17வது உலக மெய்வல்லுநர் விளையாட்டு விழா!; பதக்கக் குவிப்பில் அமெரிக்கா முன்னிலை | தினகரன் வாரமஞ்சரி

17வது உலக மெய்வல்லுநர் விளையாட்டு விழா!; பதக்கக் குவிப்பில் அமெரிக்கா முன்னிலை

கட்டாரில் நடைபெற்று வரும்  17வது உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று நள்ளிரவு நடைபெறும் நிறைவு விழாவுடன் முடிவுக்கு வருகின்றது.

இரண்டு வருடங்களுக்கொரு முறை நடைபெறும் இப் போட்டித் தொடரில் 209நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1992வீர, வீராங்கனைகள் 49விளையாட்டுப் பரிவுகளில் போட்டியிட கட்டார் டோஹா கலிபா மைதானத்தில் கூடினர். இம்முறை அமெரிக்காவிலிருந்து கூடிய வீர, வீராங்கனைகளைக் கொண்ட அணி கலந்து கொண்டது. அவ்வணியில் 172வீரர்களும் பிரித்தானியாவிலிருந்து 77வீரர்களும் பங்குகொண்டிருந்தனர்.

17வது உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் ஒரே பதக்க எதிர்பார்ப்பாக இருந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருணி விஜேரத்ன அதிக உஷ்ணம் காரணமாக விரைவாகக் களைப்படைந்து இடை நடுவில் போட்டியை விட்டு விலகிக் கொண்டார். கட்டாரில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக போட்டிகள் இரவு நேரங்களில் நடைபெறுகின்றன. மரதன் ஓட்டப் போட்டியும் வரலாற்றில் முதல் தடவையாக நள்ளிரவில் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தடகளப் போட்டிகள் என்றால் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா வீர, வீராங்கனைகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆனால் உசேன் போல்டின் வருகைக்குப் பின் ஜமைய்க்காவின் ஆதிக்கம் மேலோங்கினாலும், அவரின் ஓய்வுக்குப் பின் மீண்டும் அந்நாட்டு வீரர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இதுவரை பதக்கப்பட்டியலில் 8தங்கம், 8வெள்ளி, 2வெண்கலங்களைப் பெற்று மொத்தம் 18பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடத்திலும், 3தங்கம், 3வெள்ளி, 3வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சீனா இரண்டாவது இடத்தினையும், 2தங்கம், 3வெள்ளி, 1வெண்கலப் பதங்களைப் பெற்று ஜமைய்க்கா மூன்றாவது இடத்தினையும் பெற்றுள்ளது.

 இம்முறை நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் ரசிகர்களின் கூடிய எதிர்பார்ப்பாக இருந்தது ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டப் பந்தயமாகும். இதற்கு முக்கிய காரணம் அதிவேக மனிதர் எனப் பெயர் பெற்றிருந்த ஜமைய்க்காவின் உசேன் போல்ட் ஓய்வு பெற்ற பின் நடைபெறும் முதலாவது உலக மெய்வல்லுநர் போட்டி இது என்பதனால் இம்முறை அதிவேக மனிதர் யார் என்பதை அறிய ஆவலாயிருநதனர். இதில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் வெற்றிபெற்றார். 23வயதான இவர் போட்டித் தூரத்தை 9.76வினாடிகளில் ஓடி முடித்தார். மற்றொரு அமெரிக்காவின் சிரேஷ்ட வீரரான ஜஸ்டின் கெட்லின் 9.89வினைடிகளில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தையும் கனேடிய வீரர் ஆண்ட்ரோ டி கிராசி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஜமைய்காவின் யோகான் பிளேக் இறுதிப் போட்டிக்குத் தெரிவானாலும் அவரால் பதக்கம் பெற முடியவில்லை.

பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10.71வினாடிகளில் ஓடி முடித்து ஜமைய்க்காவின் ஷெல்லி ஆன் பிரேஷர் பிரைஸ் தங்கம் வென்றார். இது உலக மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் இவர் பெறும் நான்காவது தங்கப்பதக்கமாகும். இதற்கு முன் 2009, 2013, 2015ஆண்டுகளிலும் இவர் 100மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றுள்ளதுடன் தடகள வரலாற்றில் இதுவரை இவர் 10பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இம்முறை நடைபெற்ற உலக தடகள போட்டியின் போது குறுந்தூர ஜாம்பவானான ஜமைய்க்காவின் உசேன் போல்டின் சாதனையை அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் முடியடித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற 400மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் போது அமெரிக்க அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கைதப் பெற்றுக்கொண்டது. இது அலிசன் பிலிக்ஸ் பெறும் 13வது தங்கப்பதக்கமாகும். தடகளத்தில் இதுவரை உசேன் போல்ட் 12தங்கப்பதக்கம் பெற்று படைத்திருந்த சாதனையை பெலிக்ஸ் முறியடித்துள்ளார்.

மற்றொரு சீன வீராங்கனையும் ஒலிம்பிக் வீராங்கனையுமான வியு ஹோங்கும் இம்முறை உலக மெய்வல்லுநர் தொடரில் 20கி. மி. நடை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

தடகளத்தல் அசத்தி வரும் இம்மூன்று வீராங்கனைகளும் தாய்மை அடைந்த பின் உலக தடகளத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளனர். அலிசன் பிலிக்ஸ் இம்முறை 400மீற்றர் போட்டியிலும் கலந்து கொண்டாலும் இறுதிச் சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை. இது இவர் கலந்துகொள்ளும் 9வது உலக மெய்வல்லுநர் போட்டியாகும். இவர் 6ஒலிம்பிக் பதங்கங்களையும் வென்றுள்ளதோடு தடகளத்தில் அலிசன் பிலிப்ஸ் இதுவரை 26பதக்கங்கைளப் பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்ரியன் டெய்லர் முதலிடத்தைப் பெற்று தங்கம் வென்றார். இது தடகனத்தில் இவர் பெறும் ஹெட்ரிக் தங்கமாகும். இவர் ஏற்கனவே 2015, 2017ம் ஆண்டுகளில் மூப்பாய்சலில் தங்கம் வென்றுள்ளதோடு, ஒலிம்பிக் போட்டிகளிலும் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச தடகள கூட்டமைப்பு (ஐ. ஏ. ஏ. எப்) ஊக்கமருத்து பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ரஷ்ய தடகள கூட்டமைப்புக்கு தடை விதித்துள்ளது. இதனால் உலக மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்கும் ரஷ்ய வீர, வீராங்கனைகள் நாடற்ற நடு நிலை வீரர்களாகவே இவ்விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ரஷ்யக்கொடியைப் பயன்படுத்தவோ, அல்லது பதக்கமளிப்பு நிகழ்ச்சிகளின் போது ரஷ்யநாட்டு தேசிய கீதமோ இசைக்கப்படவில்லை. பதிலாக சர்வதேச தடகள கூட்டமைப்பின் இசை ஒலிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்படத்தக்கது.

எம்.எஸ்.எம். ஹில்மி

Comments