நீதிமன்ற அவமதிப்பு | தினகரன் வாரமஞ்சரி

நீதிமன்ற அவமதிப்பு

குற்றம் புரிந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு காரணம் அவர் அக் குற்றத்தை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், பிறிதொரு நபர் அக் குற்றத்தை செய்யாமல் தடுப்பதற்குமேயாகும்.

அதேநேரம் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படுவது அந் நபரின் செயற்பாடுகள், அவரது சமூக நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு அவர் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காகும்.

ஆனால் அவ்வாறு வழங்கப்படுகின்ற மன்னிப்பானது அவர் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வதற்கு சந்தர்ப்பமாய் அமைந்துவிடக்கூடாது.

அண்மையில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்யக்கூடாது என தடை விதித்த போதும் அதனையும் மீறி அவரது உடல் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர், ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் ஆவார்.

இந் நிலையில் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டங்கள் அதிகரித்த நிலையில் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உறுதியளித்தார்.

இவ்வாறான நிலையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக எவ்வாறு வழக்கு தாக்கல் செய்வது, யார் யார் வழக்கு தாக்கல் செய்யலாம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பாக நாம் அறிந்து வைத்திருப்பது பயனுள்ளதாகும்.

நீதிமன்ற அவமதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு என்றால் என்ன என்பது தொடர்பாக எந்த சட்டத்திலும் சரியாக வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை. எனினும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விசேட சட்டத்தின் பிரிவு 2(அ) குடியல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகவும், 2(ஆ) குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகவும் விளக்கம் தருகிறது.

நீதிமன்ற உத்தரவை மீறுதல், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தடையாக இருத்தல், நீதிமன்ற தீர்ப்புக்களை பாரபட்சமான முறையில் விமர்சித்தல் அல்லது பதிவிடுதல் போன்றன நீதிமன்ற அவமதிப்புக்களாக குறிப்பிடப்படுகிறது.

இந் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யும் சந்தர்ப்பங்கள் இரண்டு உள்ளன.

அதாவது நீதிமன்றத்துக்குள், நீதிபதி முன்னிலையில் அவருடைய கட்டளை மீறப்படுமாக இருந்தால் அதே நீதிபதி கட்டளையை மீறிய நபருக்கு எதிராக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் தாக்கல் செய்யலாம்.

இலங்கை உயர் நீதிமன்றில் முன்னால் நில அளவையாளர் நாயகமான எல்மோ பெரேரா என்பவர் பிரதமநீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் உயர் நீதிமன்ற கட்டளைக்கு எதிராக குரல் எழுப்பி அவமதிப்பு குற்றம் இழைத்தார்.

உடனடியாக அந் நீதிமன்றிலேயே அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

இரண்டாவது நீதிமன்றுக்கு வெளியே நீதிமன்ற கட்டளை மீறப்பட்டால், அதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர், குறித்த நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றமை தொடர்பாக பத்திரிகை, தொலைக்காட்சியில் பார்வையிட்ட நீதிபதி அல்லது சட்டத்தரணி, அல்லது பொது மக்கள் இவர்களில் எந்தவொரு தரப்பினரும் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

அரசியலமைப்பு சட்டம் 105 பிரிவு உப பிரிவு 03 இன் கீழ் வழக்கு தாக்கல் செய்து அதனை நீதவான் நீதிமன்று ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றாலேயே விசாரணை செய்ய முடியும். அதற்கான தண்டனை வரையறுக்கப்படாத போதும் அவமதிக்கப்பட்ட தன்மையை பொறுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தண்டனை வழங்குவார். அண்மையில் செம்மலையில் இடம்பெற்ற விவகாரமும் நீதிமன்றுக்கு வெளியே நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டு நீதிமன்றம் அவமதிப்புக்கு உள்ளாகப்பட்டிருக்கிறது.

எஸ்.பி.திஸாநாயக்க நுவரெலியாவில் இடம்பெற்ற உழவர் விழாவில் நீதிபதிகளை விமர்சித்து உரையாற்றினார். இதற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் செம்மலையில் இடம்பெற்ற விவகாரத்தில் ஞானசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்டு நீதிமன்றை அவமதித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும் என சட்டவல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏற்கனவே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 06 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. எனினும் பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது அதே தவறை அவர் மீண்டும் செய்துள்ளார். இந் நிலையில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் போது ஏற்கனவே இவரது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை சுட்டிக்காட்டி அதில் இவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டமையயையும் குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியும். இவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பானது இவரது தண்டனைக்கே தவிர குற்றத்துக்கு அல்ல.

ஏனெனில் அரசியலமைப்பின் பிரிவு 33 மற்றும் 35 உறுப்புரைகளின் கீழ் ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்க முடியுமே தவிர நீதிமன்றம் குற்றவாளியாக வழங்கிய தீர்பிலிருந்து ஒருவரை விடுவிக்க முடியாது.

செம்மலை விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற பொலிஸாரும் பிரதான காரணமாக இருந்துள்ளார்கள் என்பது ஊடகங்களின் மூலமும் சமூக வலைத்தளங்களின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அல்லது கட்டளையை அமுல்படுத்த வேண்டியது பொலிஸாரது பொறுப்பும் கடமையாகும். இவ் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை சட்டத்தரணிகளோ அல்லது பதிவாளரோ அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.

தேரரது இறுதி கிரியைகளை பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என பிள்ளையார் ஆலய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை குற்றவியல் நடவடிக்கைமுறை கோவை பிரிவு 96 மற்றும் 108 சரத்துக்களின் கீழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் பொலிஸாரே.

எனவே அதற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு நூறு வீதம் பொலிஸாருக்கே உண்டு. ஆனால் இச் சம்பவத்தில் நீதிமன்ற அவமதிக்கு பொலிஸாரே உதவியிருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.

எனவே முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக்கு காரணமாக இருந்தமை, நீதிமன்ற உத்தரவை நடமுறைப்படுத்த தவறியமை, கவனயீனமாக அலட்சியமாக செயற்பட்டமை, நீதிமன்ற உத்தரவு மீறப்படும் போது பாதுகாப்பு வழங்கி ஊக்குவித்தமை, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தமை, சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவை வாசித்து காட்டிய போதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது தடுக்காமை போன்ற பல குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தண்டனை

தண்டனை வழங்கப்படுவது ஒருவர் செய்த குற்றம் என்ன என்பது அவருக்கு உணர்த்தப்படுவதுடன் அக் குற்றத்தை பிறிதொருவர் செய்வதற்கு அச்சப்படும் நிலையை ஏற்படுத்துவதுமேயாகும். இதனாலேயே பழைய கோட்பாடுகளின் படி அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்வதனுடாக குற்றங்கள் குறையும் என்பதாகும்.

எனினும் பிற்காலத்தில் மனிதவுரிமை வளர்ச்சியடைந்தமை காரணமாக சீர்திருத்த தண்டனையாக தண்டனை சட்டம் மாற்றமடைந்தது. இச் சீர்திருத்த தண்டனை சட்டமானது குற்றம் செய்தவர் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

கடும் கொலைகள், ஆட்கடத்தல்கள், பயங்கரவாதம் போன்றவற்றுக்கு கடூழிய சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் வழங்கப்படுகிறது. இது, இத்தகைய குற்றங்களை செய்தால் இவ்வாறான தண்டனைகளே வழங்கப்படும் என அச்சுறுத்தும் வகையிலான தண்டனைகளாகும். இத்தகைய தண்டனைகள் வழங்கி சமூகத்தை திருத்த முடியும் என்பது பலரது நம்பிக்கை.

இவ்வாறான நிலையில் ஞானசார தேருக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக தண்டனை வழங்கப்பட்ட போதும் அதன் பின்னர் அவர் மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை அவரை மீண்டும் அதே குற்றத்தை செய்யத் தூண்டியதே தவிர தனது குற்றத்தை நினைத்து அவர் அச்சப்படவோ அல்லது திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பமாக அமையவில்லை.

எவரும் நீதிமன்ற உத்தரவை மீற முடியாது. சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமானது. இந் நிலையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக அக் குற்றத்தை புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அனைத்து நீதிமன்ற தீர்ப்புக்களும் வீதிகளில் கிடக்கும் நிலையே உருவாகும்.

நீதிமன்ற தீர்ப்புக்களை அவமதிப்பதோ அல்லது நீதிபதிகளை அமதிப்பதோ ஜனநாயக சமூக கட்டமைப்புக்கு முரணான செயலாகும். இத்தகைய குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலமே நீதித்துறையின் சுதந்திரமும், இறைமையும் பாதுகாக்கப்படும்.

சட்டமும் நீதியும் யாவருக்கும் சமன், சமனான சட்டப் பாதுகாப்பு என அரசியலமைப்பில் சட்டப் பிரகடனம் செய்துவிட்டு பலம்பொருந்திய, செல்வாக்கு மிக்க பெரியவர்கள், மதகுருமார், அரசியல்வாதிகள் போன்றோர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்தால் அவர்களுக்கு அதிலிருந்து விலக்களிப்பு செய்வது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இது ஜனநாயக நாட்டுக்கு ஏற்புடையதல்ல.

சட்டத்தை மீறியவர்கள் எவரோ அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது குற்றச் செயல்புரிந்தவர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே குற்றவியல் விதி. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல என்பதே நீதி தேவதையின் கோட்பாடு. 

ரி. விரூஷன்  

Comments