மொச்சை | தினகரன் வாரமஞ்சரி

மொச்சை

அன்று ஞாயிற்றுக்கிழமை. 

கொழும்பில் நூல் வெளியீட்டு விழாக்கள் எதுவுமே நடைபெறவில்லை.  

முகநூலைப் பார்க்கணும். 

பௌர்ணமி தினமாக இருந்திருந்தால். நான் ஞான வெண்பாக்காளவது பாடியிருப்பேன். வேலை நாட்களிலேயே வீட்டிலே இருப்பவனுக்கு விடுமுறை நாளா பெரிய சுமையாகி விடப் போகிறது? 

ஆக மொத்தம் அன்றைய நாள் எனக்கு வாசிப்பு நாளாகவே அமைந்து விட்டது. எல்லாச் சிறுகதைகளையும் படித்தேன். அத்தனை பத்திரிகைகளையும் மடித்தேன். என் புத்தக அலுமாரிக்குப் பக்கத்தில் வந்து நின்றேன். அலி படிக்கும் புத்தங்களை விட, எலி கடிக்கும் இனம் புரியாத கவிதைப் புத்தகங்களே அதிகம் இருப்பதனால் அது அலுமாரியல்ல; எலி மாரிதான். பானை பிடித்தவளுக்குப் பூனை பிடிக்கவில்லை. எலிகளை ஒழித்துக் கட்ட ஒரு வழியும் தெரியவில்லை. 

‘பொறி’க்குள்ளே ‘பொரிச்ச மீனை’ வைத்தாலும், அதற்குள்ளே போகாமல்... வெளியே கிடக்கும் பாண் துண்டுகளைக் கொறித்துக் கொண்டோடுதுகள். தமிழார்வம் மிக்க எலிகள். 

‘நரி’க்குப் போட்டிருந்தாலாவது பரவாயில்லை. 

என் புத்தங்களை நறுக்கியல்லவா போடுதுகள். 

எனது வீட்டைச் சற்றே உயர்த்திக் கட்டியிருப்பதனால் பரவாயில்லை. இப்போது வீட்டுக்குள் மழை வெள்ளம் வரவேயில்லை. என் புத்தகங்களுக்கு இந்த எலிகளால்தான் தொல்லை. 

‘பாவம்... அதுகளக் கொல்லாதீங்க. உசிரோட புடிச்சி... வேறெங்காவது... தூரத்துல கொண்டு போய்த் துரத்தி விடுங்க’. ‘எலிக்கூடு’ வைச்சுப் பாருங்கள்’ என்று, கமால் சேர்... யோசனை சொன்னார். 

என்னே.... எலிக்காரூண்யம்! 

இலக்கிய வாதியல்லவா....! 

அதுக்குள்ள போப்படா. போப்படான்னா போப்படான்னு எந்த எலியப்பா பயங்காட்டினாரோ? 

நான் வைத்த எலிக்கூட்டுக்குள் ஒரு எலி கூட மாட்டிக் கொள்ளவேயில்லை. இந்த அலி மாதிரியா அந்த எலிகள்... பிழைக்கத் தெரிஞ்சதுகள்!  

ம்... சரி, எலி பிடிப்பது எப்படின்னு அல்ஜ்கிட்ட சரி, மெய்யனுக்கிட்ட சரி, ஐடியாக் கேட்பம். 

இன்னும் நான் அலுமாரிக்குப் பக்கத்தில்தான். 

சட்டத்தரணி ஒருவர் எனக்கு, ‘என்றும் அன்புடன்’... என்று கையெழுத்திட்டுத் தந்த பகவத் கீதையைக் கையில் எடுத்தேன். நேற்றிரவு நான் படித்து நிறுத்தியிருந்த 256ஆம் பக்கத்தைப் புரட்டினேன். சத்தமாகப் படிக்க ஆரம்பித்தேன். 

ஜட இயற்கைக் குணங்களில் பற்றற்று, திவ்ய ஞானத்தில் 

நிறை பெற்றவனின் செயல், முழுமையாக உன்னதத்தில் கலந்து விடுகின்றது. 

