மாற்றுச் சிந்தனையே காலத்தின் கட்டாயம் | தினகரன் வாரமஞ்சரி

மாற்றுச் சிந்தனையே காலத்தின் கட்டாயம்

எல்பிட்டிய பிரதேசசபைக்கு நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியீட்டியிருக்கிறது. இதற்கமைய, பொதுஜன பெரமுன இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது.  ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடு. 

பிரதேச சபைத் தேர்தலொன்றை வைத்து தேசிய அரசியலைத் தீர்மானிப்பது அரசியல் அறியாமை. எல்பிட்டிய பிரதேசத்து மக்களின் நிலைப்பாட்டில் நாட்டிலுள்ள சகல மக்களும் இருப்பார்களென நினைத்துப்பார்ப்பதே மிகவும் தவறான கருதுகோள்.  

என்றாலும், ஓர் உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்த தேர்தல் இது. இதேபோல, ஜனாதிபதித் தேர்தலும் நடக்க வேண்டுமென்பதுதான் சகல மக்களினதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாக இருக்கிறது.   ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 34 நாட்கள் இருக்கின்றன. மூன்று முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்படும் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டனர். 

மூவருக்குமிடையில் கடும் போட்டி நிலவுகிறதென்பதே களநிலவரம் கூறும் செய்தி. “ஆண்டவனின் ஊரில் இயன்றவனுக்கு வெற்றி” என்று கிராமங்களில் பேசிக்கொள்வார்கள். ஜனநாயகக் களத்தில் யாரும் வெல்லட்டும் அதுவொரு பிரச்சினையே இல்லை.  ஆனால், வெற்றி இலக்குக்காக செய்யப்படும் ஒவ்வொரு முன்னெடுப்புக்களும் நாட்டின் எதிர்காலத்தை சிதைக்கும் வேட்டுக்களாகவே இருக்கின்றன.   இந்தத் தேர்தலில் வேட்பாளர்களின் முக்கிய பேசுபொருளாக இருப்பது தேசிய பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தனக்கு வாக்களியுங்கள் எனக் கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கேட்கிறார். தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வாக்களியுங்களென சஜித் பிரேமதாஸவும் அநுரகுமார திசாநாயக்கவும் கேட்கின்றனர்.   நாட்டின், தேசிய பாதுகாப்பு என்பது கேள்விக்கு உட்படுத்த முடியாதது. நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால், அது எப்படி கட்டமைக்கப்பட வேண்டுமென்பதில் தான் பிரச்சினையே இருக்கிறது. 

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் கோட்டாபயவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கடந்தவாரம் அநுராதபுரத்தில் நடைபெற்றது. பலத்த ஆரவாரங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை சிறுபான்மை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

“நவம்பர் -17 ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் உடனடியாக சிறையிலுள்ள அனைத்துப் படைவீரர்களின் நலன்தான் நாட்டின் நலன்” என அவர் உரையாற்றினார். 

இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் படைவீரர்களை கௌரவத்துடன் மதிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கும் கௌரவத்தை நாட்டு மக்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் கருத்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.   குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட சில படைவீரர்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டின் நீதிவிசாரணைக்கு உள்ளாக்கிய நிலையிலுள்ள இவர்களை விடுவிக்கப்போவதாக கோட்டாபய அறிவித்திருப்பது நீதித்துறையில் நேரடியாகத் தலையிடப்போகிறார் என்பதை அப்பட்டமாக்கியிருக்கிறது. அதாவது சட்டத்தையும் நீதித்துறையையும் கையில் எடுப்பதற்கான அவருடைய முயற்சிதான் அந்த அறிவிப்பு என்பதை மறுக்க முடியவில்லை.   சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே இருக்கிறது. உண்மை. ஆனால், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் முன்னரே கோட்டா சட்டத்தைக் கையிலெடுக்க முயற்சிக்கிறார். அப்பாவி மக்களை திசைதிருப்பி வாக்குகளைக் கவரும் மிகக் கேவலமான யுக்தியாகவே இதனைப் பார்ப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளைப் பற்றியும் அவர் பேசி இருந்தால், சற்று ஆறுதலடைந்திருக்கலாம். தமிழ், அரசியல் கைதிகள் தொடர்பில் கோட்டா வாய்திறக்காதது, அவரை மிலிட்டறி காரணாகவே பார்க்க வைப்பதாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். எய்தவன் இருக்க அம்பின் மீது குறிவைப்பதற்கு ஒப்பானதே இந்தத் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையாகும். யுத்த களத்தில் உத்தரவு பிறப்பித்தவர்களும் வழிகாட்டியவர்களும் சுதந்திர புருஷர்களாக நடமாடும் நிலையில், சோற்று பார்சல்களை எடுத்துச்சென்றவர்களும் புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டவர்களுந்தான் இப்போது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுகின்றனர். 

இவர்களில் சிலர் மீது குற்றப்பத்திரங்கள் கூட தாக்கல் செய்யப்படாத, பரிதாப நிலை தொடர்கிறது. இவர்கள் மீது கருணை காட்ட எவரும் இன்னும் முன்வரவில்லையென்பது வேதனைக்குரிய விடயம்.   இவர்களை விடுப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே மஹிந்த, ராஜபக்ச அரசு அப்போது கூறிவந்தது. நல்லாட்சி அரசு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு முயற்சி செய்த போதும், அதனைத் தடுப்பதற்கு முயற்சி செய்தவர்கள் கோட்டாபய ராஜபக்ச சார்ந்த பொதுஜன பெரமுன என்பதை நாம் இங்கு சொல்லியே ஆகவேண்டும். 

