அளுத்கம போன்ற சம்பவம் ராஜபக்‌ஷ ஆட்சியில் இனி ஒருபோதும் நடக்காது | தினகரன் வாரமஞ்சரி

அளுத்கம போன்ற சம்பவம் ராஜபக்‌ஷ ஆட்சியில் இனி ஒருபோதும் நடக்காது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களில் ஒருவரும் பிவிதுரு ஹெல உருமய பிரதி தலைவருமான மதுமாதவ அரவிந்த, முஸ்லிம்கள் குறித்து மோசமாக பேசிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவரின் கருத்து அக்கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததது.இந்த நிலையில் மதுமாதவயின் வீடியோ தொடர்பில் பொதுஜன பெரமுனவில் இருக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கு பலபகுதிகளில் இருந்தும் அழுத்தங்களும் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கின. மதுமாதவ தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் தலைவர்கள் கட்சி தலைமையை கோரியிருந்தனர்.இதனையடுத்து மதுமாதவ தான் வகித்த சகல பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்திருந்தார்.

இந்த பிரச்சினை பூதகரமாகியிருந்த தினத்திலே (கடந்த  செவ்வாய்க்கிழமை) ஸ்ரீலங்கா முஸ்லிம் பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மாநாடு தெஹிவளை ஸஹ்ரான் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் பலரும் உரையாற்றியதோடு இனியும் இவ்வாறான இனவாத கருத்துகள் பேச இடமளிக்கப் ​போவதில்லை என்றும் உறுதியளித்தார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு முஸ்லிம் தரப்பின் ஆதரவை தெரிவிப்பதற்காக இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பொதுஜன பெரமுனவில் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் மட்டுமன்றி முக்கிய சிங்கள தலைவர்களும் இங்கு உரையாற்றியதோடு முஸ்லிங்களும் கோட்டபயவின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்கள். அளுத்கம போன்று சம்பவங்கள் இனியும் நடைபெறாது எனவும் அவர்கள் உறுதியளித்தார்கள்.

ராஜபக்ஷவினர் இனவாதிகளென 'லேபல்' ஒட்டுவதற்கு சிலர் மேற்கொள்ளும் சதியில் முஸ்லிம்கள் சிக்கக் கூடாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இங்கு தெரிவித்திருந்தார். முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன்வைத்த, மது மாதவ அரவிந்தவை கட்சியில் உள்ள சகல பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவுடன் உள்ளவர்களோ வெளியில் உள்ளவர்களோ எவர் இனவாதம் பேசினாலும் அதற்கு எதிராக செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

மதுமாதவ அரவிந்தவின் கீழ்த்தரமான வீடியோயை கண்டு நாம் மௌனமாக இருக்கவில்லை.இனவாதம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என எத்தரப்பில் இருந்து வந்தாலும் அதற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி,கோட்டாபய ,உதய கம்மம்பில் ஆகியோருடன் பேசினோம். ராஜபக்‌ஷவினர் இனவாதிகள் என 'லேபல்' ஒட்டுவதற்காக சிலர் மேற்கொள்ளும் சதியில் முஸ்லிம்கள் சிக்கக் கூடாது .இனவாதம் உள்ளே இருந்து வந்தாலும் வௌியில் இருந்த வந்தாலும் அதற்கு எதிராக செயற்படுவோம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பிரகாரம் கோட்டாபய 63 இலட்சம் வாக்குகளையும் சஜித் 41 இலட்சம் வாக்குகளையும் பெறுவர். கோட்டாபய வெல்ல அதிக வாய்ப்பு உள்ள நிலையில் முஸ்லிம்களும் அவரின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டும்.

எமது ஆட்சியில் மீண்டும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்றோரை இணைக்கக் கூடாது. முஸ்லிம்களின் வாக்குகளை அடகு வைப்பவர்களால் முஸ்லிம்களுக்கு அவப் பெயரே ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கோட்டாபய இனவாதியாக இருந்தால் அவருக்கு உதவ முன்வந்திருக்க மாட்டேன் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுலா சபை முன்னாள் தலைவர் ரூமி ஜௌபரும் இங்கு உரையாற்றியதோடு இனவாதம் பேசும் ஓரிருவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டினார்.இந்த அரசாங்கம் அரபுக்கல்லூரிகளை மூடவும் பாடவிதானங்களை மாற்றவும் முயற்சிக்கிறது. ஆனால் முஸ்லிம் அமைச்சர்கள் வாய்திறக்காமல் மௌனமாக இருக்கிறார்கள். பெட்டிகலோ பல்கலைக்கழகத்தை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐ.தே.க எம்.பி அசூ மாரசிங்க தனிநபர் பிரேரணை முன்வைத்துள்ளார்.