‘ஹலோ...- ஹலோ... மிஸ்டர் அமீரலி?” 

குரல் கேட்டு நிமிர்ந்தேன். 

நுச்சு! 

‘ஒரேய இதத்தாம் படிப்பாரு’ என்றபடி, என் கையிலிருந்த பகவத்கீதையைப் பறித்தெடுத்து அலுமாரிக்குள் வைத்தாள். 

கீதை கிழித்ததோ அவள் காதை? 

‘தங்கம்... வாப்பீயப் படிக்க உடுங்கடா...’ என்றேன், கெஞ்சியபடி. 

“வாப்பும்மா அவ்ளோ கெஞ்சினாங்களாம்... படிக்கல்லயாம்.. இப்ப  பெரீசாப் படிக்கிறாராமாம்...’ என்றாள், கொஞ்சியபடி. 

நுச்சு. இவள் எங்கள் நான்காவது மகள். முழுப்பெயர். நுஸ்ரத் பர்வின்.  

மாபோலை. அல் – அஷ்ரஃப் ம.வி.யில் மூன்றாம் வகுப்புப் படிக்கின்றாள். குறும்பி! வாயாடி! மெகாத் தொடர் நேரசூசி! டோராவின் கூட்டாளி!  

‘பாலசுப்பிரமணியத்த ‘பாலா’ன்னு சொல்றமாதிரி நம்ம நுஸ்ரத் பர்வின... நுச்சுன்னு கூப்பிடுவோம்’ என்று தாத்தாக்காரி சுருக்கிய ‘நுச்சு’ இவள். ‘வாப்பீ... எனக்குப் பட்டம் வேணும்?’ என்றாள், நுச்சு. 

‘என்னா பட்டம் வேணும் தங்கம்?’ ‘பீஏ.எம்ஏ.பீஎஸ்ஸீ...?’ – சிரித்தேன்.  

‘அது என்னா பட்டம் வாப்பீ ஒசக்கப் போவுமா..?’ என்று கேட்டாள்.  

‘ம்... ஒசக்கப் போவுமே... அதுக்கு நல்லாப் படிக்கணும் தங்கம்’ என்றேன். 

‘அப்ப அது வாணாம். எனக்கு வவ்லா தான் வேணும்’ என்றாடினாள். 

சந்திரமுகி நாசராய் அதிர்ந்தேன் நான். 

‘என்னது வௌவால் பட்டமா?’ 

கிளிக் குரலெடுத்துக் கூவினாள் என் குயில் குஞ்சு: ‘ஆமா ஆமா ஆமா’  

‘சரி, சரி, சரி...’ என்றேன் அதே ராகத்தில். 

சிங்களத்தில் கேட்டாள். 

‘மட்ட தெங் ஓநே...’ 

‘ஹரி, ஹதலா தென்னாங்கோ. நௌ. யூ.கேன். கோ.’ என்றேன் சிங்களாங்கிலத்தில். சஞ்ஜூ, தருஸ, கவி, சந்தோஷ், பிரவீன், ரிஸ்க்கான், பெக்கம், அஸீஸ், ரிஸ்க்கா...  

‘எல்லாரும் உடுறாங்க... எனக்குத்தான் பட்டம் இல்ல’ ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.  

‘ஏன் தங்கம் ஒங்களுக்கொரு பட்டம் இருக்குத்தானே?’ என்றேன், சிரிப்படக்கி.  

‘என்னா பட்டம் அது?’ ஆவலாய்க் கேட்டாள். 

‘சோத்துப் பான’- என்றேன். 

‘அடிப்பேன்... உம்மோவ்... இந்த ‘அமீர்க்குமீர’ப் பட்டப்பேர் சொல்ல வாணாம் சொல்லுங்க’.. 

கோபத்தோடு என் காதை முறுக்கினாள். 

‘சொரி’...  ‘சரி... 

சுவர்க்கடிகாரத்தைக் காட்டிச் சொன்னாள்: 

‘பெரீய்ய ஊசி ஒம்போதுக்குப் போவமொதப் பட்டம் வேணும்...’ 

பேப்பரைச் சுருட்டிக் கடிகாரத்திற்கு எறிந்தாள். கோபம்! 

ஹைக்கூ முதலை ஒன்று மறுபக்கச் சுவர் (பலகை) நோக்கி ஓடியது. 

அந்தப் பல்லியைக் கண்டதும், ‘ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொன்ன பல்லி கூழ் பானைக்குள் விழுந்துச்சாம்’ என்ற பழமொழி ஞாபகம் வந்தது.  

நானும் அதுபோல் தானோ? 

‘பயந்தீங்களா... அது பல்லி வாப்பீ பல்லி... மொதலட பேரப்புள்ள’ என்றாள். 

நீங்கதான் பெரிய கவிஞரின் பேரப்பிள்ளையாச்சே.  

மனதுக்குள் மகிழ்ந்தேன். 

அவளை அப்படியே தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டேன். மார்பில் அணிவதற்கே உன்னைப் போல் வைர மணிகளுண்டோ? ‘எப்ப பட்டம் கட்டித்தருவீங்க...?’ கேட்டாள். 

‘பதினொரு மணிக்குள்ள கட்டித்தாறன் இப்ப பத்தர தானே’ என்றேன்.  ‘இப்ப ஒங்களுக்கு வேணும் பத்தரதானே எடுத்துத் தாறன் கட்டித் தாங்க...’என்றார் சந்தோஷமாக. 

‘சரி தங்கம்... கொஞ்சமிரிங்க... கட்டுவம்’ என்றேன். 

‘ம்... இரிங்கதான்... எவ்ளோ நாளாவுது இவர் சும்மா பொய்க்கீ...’ 

சற்றே குரலுயர்த்திக் கத்தினான். 

‘பொய்க்காரன்’. 

செல்லமாய் என் வயிற்றிலே குத்தினாள். 

இரண்டு, மூன்று நாட்களாகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். 

பட்டம் கட்டுற நிலைமையிலா இருக்கு? 

நூலுமில்லை வாலுமில்லை 

வானில் பட்டம் விடுவேனா? 

நாதியில்லை சேதியில்லை 

நானும் வாழ்வை ரசிப்பேனா? 

மூங்கிலை வெட்டிப் பிளந்து பட்டம் கட்டிக் கொண்டிருந்தான் அப்துல் அஸீஸ். இவன் எங்கள் மூன்றாவது. 

குழப்படியில் முதலாவது. 

ஒரு நாளைக்கு நாலைந்து பட்டங்களாவது கட்டுவான். 

ரியாட் நானா கண்டால் இவன் தலையிலே குட்டுவான். 

பட்டம் விடுவதற்கு எங்கள் அஸீஸுக்கு வேணும் எட்டு – வான். 

எங்கள் கிண்ணியாப் பட்டத்திற்கு இரண்டு ஈர்க்கிளும், பழைய நியூஸ் பேப்பரும், ஒட்டுவதற்குக் கொஞ்சம் சோறும் போதும். 

வினாடி தெக்காய். பட்டம் ரெடி. 

எங்கள் நாமல் உயனவில்... ஒவ்வொரு வருஷமும் ‘பட்டப் போட்டி’ நடைபெறும். தமிழில் அறிவிப்புச் செய்வதற்காக என்னை அழைப்பார்கள். 

‘அப்பட்டமா....? இப்பட்டமா? எப்பட்டமாக இருந்தாலும், எப்பட்டம் முதற்பரிசைத் தட்டிக் கொள்ளப் போகிறது.... என்று இன்னும் சற்று நேரத்தில் ‘அப்பட்டமாக’த் தெரியத்தானே போகிறது...’ என்று அறிவிப்பேன். 

சிலேடை ரசித்துச் சிரிப்பார்கள். 

அப்புறமென்ன.... 

‘ஒங்கட நம்பரத் தாங்க... எங்கட ஊருக்கும் வாங்க’ என்று அழைப்பார்கள். ‘அடிங்க. நோட். டபிள் செவன். த்ரீஸிக்ஸ் வன்போஸிக்ஸ்நைன் பைவ்...’ 