கட்சி அரசியலின் காய் நகர்த்தல்களும் ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகளும் மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கூட கையாள முடியாத கையாலாகாத்தனத்தையே நிரூபணமாக்கியிருக்கின்றன.   ஒன்று மட்டும் புரிகிறது. பொதுஜன பெரமுனவின் தேசிய பாதுகாப்பு என்பது தமிழ், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்ததாகவே தெரிகிறது. புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகக் கூறும் இவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க தேசிய பாதுகாப்புப் பலப்படுத்தப்பட வேண்டுமென்பது பொது ஜனபெரமுனவின் அரசியல். 

அதேபோல, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்களும் நெருக்குவாரங்களும் தொடர்கின்றன. நல்லாட்சி அரசு மிகவும் துணிச்சலுடன் இவைகளை, முறியடித்தாலும் முஸ்லிம் மக்கள் மீதான இனவாதம் அதிவேகப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான செயற்பாடுகளுக்கு தேர்தல் பரப்புரைகள் எண்ணெய் ஊற்றுவதாகவே இருக்கின்றன. 

தேசிய பாதுகாப்பு என்பது இனங்களை மாத்திரம் அடக்குவதற்கான செயற்திட்டமாக இருக்குமானால், அது நாட்டுக்கு ஆரோக்கியமாக அமையாது. நாடும் மக்களும் நிம்மதியாக இருக்கக்கூடிய வகையிலேயே தேசியம் இருக்கும் போதுதான் அழகிய தேசம் உருவாகும் என்பதை மறந்து செயற்படக் கூடாது. 

இங்கு சொல்லப்பட்டவையெல்லாம் வெறுமனே ஒரு வேட்பாளரையோ அல்லது ஒரு கட்சியையோ இலக்கு வைத்த சேறு பூசல்கள் அல்ல. சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சங்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமாகவே இவைகளைக் கொள்ள வேண்டும். 

சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக வேட்பாளர்கள் கடும் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஜே.வி.பி தனது கொள்கையை மாத்திரம் முதன்மைப்படுத்தி வாக்குகளைக் கேட்கிறது. ஆனால், கோட்டாவும், சஜித்தும் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள்.   சிங்கள வாக்குகளுக்குப் பொறிவைப்பது போலவே கோட்டாவின் பிரசாரம் தொனிக்கிறது. என்றாலும், வடக்கு, கிழக்கு மக்களை அவர் எப்படி கையாள்வார்? எப்படியான வாக்குறுதிகளை வழங்குவார் என்பது புரியவில்லை. 

தேர்தல்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எப்போதும் பதற்றமும் அச்சமும் குடிகொண்டுவிடும். கடந்த காலங்களில் இந்த மக்கள் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் இவை.   வெற்றிபெறும் வேட்பாளருடன் நின்றால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு. தவறினால், வெற்றிபெற்று ஆட்சியமைப்பவரால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இப்போது மட்டுமல்ல; எப்போதும் இருக்கிறது. 

சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வாக்குக் கேட்பதும், தோல்வியடைந்தவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்கியதும் 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தொடரும் அச்சுறுத்தல்கள் என்பதை மறுக்க முடியாது.   இலங்கைக்கே உரிய அந்த அரசியல் கபடத்தனங்கள் இனிமேலும் தொடர அரசியல் கட்சிகள் இடமளிக்கக் கூடாது என்பதே என்பது பணிவான வேண்டுகோள். 

இந்த ஜனாதிபதித் தேர்தல் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். உலகம் இப்போது விரல் நுனிகளுக்குள் சுருங்கிவிட்டன. தகவல் தொழில் நுட்பம் நம்மை இப்போது ஆளத்தொடங்கிவிட்டது. இந்த நவீனத்தினுள்ளும் நாம் பழைமையைத் தொடர்வது நம்மைக் கற்காலத்திற்குள் இழுத்துச் சென்றுவிடும் என்பதை சகலரும் மனத்தில் கொள்ள வேண்டும்.   போட்டிக்களத்திலுள்ள வேட்பாளர்களில் சஜித் பிரேமதாஸ இளம் வேட்பாளர். இளம் தலைமைகளிடம் புதுப்புது நவீன சிந்தனைகள் உருவாகலாம். சிறுபான்மை என்ற சொல்லை இனிமேல் பயன்படுத்தப் போவதில்லையென்று கூறும் அவர். “ஏனைய இனத்தவர்கள்” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்.  

(‘சுளுஜாதிய’ என்பதற்கு பதிலாக ‘செசுஜாதிய’ என்ற பதத்தை அவர் மேடைகளில் பயன்படுத்துகிறார்.) இதேபோல், ஓர் இனத்துக்காக மட்டும் தான் குரல் கொடுக்காமல் நாட்டிலுள்ள சகல மக்களின் தேசியக் குரலாகத் தான் பிரதிபலிப்பேன் என்றும் சஜித் கூறுகிறார். இவரும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவராக இருந்தாலும் ஒருவகையான சிந்தனை மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது.   வாக்குறுதிகளும் மாற்றுச் சிந்தனைகளும் எப்படி இருந்தாலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். இனம் சனம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நிற்காமல் மாற்றங்களை ஏற்படுத்தும் தலைமையை தெரிவு செய்தால் மட்டுமே நாட்டுக்கு சுபிட்சம் என்பதை சிரம் மேல் கொள்ளுங்கள். 

மதங்களை முதன்மைப்படுத்தி “தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட வரலாறு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கியது. இப்போது பூதாகாரமாக உருவெடுத்திருக்கிறது. இவைகள் எல்லாம் மாற்றம் பெறவேண்டியவை.

மாற்றங்கள்தான் புதுமையை ஏற்படுத்தும்.     

Comments