சில நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளாக ஏன் கருதப்படுவதில்லை? | தினகரன் வாரமஞ்சரி

சில நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளாக ஏன் கருதப்படுவதில்லை?

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன எந்தவொரு நாட்டினதும் பேரினப் பொருளாதாரக் குறிக்கோள்களில் முதன்மையானவையாகும். வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி எண்ணும் எண்ணக்கருக்கள் ஆரம்ப காலங்களில் ஒன்றாகவே நோக்கப்பட்டன. ஆனால் பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் வேறுபடுத்தி அவற்றிற்கிடையிலான தொடர்புகள் பிற்காலங்களில் தெளிவு படுத்தப்பட்டன.  

பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தி இயலளவில் ஏற்படும் ஒரு விரிவாக்கத்தை குறிக்கிறது. நடைமுறையில் அதனை அளவிட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி பயன்படுத்தப்படுகிறது. அதாவது இரண்டு வருடங்களுக்கிடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி பயன்படுத்தப்படுகிறது. அதாவது இரண்டு வருடங்களுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியில் ஏற்படும் மாற்றத்தை பொருளாதார வளர்ச்சி எனப்படுகிறது. அந்த மாற்றத்தை நூற்றுவிதத்தில் கூறுவது பொருளாதார வளர்ச்சி வீதம் அல்லது பொருளாதார வளர்ச்சி வேகம் எனப்படுகிறது.  

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியை இரண்டு விடயங்கள் நிர்ணயிக்கின்றன. முதலாவது உற்பத்தியின் பௌதீக அளவு அதாவது உதாரணமாக எத்தனை மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது என்பது இரண்டாவது உற்பத்தியின் விலை இங்கு உதாரணத்தின் படி நெல்லின் விலை உற்பத்தி செய்யப்பட்ட நெல்லின் அளவை அதன் விலையினால் பெருக்குவதன் மூலம் நெல். உற்பத்திப் பெறுமதியை கணிப்பிடலாம். இவ்வாறே எல்லா பௌதீக உற்பத்திப் பெறுமதிகளையும் அவற்றின் விலைகளால் பெருக்கி உற்பத்திப் பெறுமதிகளை கணிப்பிடலாம்.  

எனவே, பௌதீக உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களும் அவற்றின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களும் இணைந்தே மொத்த உற்பத்திப் பெறுமதியை தீர்மானிக்கின்றன. பொருளாதார வளர்ச்சியை இரு வருடங்களுக்கு இடையில் கணிக்கும்போது விலை மாற்றங்களை நீக்கியே கணிப்பிடப்படுகிறது. எனவே தான் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியில் ஏற்படும் மெய் ரீதியான அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு வருடத்தில் பொருளாதாரம் விரிவாகியுள்ள விதத்தை அறியலாம். அவ்விரிவாக்கம் எத்தனை சதவீதம் என்பதை பொருளாதார வளர்ச்சி வீதம் அளவிட்டுக் காட்டும்.  

ஒரு நாட்டின் உற்பத்தியானது விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் துறைகளில் இருந்து பெறப்படலாம். இவற்றை முதனிலைத்துறை இரண்டாம் நிலைத்துறை அல்லது துணைத்துறை மற்றும் மூன்றாம் நிலைத்துறை எனவும் பிரிப்பதுண்டு. இவ்வாறு உற்பத்தியை பகுத்து நோக்கலாம்.  

இவ்வாறு உற்பத்தியை கணிப்பிடும் போது ஒரு துறையின் உற்பத்தி வெளியீட்டுப் பெறுமதியை கணிப்பிட உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் சந்தைப் பெறுமதியிலிருந்து அவ்வுற்பத்திக்காக பயன்பட்ட உள்ளீடுகளின் பெறுமதியை கழித்துவரும் பெறுமதியாகிய கூட்டப்பட்ட பெறுமதியே (Value Added) கருத்திற் கொள்ளப்படும்.  