மது மாதவ அரவிந்த முஸ்லிங்கள் தொடர்பில் மோசமாக பேசினார். அவர் தற்பொழுது ராஜினாமா செய்துள்ளது முக்கிய அம்சமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அளுத்கம கலவரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ மீது குற்றஞ்சாட்டும் ஐ.தே.க முஸ்லிம் எம்.பிக்கள்,அது தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரவில்லை ஏன் பாராளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேரத்ன (ஐ.ம.சு.மு)இங்கு உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். 2015 முதல் ஆட்சியில் இருந்தும் இவர்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை எனக்கூறிய அவர், எதிர்வரும் ராஜபக்‌ஷ ஆட்சியில் அளுத்கம போன்ற சம்பவங்கள் நடைபெறாது எனவும் கூறினார். அண்மையில் கிரிந்த பகுதியில் நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்சினை, பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் பூதகரமானது.இங்கு அரசியல் தலையீடோ இனவாதமோ இருக்கவில்லை. எம்மீது சேறு பூசச் சிலர் முயன்றனர். தற்பொழுது நிலைமை தணிந்துள்ள நிலையில் 10-_12 பேரை கைது செய்து மீண்டும் இனவாத பிரச்சினையை உருவாக்க சிலர் தயாராகின்றனர்.இது தொடர்பில் கவனமாக இருக்குமாறு எமது கட்சி முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளோம். முஸ்லிம்கள் கோட்டாபயவுடன் இணைந்து வருவதை தடுப்பதற்காக இவ்வாறு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எமது தரப்பில் ஓரிருவர் பொருத்தமில்லா பேச்சுக்களை பேசி வருகின்றனர். கடந்த காலத்தில் இவ்வாறு நடந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால் எம்மிடமிருந்து முஸ்லிம்கள் தூரமாகினர். சில நாட்களுக்கு முன்னர் மதுமாதவ கூறிய கருத்து தொடர்பில் அக்கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்தது. எனவே ஓரிருவரை வைத்து கோட்டாபயவை எடைபோடக்கூடாது. எதிர்காலத்தில் அளுத்கம போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் அவர் உறுதியளித்தார்.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் எம்.பியும் இந்த மாநாட்டில் உரையாற்றியதோடு எமது தரப்பிலுள்ள சிலர் முஸ்லிம்களின் மனம் நோகும் வகையில் பேசியுள்ளனர் இது குறித்து கவலையடைவதாக தெரிவித்திருந்தார். சகல இனத்தினரும் இணைந்து கோட்டாபயவை வெல்லவைக்க வேண்டும். அவர் சகல இனத்தவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வார். கடந்த காலத்தில் பதுயுதீன் மஹ்மூத், அலவி மௌலானா, ஹலீம் இஷாக், அஸ்வர் போன்ற முஸ்லிம் தலைவர்கள் எம்முடன் இணைந்திருந்து இனமத பேதமின்றி மக்களுக்கு சேவையாற்றியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மிலும் கோட்டபயவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதோடு அளுத்கம சம்பவம் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷ மீது விரல் நீட்டினாலும் இந்த ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு பாரிய சோதனைகளும் கஷ்டங்களும் ஏற்பட்டது என்று கூறினார். காலி கலவரம் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சங்கரில்லா ஹோட்டலில் ஒரு நிகழ்வில் இருந்தார்.இந்த தாக்குதல் பற்றி அறிந்தவுடன் தென்பகுதி அதிரடிப்படை பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும் பிரதமருடனும் தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்படுத்த கோரினார். அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் இப்படித்தான் செயற்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 கோட்டபய வெற்றி பெறுவது உறுதி என்று கூறிய அவர் அவரின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும் என்றும் கோரினார்.

முஸ்லிம் பொது ஜன பெரமுன தலைவர் மில்பர் கபூரும் இங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் மக்களை தௌிவுபடுத்துவதற்காகவே இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. கோட்டபயவின் வெற்றிக்கு பங்களிக்க பெரும்பான்மையான சிங்கள மக்கள் தயாராகி விட்டார்கள்.நாமும் அவரின் வெற்றியில் இணைய வேண்டும்.இனவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் சகல குழுக்களிலும் இருக்கிறார்கள்.அளுத்கம் சதி போன்று எதிர்காலத்திலும் சதிகள் அரங்கேரக் கூடும்.முஸ்லிங்கள் அனைவரும் ஒரே குழுவான இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிங்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments