கள். நான்கு ஆண்கள். இங்கும் பெண்களுக்குத்தான் பெரும்பான்மை.  

நான் அங்கே தங்கியிருந்த மூன்று வாரங்களும் அமெரிக்காவைப் பற்றி தெரிந்து கொண்டதிலும் பார்க்க என் புதிய தோழர்கள் மூலம் அவர்கள் நாட்டைப்பற்றி அறிந்துகொண்ட விடயங்கள் ஏராளம். புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் வாசிப்பதை விடவும் அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கதைகதையாக கூறக் கேட்பதே தனி சுவாரஷ்யம்தான். 

எனக்கு தெற்காசிய நாடுகளின் கதைகளும் கலாச்சாரமும் கொஞ்சம் பழக்கப்பட்டிருந்தாலும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் என்னவோ புதிதுதான். அந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் பரிஸ்தாமூ குலாவா என்ற பெயருடைய அழகான பெண்மணி.  

தஜிகிஸ்தான் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததொரு நாடு.அந்நாட்டுப் பிரஜைகள் ரஷ்யர்களின் நிறத்தைக் கொண்டவர்கள். பரிஸ்தாவும் அப்படிதான். மெழுகுச்சிலை, சீஸ் பொம்மை. எப்படி வேண்டுமென்றாலும் அவரை வர்ணிக்கலாம். படம் பிடிப்பதென்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் மற்றவர்களை விதம் விதமாக வைத்து படம் பிடித்துப் பார்ப்பதில் அவருக்கு தனிப்பிரியம். அப்படிதான் ஒருநாள் எதேச்சையாக பரிஸ்தா, உங்களுக்கு அமெரி்க்கா பிடித்திருக்கா? இங்கேயே இருந்திடலாம்னு தோணுதா? என்று கேட்டேன். அதற்கு அவர்  இல்லையென மறுத்தார்.  

அந்த பதில் எனக்கு ஆச்சர்யமளித்தாலும் கூடவே பல புதிய தகவல்களையும் அளித்தது. பரிஸ்தா பேசும் ஆங்கிலம் வித்தியாசமான பாணியில் இருக்கும். இலக்கணப் பிழைகளும் தடுமாற்றங்களும் இருந்தாலும்கூட தான் சொல்ல நினைப்பதை அவர் வெளிப்படுத்தும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.  

''தஜிகிஸ்தான் நல்ல நாடு. அங்குள்ள ஆண்கள் நல்லவர்கள். நாங்கள் இங்கே வரவேண்டிய அவசியம் இல்லை. மேலைத்தேய மோகத்தில் சொந்த மண்ணை விட்டுச் சென்றிடாதீர்கள் என்பதே எமது அமைப்பின் வலியுறுத்தல்'' என்றார் அவர் ஒரே போடாக!  

எனக்கு, சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..... என்ற தமிழ்ப் பாடல் ஞாபகத்துக்கு வந்தது. ஒருவர், சொந்த நாடு போல வராது என்று சொன்னால் அவர் நாடு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.  

அவர் அந்நாட்டில் 'ஈக்குவல் ஒப்பர்ச்சுனிட்டிஸ்' எனும் அமைப்பின் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அந்த அமைப்பு அனைத்து பாலினச் சேர்க்கையாளர்களுக்குமானது, என்றாலும் அதிகமாக  ஆண்பால் சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்காகவே பணியாற்றி வருகின்றது. தஜிகிஸ்தான் அடிப்படையில் ஒரு இஸ்லாமிய நாடு. அந்நாட்டின் அரசியலமைப்பிலும் மதத்திலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால் அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் வழி தவறி போய்விடக்கூடாது என்பதற்காக அவர்களை நெறிப்படுத்தி பாதுகாப்பதே அவருடைய அமைப்பின் வேலை.   தஜிகிஸ்தானில் பாலின உரிமைகள் மறுக்கப்படுவதால் சுயபால் சேர்க்கையாளர்கள் மேலைத்தேயம் செல்வதையே தமது இலட்சியமாகக் கொண்டுள்ளனர். பணத்தை செலவழித்து எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு அமெரிக்கா வந்து ஒரு ஆண் காதலனை கரம்பற்றிய பின்னர்தான் அவர்களுக்கு தங்கள் நாட்டின் அருமை புரியுமென்று பரிஸ்தா சொன்னபோது அதன் அர்த்தம் எனக்கு முழுமையாக புரியவில்லை. 

'அமெரிக்கா எப்போவுமே ஒரு பரபரப்பான நாடு. இங்கு கடுமையாக உழைத்தால்தான் வாழலாம். காதலர்களாக கைகோர்த்தாலும் அவரவர் சம்பாதித்து தங்கள் செலவை தங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்க ஆண்கள் தங்கள் ஆண்காதலர்களுக்காக பெரிதாக செலவழிக்க முன்வரமாட்டார்கள். கிட்டதட்ட இங்குள்ளவர்கள் பொதுநலத்திலும் பார்க்க சுயநலத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். இதனால் அமெரிக்கா வரும் தஜிகிஸ்தான் ஆண்பால் சேர்க்கையாயாளர்கள் உரிமையை பெற்றாலும் இறுதியில் மனம் உடைந்தே போவார்கள். எங்கள் தஜிகிஸ்தானிலுள்ள ஆண்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள். அவர்கள் தங்கள் ஆண் காதலர்களுக்கு வீடு, பணம்,பரிசில்கள் அனைத்தையும் வழங்கி கெளரவத்துடனும் அன்புடனும் பார்த்துக் கொள்வார்கள். அதனால் உரிமையை மட்டும் தேடிப்போகக்கூடாது,' என்று தன் நிலைப்பாட்டை விளக்கினார் பரிஸ்தா. 

நினைவுகள் தொடரும்...

லக்‌ஷ்மி பரசுலாமன்  

Comments