உரக்களஞ்சியத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலை! | தினகரன் வாரமஞ்சரி

உரக்களஞ்சியத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலை!

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கருணை கிடைக்காமல் அவதியுறும் மாணவர்கள் 

நாட்டில் கல்வி வளர்ச்சி புதிய தொழில்நுட்பத்துடன் மின்னல் வேகத்தில் அபிவிருத்தியடைந்து வந்தாலும் மலையகப் பிரதேசத்தில் இன்னும் பல பாடசாலைகள் அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே மாணவர்கள் கல்வி கற்பதற்கான உகந்த சூழல் இல்லாமல் இருப்பது வேதனையே. 

மலையக அரசியல்வாதிகளின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்ற பாடசாலைகளில் ஒன்றுதான் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நுவரெலியா, உடரதல்ல தமிழ் வித்தியாலயம். 130மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். 

இக்கட்டடம் 1902ஆண்டு காலப்பகுதியில் தோட்ட உரக்காம்பறாவை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.  

32அடி நீளமும் 30அடி அகலமும் கொண்ட இந்த உரக்காம்பறா கட்டடத்தில் தரம் 01முதல் தரம் 05வரையான வகுப்புகள் காணப்படுகின்றன. இடவசதியும் தளபாட வசதியுமின்றி மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். தங்களது புத்தகப் பைகளை வைப்பதற்குகூட இடம் போதாமல் இவர்களின் கல்வி தொடர்கின்றது. 

பாடசாலை கட்டடம் பாரிய வெடிப்புகளுடன் காணப்படுகின்றன. ஏனைய பகுதியில் உள்ள சுவர்களும் மிகவும் ஆபத்தான நிலையில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தாக இருப்பது தெரியவருகின்றது. 

மாணவர்களின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் இல்லை. மாணவர்கள் சேறும் சகதியுமாக உள்ள இடத்தில் விளையாடுகின்றனர். பார்க்க பாவமாக இருக்கிறது.  

பாடசாலையின் கூரைத்தகடு மிகவும் மோசமான நிலையில் சல்லடை போல் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் சுவர்களின் ஊடாக வழிந்தோடுகின்றது.  

அத்தோடு அதிபர் காரியாலயம் தனியாக இல்லை இதே கட்டிடத்திற்குள் இயங்குகின்றது. அதிபர் உட்பட 06ஆசிரியர்கள் இருந்தப் போதிலும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவினை வழங்க ஆங்கில மொழி ஆசிரியர் ஒருவர்கூட இல்லை. இன்று உலகில் கனணி தொழிநுட்ப அறிவு உச்சகட்டத்தில் இருக்கின்ற போதிலும் இதுவரை இம்மாணவர்கள் கனணியை பார்த்தது கூட இல்லை.  

இவ்வாறான குறைபாடுகள் மத்தியில் அதிபர் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பின் பலனாக இப்பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை உயர்ந்துள்ளதுடன் கல்வி தொடர்பான போட்டிகளிலும் பல சாதனைகளை இம்மாணவர்கள் படைத்துள்ளனர். 

இப்பாடசாலையில் கல்வியை முடிக்கும் மாணவர்கள் இடைநிலை கல்வியைத் தொடர 9கி.மீட்டர் தூரத்தில் உள்ள நானுஓயா நகரிலுள்ள பாடசாலைக்கே செல்லவேண்டும். போக்குவரத்து வசதிகள் இல்லை. கட்டடம் அமைக்கக் கோரி பாடசாலை நிர்வாகம் அதிகாாரிகள், அரசியல்வாதிகள் என பலரிடம் கோரிக்கை கடிதங்கள் கொடுத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இது தொடர்பாக எழுத்து மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாடசாலையில் உள்ள கோவையில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட கோரிக்கை கடிதங்களின் பிரதிகள் கிடக்கின்றன. அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

இப்பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைக்க மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேவேளை கட்டட வசதி இன்மையால் காலை 08மணி தொடக்கம் 12மணிவரை தரம் 01.02.03. வகுப்புகளும் 11மணியிலிருந்து 4.30மணிவரை தரம் 04. முதல் 05வரை இரண்டு நேர வகுப்புகளும் நடைபெறுகின்றன.  

மலையக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பின் நிற்கின்ற அதிபர்களின் பாடசாலைகளுக்கு மாத்திரமே அதிக வளங்களை பெற்றுக் கொடுப்பதை தவிர்த்து, அபிவிருத்தி அடையாத பாடசாலைகளின் முன்றேற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நுவரெலியா
சுப்பிரமணியம்

Comments