உதாரணமாக ஒரு விவசாயி 1000 ரூபா பெறுமதியான நெல்லை உற்பத்தி செய்ததாகக் கொள்வோம். இப் பெறுமதியிலிருந்து அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய விதை நெல், வளமாக்கி மற்றும் ஏனைய எல்லா உள்ளீடுகளின் பெறுமதியையும் கழித்துவரும் பெறுமதியே கணிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்படும். நடைமுறையில் நாம் சந்திக்கும் உற்பத்திப் பெறுமதிகள் யாவும் இவ்வாறு கூட்டப்பட்ட பெறுமதி அடிப்படையில் கணிப்பிடப்பட்ட பெறுமதிகளாகும்.  

இவ்வாறு ஒரு நாட்டின் உற்பத்தி இயலளவில் ஏற்படும் விரிவாக்கமாகிய பொருளாதார வளர்ச்சியை அடைவது முக்கியமான ஒரு குறிக்கோளாக கருதப்படுகிறது. ஏனெனில் உற்பத்தி விரிவாகும்போது அதற்கு பங்களித்த உற்பத்தி வளங்கள் (நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சியாளர்) போன்ற பெற்றுக்கொள்ளும் வருமானங்களும் அதிகரிக்கும் அவ்வருமான அதிகரிப்பு அவர்களின் வாழ்க்கைத்தர அதிகரிப்புக்கு இன்றியமையாத ஒன்றாகும்.  

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது மக்களின் வருமானம் அதிகரிக்கும் என்று கூறுவது இதனால்தான். பொருளாதார வளர்ச்சி வருமான அதிகரிப்புக்கு இட்டுச் செல்வதைக் காட்ட தலைக்குரிய வருமானம் என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி மொத்த வருமானத்தை அதிகரிக்க அதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெறும் பங்கு இதனால் வெளிப்படுத்தப்படுகிறது. உதாரணமாக 2018ம் ஆண்டில் இலங்கையர்களின் தலைக்குரிய வருமானம் 4068 அமெரிக்க டொலர்கள் என்றால் அந்த ஆண்டின் மொத்த வருமானத்தில் சராசரியாக ஒவ்வொருவரும் பெறும் பங்கினை கருதும். இது ஒரு சராசரி பெறுமதி மட்டுமே ஆகும்.  

உண்மையில் இலங்கையர்கள் ஒவ்வொருவரும் அதனைப் பெற்றுக் கொண்டதால் அர்த்தங் கொள்ளலாகாது. மேற்படி தலைக்குரிய வருமானத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 61,000 ரூபாவை மாத வருமானமாகப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை. உண்மையில் நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட பங்கினை.  மொத்த வருமானம் உழைப்போரில் அதி உயர் வருமானம் பெறும் மேட்டுக் குடியினராகிய 20% இனர் ஆண்டு அனுபவிக்க மிகக்குறைந்த வருமானம் பெறும் 20இனர் 6 சதவீதத்திற்கு குறைவான பங்கினையே பெறுகின்றனர். எனவே வருமான பங்கீடு சமமாக அல்லது நியாயமானதாக இல்லாத பட்சத்தில் தலைக்குரிய வருமானம் என்ற குறிகாட்டி பொருளாதார முன்னேற்றம் குறித்த சரியான நிலைமையினை பிரதிபலிக்காது. எவ்வாறாயினும் தனக்குரிய வருமானம் என்ற குறிகாட்டி சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் நாடுகளை சர்வதேச ரீதியில் ஒப்பிட்டு ஆராயப் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் காணப்படுகிறது. 

இக் குறிக்காட்டியின் அடிப்படையிலேயே அண்மையில் இலங்கை கீழ்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற அந்தஸ்தில் இருந்து மேல்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு என்னும் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.  

பொதுவாக தலைக்குரிய வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அத்தியாவசியமான ஒரு காரணியாக நோக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவே தலைக்குரிய வருமானம் அதிகரிக்கிறது. எனவே மக்களின் வாழ்க்கைத்தர அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி ஒரு இன்றியமையாத காரணியாகும். ஆனால் அது போதுமான ஒரு காரணியல்ல.  

பொருளாதார வளர்ச்சியுடன் சமூகரீதியில் ஏற்படும் முன்னேற்றங்களையும் உள்ளடக்கியதே பொருளாதார அபிவிருத்தி என்னும் எண்ணக் கருவாகும் கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு, சுதந்திரம் போன்ற வாழ்வியலின் இன்னோரன்ன, சமூக பரிமானங்களிலும் ஏற்படும் முன்னேற்றம் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும் எனவேதான் பொருளாதார அபிவிருத்தி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் சமூக பரிமானங்களில் ஏற்படும் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியதாகும். எனவே பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பாய்ச்சலை சந்தித்த நாடுகள் பல சமூகரீதியில் பின்தங்கியுள்ள காரணத்தினால் அவை அபிவிருத்தி அடைந்த நாடுகளாகப் பார்க்கப்படுவதில்லை. உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது ஆயினும் அவற்றின் சமூக அபிவிருத்திக் குறிகாட்டிகள் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அவை அபிவிருத்தி அடைந்த நாடுகளாகப் பார்க்கப்படுவதில்லை.  

இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளில் சமூக குறிகாட்டிகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் அடைவுகளுக்கு சமமாக இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சி போதாத காரணத்தினால் அபிவிருத்தியடைந்த நாடாக கருத்திற்கொள்ளப்படுவதில்லை எனவே பொருளாதார வளர்ச்சியுடன் சமூக பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகவே பொருளாதார அபிவிருத்தி என்னும் விடயத்தைப் பார்க்க வேண்டும்.  

பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும் ஒரு நாட்டில் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்க வேண்டுமாயின் நாட்டின் வளங்கள் மிகைப் பயன்பாட்டிற்கு உட்படக்கூடாது. அத்துடன் உற்பத்தி மற்றும் நுகர்வு நடவடிக்கைகளால் சூழல் மாசுபடக்கூடாது. எனவே பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியுடன் வளங்களை நிலைபேறான வகையில் அதாவது எதிர்கால சந்ததிக்கும் அவை கிட்டும் விதத்திலும் சூழலுக்கு தீங்கு ஏற்படும் மாசுபாடு ஏற்படாத வகையிலும் பயன்படுத்துவது நிலைபேறுடைய அபிவிருத்தி எனும் எண்ணக்கருவினால் வெளிப்படுத்தப்படுகிறது.  

உலகளாவிய ரீதியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1982ம் ஆண்டிலிருந்து கட்டமைப்புச் சீராக்கக் கொள்கைகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவற்றினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டாகும் போது உலகின் சில நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றம் கண்டிருந்தன. என்றாலும் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சமூக ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.

இதனால் மக்கள் மத்தியில் வருமான ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து, வறுமை நிலை மோசமானதாக மாறியது. எனவே பொருளாதார வளர்ச்சியானது இக் காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த சாதகமாக இருக்கவில்லை.  

2000.-20.15 காலப்பகுதியில் பத்தாயிரமாண்டு அபிவிருத்திக் குறிக்கோள்கள் என்னும் இலக்குத் திட்டம் அமுல்படுத்தப்பட இதுவே காரணமாகியது. சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதும் வறுமையை தனிப்பதும் இதன் முக்கிய குறிக்கோள்களாக அமைந்திருந்தன.  

இக்காலப்பகுதியில் பொருளாதார, நடவடிக்கைகளின் விரிவாக்கம் காரணமாக சூழல் பாதிப்புகள் மிகப் பெரியளவில் ஏற்பட்டன. இதனால் 2015-.20.30 காலப்பகுதியில் பேண்தகு அபிவிருத்திக் குறிக்கோள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சுற்றாடல் பாதுகாப்பே இவ்விலக்குத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது.    

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக் கழகம்

Comments