எங்க வாப்பா நல்லாப் பட்டம் கட்டுவாங்க. நான் மூன்றாம் வகுப்புப் படிக்கின்றேன் போது 

எனக்குக் கொக்குப் பட்டம், மீன் பட்டம், மயில் பட்டம், பாம்புப் பட்டம், நட்சத்திரப் பட்டம் என்று விதவிதமாகப் பட்டம் கட்டித் தருவாங்க. 

யூனூஸ் அப்பாட புளியமரத்தடிதான் எங்கள் ‘பட்ட நிலையம்’ அங்கிருந்துதான் நாங்கள் அனுப்பும் பட்ட விமானங்கள் கட்டையாற்று வானத்தில் ஜெட்டாகிப் பறக்கும். 

சலாம் நானா பெட்டிப்பட்டம் கட்டுவாரு. 

யூஸுப் நானா நட்சத்திரப் பட்டம் கட்டுவாரு. 

நான் எப்போதும் பழைய நியூஸ் பேப்பர்தான்! 

ஆதில் மச்சான் ஒரு நாள் மனுஷப் பட்டம் கட்டினாரு. 

‘பெல்பொட்டம்’ போட்ட அந்த மனுஷன்... பாவம்... 

லோங்க்ஸ் பாரம் தாங்க முடியாம.... தடால்னு கீழே விழுந்து... 

கட்டையாற்றுச் சேற்றுக்குள் செத்தே போனான். 

ஒரு நாள் வாப்பா எனக்குக் கொழும்பிலிருந்து ஒரு பட்டம் வாங்கிக் கொண்டு வந்து தந்தாங்க. 

‘ஒங்க உம்மாட காதுப் பூவ ஈடு வெச்சு வாங்கின பட்டம்’னு சொன்னாங்க. 

அதையும் முழுசா நாங்க நம்பின வயசு அது. 

அந்தக் கொழும்புப் பட்டம் எங்கள் கட்டையாற்றுக் காற்றில் குட்டிக்கரணம் போட்டது. 

கொழும்பு மொச்சை கிண்ணியாவுக்குச் சரிவராதோ? கொஞ்ச தூரம்தான் பறந்துச்சி... திடீர்னு நூலறுந்துச்சி... ஊத்தடிப் பக்கமா ஒரு மரத்துல தூக்குமாட்டிச் செத்தே போச்சு. 

அநியாயம்.... உம்மாட காதுப்பூ! 

நான் விட்ட பட்டம், சிக்குப் பட்டம் மரம், ஒரு பட்டமரம். பட்டுப்போன மரம். அப் ‘பட்டமரம்’ 

இப்போதுதான் ‘பட்ட’ மரம்! 

அப் பட்டம் நான் ஊர் போய்த் திரும்பும் போதெல்லாம் என் ஞாபக விழி விளிம்பில் நின்று வாலாட்டிக் கொண்டிருக்கிறது! 

நன்றியுள்ள பட்டம்! 

ம்... அது ஒரு காலம்! 

என்னோடு பட்டம் விட்டவர்களில் பலர் இன்று, கனடா, அவுஸ்திரேலியா என்று பறந்து கொண்டிருக்கிறார்கள் பெரிய பெரிய பட்டங்களோடு! 

மொச்சை சரியாக அமையப் பெற்றவர்கள்! 

பட்டத்தின் மும்முனை நூலையும் ஒன்றாகச் சேர்த்திணைத்துக் கட்டுவதை மொச்சை என்பார்கள். 

மொச்சை பிழையாகி விட்டால் கரணமடிக்கும். 

பட்டம் பறக்காது. 

சிலரது தலைவிதியும் இந்த மொச்சை மாதிரித்தான். மூன்றாம் வகுப்பில்... நான் செய்த அழிச்சாட்டியங்கள், இல்லை; இல்லை அலிச்சாட்டியங்கள்... ஒன்றாக? இரண்டா...? ஊரில் இருக்குப் பல சாட்சியங்கள். 

செங்கல்லால் ஓங்கி அடித்துப் பக்கத்து வீட்டுத் தோழி பத்திலாவின் தலையைப் பாதியாக்கியது இந்த வயதில்தான். 

அப்பம் சுட்டுக் கொண்டிருந்த உம்மா, மீண்டும் உட்கார்வதற்குள் துருவலகுப் பல்லைப் பின்னால் நீட்டி... வாப்பாவிடம் வசமாய் மாட்டி பிரம்படி வாங்கியழுததும் இந்த மூன்றாம் வகுப்பில்தான். 

‘ராலாமி, ஆளுக்குச் சரியான கோபம் வருது... கவனிச்சிக்கோங்க...’ என்று, என்னைப் பற்றிப் பலரும் முறைப்பாடு செய்த போது பொலிஸ்கார வாப்பாவும் கொஞ்சம் பயந்துதான் போனார். 

‘இவன எங்க சரி போர்டிங் பண்ணி உடுங்கப்பா...’ என்று, உம்மா அழுத நாட்கள்... என்னால் அவள் பட்ட வலிகள்.. இன்று கவலையில் நனையுது என் விழிகள்... 

ஒவ்வொரு மனிதருக்கும்... ஒவ்வொரு துயரிருக்கும்... வெளியே சொல்லாமலே ... ஒரு மொழியே இல்லாமலே... கிழமையில் இரண்டு நாட்கள்தான் பள்ளிக் கூடம் செல்வேன். வகுப்பறை எனக்குச் சிறை. 

மரம் ஏறுவேன். அணில் குஞ்சு பிடிப்பேன். கிளி வளர்ப்பேன். ‘பொன்வண்டு’ பிடித்துப் பேணிக்குள் அடைப்பேன். இவையெல்லாம் பகுதி நேரப் பொழுது போக்கு. 

முழுநாளும் பட்டம்... பட்டம்... பட்டம் தான். 

ஓதக்களவு. படிக்கக் களவு. டீச்சர் பையன் மக்கோ? 

மஹ்பூபா டீச்சர்! எங்க உம்மா. பாவம் அவங்க. நிறைய அழ வெச்சுட்டன். கர்ப்பத்திலேயே நான் கரைஞ்சிருக்கலாமோ?... 

ஞான வெண்பாக்கள் சரி எழுதுவானே என்று பிறப்பித்தானோ? 

அவன் காரணமின்றி யாரையும் படைக்கவில்லை. 

‘தெரிந்ததைச் செய்! கவிதயக் கிவிதயப் பாடிப் பிழைச்சிக்கோ’ என்று என்னை ஆசீர்வதித்தவர், எங்க வாப்பாதான்! 

வகுப்பறையில் இருந்து கொண்டே பொய்கள் யோசிப்பேன். கண்வலி, காதுவலி, என்று ஏதாவது ஒரு வலி வந்துவிடும். ஓதுற பள்ளிக்குப் போகாமல் பட்டம் விடுவதற்கு ஒரு வழி வந்துவிடும், அஸ்வர், அன்வர், ஹாரூன், நவாஸ், ஷாபி, ஜாபீர், ஜவ்பர், கலீலுர்ரஹ்மான், முபாறக், உவைஸ், மஹ்ரூப், நஸீம், நிலாம், சௌஜூத், மௌஜுத், புஹாரி, ஆட்டுக்குட்டி, குண்டுப்பொடியன்... எல்லோரும் ஓடிப்புரண்டாடிய கட்டையாறு... அதன் சேறு... இன்னும் மணக்கிறது... எப்படி மறக்கிறது? கன்னாமர வேரில் ஏறும் உழுவை மீனுக்குக் கல்லால் அடிப்போம். பச்சை ஈர்க்கிள் சுருக்கில் நண்டு பிடிப்போம். ஓணானுக்குப் புகையிலை பருக்கி அதை ஆட விடுவோம். நாயின் வாலில் ‘சீனவெடி’யைப் பற்றவைத்து ஓட விடுவோம். அக்கம் பக்கத்து வீட்டு வாசற்படிகளில் ஒற்றைச் செருப்பை ஒழித்து வைத்துத் தேட விடுவோம். 

சேரன் சார்... உங்களுக்கு மட்டுமா... எங்களுக்கும் ஞாபகம் வருதே...! மதார்சேர், சமது சேர், மஹ்மூது சேர், கபூர் சேர், சரிபு சேர், மஜீத் சேர், முகைதீன் பாவா சேர், சாலிஹ் சேர், தௌபீக் சேர், ஹாதி சேர், நிஃமத்துல்லா சேர், இவங்க யாரு வந்தாலும் எங்களுக்கு ஏச மாட்டாங்க. 

‘அடேய், அடேய்... வாணாண்டா... அது ஓணாண்டா...’ 

என்ற அதட்டலோடு சரி. 

ஆனா... மாஹில் சேருக்கு மட்டும் நாங்க சரியான பயம். ‘டிக்டேஷன் பாடமாக்காம பட்டமாடா உடுறீங்க. அஸர் தொழப் போங்கடா...’ என்று அவர் பிரம்பை எடுத்துக் கொண்டு வருவார்... நாங்க ஓடி ஒழிந்து கொள்வோம். 

ஹஜ்ஜுக்குப் போய்... மக்காவில் மௌத்தாகிப் போன மாஹில் சேரை மனசு மறக்குதே இல்லை. எக்ஸிடெண்ட் எழுதத் தெரியாமல்... ‘உம்மா இங்கிலீஷ் டீச்சராம்... நீட்டு கைய’ என்று மாஹில் சேரிடம் நான் வாங்கிய அடிகள்... இப்போது எனக்கு வலிக்கவேயில்லை. 

வயது ஆக, ஆக... வயதாகா ஞாபகங்கள் ஆஹா! இவைகள் தான் முதுமைக்கு- 

இளமை தருகிறதோ? 

ஆக, இது வரை நான்... என்று எல்லோரும் எழுதிப் பாருங்க.  

எங்க உம்மா ஸ்கூல் விட்டு வந்து பகல் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவாங்க. அஸர் பாங்குச் சத்தம் கேட்டுத்தான் எழும்புவாங்க. கடைக்கு அனுப்ப.... என்னைத் தேடுவாங்க. 

‘அந்தா... தொர பட்டம் உடுறாரு டீச்சர்’ என்று யாரோ ஒரு ‘நலன் விரும்பி’ உம்மாவிடம் பற்றவைத்த நெருப்பு விடிய விடிய என் முதுகில் எரியும். 

‘தொரய்க்கி பட்டம் உட ஒரு வலியுமில்ல... ஓதுற பள்ளிக்குப் போகத்தான் கேடு’... என்று, 

அன்று உம்மா அடித்த அடிகள்... இன்று இனிக்கிறது. 

உம்மா வாழ்க!  

மீண்டும் நாமல் உயன.... 

போன வருஷம். பட்டப் போட்டியில் ‘நுச்சு’வுக்கு நான் ஒட்டிக் கொடுத்த ‘கிண்ணியாப் பட்டம்’ முதற்பரிசைத் தட்டிக் கொண்டது. ‘அது மாதிரிவேணும்’ என்று சிறுவர்கள் என்னைத் தேடி வருவார்கள். நானும் அதே மாதிரிப் பட்டத்தை ஒட்டிக் கொடுப்பேன்.  

‘இந்தக் காணி விற்பனைக்குண்டு’ வளவுக்குள் இப்போதெல்லாம்... பழைய நியூஸ் பேப்பர்கள் பறக்கின்றன. 

இந்த நாமல் உயன மருமக்கள் எனக்குத் தந்த பட்டம்: 

‘பத்தர ஸருங்கல் மாமே’... 

‘கீச்சுக் கீச்சடா..! 

கீரத் தண்டடா...! 

நாட்டி வெச்சண்டா...! 

புடுங்கித் திண்டண்டா...!’ 

பாடிப்பாடி ஆடி ஆடி வந்து நுச்சு, என் கழுத்தில் தொங்கியபடி கேட்டாள்: ‘பட்டம் எங்கடா?’ 

சிரித்துச் சொன்னேன். ‘மறந்து போச்சுடா!’ 

சிணுங்கினாள்... ‘ஆ... எனக்கிப்ப ‘வவ்லா’ வேணுமே வேணும்தான்...’ ‘அஸீஸ்க் கிட்டக் கேளுங்கடா....’ என்றேன். 

‘அவன் கட்டித் தரமாட்டான்’ என்றாள். 

‘சரி, தங்கம் ஜாயெல போய் வந்து கட்டித் தாறன்... அழ வாணாம்...’ அவளை சமாதானப் படுத்தினேன். 

பட்டம் கட்டித் தருவதாகச் சொல்லிச் சொல்லி நானே இப்படி ஏமாற்றும் போது... வீட்டையா கட்டித்தரப் போகிறார்கள்? 

ஏழைக்குமரும், என் குடிசையும் ஒண்ணுதான்! 

கட்டுவதாய்ச் சொன்னார்களே தவிர, இன்னும் யாரும் கட்டவேயில்லை. 

எதுக்கு எனக்கெழுத்து? இது எனக்குத் தலையெழுத்து. 

எழுத்துப் பிழை திருத்திக் கழியுது என்காலம், அவ்வப்போதைய மேடை நிகழ்ச்சித் தொகுப்புக்களோடு! 

அல்ஹம்துலில்லாஹ்வில் ஆனந்தம்! 

ஜா-எல அச்சகத்தில் ‘புரூப்’ பார்த்து விட்டு வீடு திரும்பினேன். வீட்டுக்குள் நுழையும் முன்பே ‘நுச்சு’ கையில் அந்தப் பட்டத்தைக் கொடுத்தேன். 

கூத்தாடினாள். பாடினாள்: 

‘ஹாய்... ஜாதிப் பட்டம்! 

ஜாயெலப் பட்டம்... 

ஜாலி ஜாலிடா...!’ 

என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்தாள். ‘என்ட செல்ல வாப்பீ... ஜஸாக்கல்லாஹ்...’ 

நூலைப் பிடித்துக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்க்காமல் நுச்சு ஓட ஓட.... அவளது பட்டம் தெருக்கூட்டிக் கொண்டு போனது. 

‘அப்ப பொஸ்த்தம் திருத்தமா பிரஸ்ல பட்டமா கட்டினீங்க வாப்பீ...?’ ஓடி ஓடிக் கேட்டாள். 

அழகுப் பொய் சொன்னேன்: 

‘ஆமா தங்கம்’ 

படிக்கின்ற வயதில் பட்டத்திற்குப் பின்னால் ஓடாமல் இருந்திருந்தால். எனக்குப் பின்னால் பல பட்டங்கள் வந்திருக்குமோ? 

ஏதோ ஒரு விதத்தில் நாமும் இறைவன் அனுப்பிய பட்டங்கள்தான். சில பட்டங்கள் உயரத்தில்... 

சில பட்டங்கள் துயரத்தில்... 

அவன் கட்டிய மொச்சையை யாரால் அவிழ்த்துக் கட்ட முடியும்? 

பறக்க முடியாமல் கரணம் அடித்துச் சேற்றில் விழுந்த பட்டம் நான்...!  

‘ஜாதிப் பட்டம்! 

ஜாயெலப் பட்டம்! 

ஜாலி ஜாலிடா!’ 

பாடிப் பாடிப் பட்டம் விட்டாள் எங்கள் பூஞ்சிட்டு. 

ஏதோ அவளைப் பார்க்கும் போது நெஞ்சம் ஏங்கிற்று. 

குழந்தையின் மகிழ்ச்சியில் எனது ‘உழைப்பு’ இல்லையே.. என்ற கவலைதான் அது. 

மனசு வலித்தது. 

நான் ‘ஜா-எல’ போய்த் திரும்பும் வழியில்...  

ஒரு ‘வேலி’யில் தொங்கிக் கொண்டிருந்த பட்டம் தான் அது. பாவம்...! 

அந்தத் தெருவில்... 

எந்தச் சிறுவன் 

அதைத் தேடி அலைகின்றானோ....?

கிண்ணியா அமீர் அலி

Comments