சிந்துவெளி பண்பாட்டுடன் தொடர்பிருப்பதை நிறுவும் கீழடி தொல் எச்சங்கள் | தினகரன் வாரமஞ்சரி

சிந்துவெளி பண்பாட்டுடன் தொடர்பிருப்பதை நிறுவும் கீழடி தொல் எச்சங்கள்

(கடந்த வாரத் தொடர்)

மத்திய அரசு கீழடி அகழ்வுகளை நிறுத்திக் கொண்டதும் அது தமிழக அறிஞர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானது. திராவிட அரசியல்வாதிகள் தமிழின் பெருமைகளை மூடி மறைப்பதற்கான மத்திய அரசின் முயற்சி என தமது எதிர்ப்பை வெளியிட்டு, தமிழக தொல்லியல் துறை ஏன் அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடாது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தன. இந்த வலியுறுத்தல்களுக்கு மத்தியில் கனிமொழி மதி என்ற பெண் சட்டத்தரணி ஒரு வழக்கை தாக்கல் செய்தார் மனுவை விசாரித்த நீதிபதி, கீழடி அகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு, ஏன் மாநில அரசே நான்காம் கட்ட ஆய்வை ஆரம்பிக்கலாமே! என்ற ஆலோசனையை வழங்கினார். எப்போதும் மத்திய அரசின் பேச்சை மீற விரும்பாத தமிழக அ.தி.மு.க அரசும் வேறு வழியின்றி ஆய்வைத் தொடர அனுமதியளித்தது. அதன் பின்னரேயே நான்காம் கட்ட ஆய்வுகள் ஆரம்பமாகின. 

ஐந்தாம் கட்ட ஆய்வில் நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மண்ணுக்குள் மறைந்திருக்கும் பொருட்களை ஊடுருவி கண்டறியும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு அகழ்வுக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. தற்போது 110 ஏக்கர் காணியில் அகழ்வுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடி மட்டுமன்றி, ஆதிச்ச நல்லூர், குமரிமுனைப்பகுதி, வைகையாற்றங்கரை, தாமிரபரணி ஆற்றங்கரை ஆகிய இடங்களிலும் பரவலாக தொல்லியல் ஆய்வுகளை பல வருட காலத்துக்கு நடத்த வேண்டியிருக்கும் என்றும் அப்போது தான் தமிழர்களின் தொன்மங்கள் வெளிப்பட்டு, இந்தியாவின் ஆதிக்குடியின் தமிழரின்றி வேறு எந்தக் குடியும் அல்ல என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் தமிழறிஞர்கள். கீழேடி ஆய்வை மட்டும் ஐந்தாண்டு காலத்துக்கு நடத்த தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக அறிய முடிகிறது. 

இங்கே இலங்கை தொல்லியல்துறை பற்றி மீண்டும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தொல்லியல் துறை அரசு கட்டுப்பாட்டில் இயங்காமல் சுயமாக இயக்கும் ஒரு பிரிவாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் மதமும் இனவெறியும் சகல மட்டங்களிலும் நிலவுகிறது. அரசியல் தலையீடே ஒரு துறை எப்படி இயங்க வேண்டும் என்பதைத் திர்மானிக்கிறது. இலங்கைத் தொல்லியத்துறை, அகழ்வு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்னரேயே, இலங்கை ஒரு பௌத்த நாடு, சிங்களவர்கள் அதன் ஆதிக்குடியினர் என்ற முடிவுக்கு வந்து விடுகிறது. எனவே ஒரு இலக்கு இப்படித்தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஆய்வாக இருக்க வாய்ப்பில்லை. சிவனொளி பாதமலையில் இருப்பதாக நம்பப்படும் நான்கு அடி நீளமான பாதச் சுவடு இவருடையதுதான் என்பதாகத் தீர்மானித்த பின்னர் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது எப்படி? சிங்கள இனத்தின் வரலாற்றுக்கு மஹாவம்சத்தையே ஆதாரமாக வைத்திருக்கிறார்கள். அதில் உள்ளவற்றுக்கு மண் ஆதாரங்கள் உள்ளனவா என்பதை இத் தொல்லியல்துறை தேடிப்பார்த்ததாகத் தெரியவில்லை. இந்தியாவின் வடபுலத்து தொல்லியல் துறையினரும் ஆரியவாத அறிஞர்களும் இதே கேள்வியைத்தான் தமிழகத்து தமிழ் அறிஞர்களிடம் கேட்டார்கள். நீங்கள் போற்றிப் புகழும் சங்க காலத்துக்கு மண்ணடி ஆதாரங்கள் உள்ளனவா? கோவில், மாடமாளிகை, அரண்மனை, நகர வீடுகள் சங்க காலத்தில் இருந்ததாகச் சொல்கிறீர்களே, அவற்றுக்கு மண் ஆதாரம் உள்ளதா? என்று கேட்டார்கள். சங்க காலம் பற்றிய விலாவரியாகப் பேசும் தமிழர்கள் அவற்றுக்கான மண் ஆதாரம் இல்லாததால் வாயடைத்துப் போனார்கள். தமிழகத்தில் நடத்தப்படும் கீழடி அகழ்வுகளில்தான் தமிழர்கள் இவ்வளவு காலமாக போற்றிப் புகழ்ந்து வந்த சங்க காலத்துக்கான மண் ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்கள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் மத்திய தொல்லியல்துறையும் கீழடி ஆய்வுகளை மூடிமறைக்க முற்பட்டது. எனவே, இந்திய மத்தியத் தொல்லியல்துறையும் இலங்கை தொல்லியல் துறையும் அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இயங்குகின்றன என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. 

இலங்கை தொல்லியல்துறை யாழ்ப்பாணத்தில் பௌத்த எச்சங்களைக் கண்டறிந்து சிங்கள பௌத்தர்கள் அங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களே அவை எனச் சொல்வதில் முன் நிற்கின்றது. ஆனால் உண்மையில் அவை அங்கெல்லாம் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் என்ற உண்மையைச் சொல்ல முற்படுவதில்லை. மகாவம்சத்தின் பிரகாரம் விஜயன் இலங்கைக்கு வந்த பின்னர் சிங்கள சமூகம் தோன்றும் காலப்பகுதியில் வடக்கு பகுதியில் தமிழ் பௌத்தம் நிலவியது என்பதே உண்மை என்றாலும் அதற்கான ஆதாரங்களைத் தேடிப் பிடிப்பதில் தொல்லியல்துறை ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ் பௌத்த நாகரிக தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இதுவரை அதிகார பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான ஆய்வின் விளைவுகள் தற்போதைய தேசிய அரசியல் நிலமைகளுக்கு சாதகமாக அமையப் போவதில்லை. ஏனெனில் இன, மதவாதங்களே தேர்தல் வெற்றிகளை நிர்ணயிப்பதால் உண்மையான தொல்லியல் சான்றுகளை தேடிப்பிடிப்பதில் இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வமற்றவர்களாகவே உள்ளனர். இதை விட, இராவணன் ஒரு சிங்களவீரன், இந்தியாவில் இருந்து நடத்தப்பட்ட படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பின் காரணமாக நாட்டை இழந்தான். ஆட்சி இந்திய கைக்கூலியிடம் (விபீஷணன்) சென்றடைந்தது போன்ற கற்பனைக் கதைகளை உலவ விடுவதே உத்தமம் என்ற அரசியல் ரீதியான முடிவுகளுக்கு வந்து விடுகிறார்கள். 

அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் பெரும் பிரச்சினைகள் எழுந்தன. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மசூதி அமைந்திருந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ராமர் கோவிலை தகர்த்துவிட்டுத்தான் மசூதி அமைக்கப்பட்டது என்பது பா.ஜ.காவின் வாதம். எனவே, ராமர் கோவில் எச்சங்கள் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றனவா என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட அகழ்வில், எந்த ஆதாரமும் கிட்டகவில்லை. ஆனாலும் அங்கே ராமர் கோவில் அமைத்தே தீருவோம் என்பதை முன்நிறுத்தியே பா.ஜ.க. இந்தியாவில் இந்து அரசியல் செய்து வருகிறது. இதை இலங்கை நிகழ்வுகளுடன் அப்படியே ஒப்பிடலாம். 

கீழடி ஆய்வுக்கு வருவோமானால், இதுவரை கிடைத்திருக்கும் ஐம்பது பிராமி எழுத்துகள் சிந்து சமவெளி ஆய்வில் கிடைத்த எழுத்துகளுடன் ஒத்துப் போவதாக உள்ளன என்றும் இது, சிந்து சமவெளியில் வாழ்ந்த மூத்த குடிகள் திராவிடர்களே என்பதை நிறுவுவதாக உள்ளதாகவும் இந்திய தொல்லியல் அறிஞர் கே.ராஜன் குறிப்பிட்டுள்ளார். கீழடி ஆய்வுகள், சங்க கால நாகரிகத்தை மட்டுமின்றி, சிந்து சமவெளி பண்பாட்டைக் கொண்டிருந்தவர்களுக்கும் கீழடியில் வாழ்ந்த குடிகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது என்பதையும் நிறுவுவதாகவும் உள்ளது என்பதை இங்கு விசேடமாகக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். 

கீழடி ஆய்வுகள் மூலம் பண்டையத் தமிழர் பற்றிய பல தகவல்கள் வெளிவந்துள்ளன. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நீண்ட சுவர், உறைகிணறுகள், குளியல் தொட்டி, நீர்த் தொட்டி போன்றன தமிழரின் கட்டடக் கலைக்கு ஆதாரமாக உள்ளன. நெசவுத் தொழில் சிறந்து விளங்கியமைக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. தறிகளில் நெய்து நாகரிகமாக உடையணிவதற்கு அக்கால மக்களுக்கு தெரிந்திருக்கிறது. இங்கே 500கும் அதிகமான பொழுது போக்குக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. இது, ஆரோக்கியமான ஒரு சமூகத்தை சுட்டுவதாக உள்ளது. மேலும் காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி, மயில் என்பனவற்றின் எச்சங்கள் கீழடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை, பண்டையத் தமிழர்கள் அசைவ உணவு பழக்கம் கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. கலை நேர்த்தியிலும், செல்வச் செழிப்பிலும் அன்றைய சமூகம் திளைத்திருக்கிறது என்பதற்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் தங்க மற்றும் மணிகளால் ஆன ஆபரணங்கள், கலை வேலைப்பாடுள்ள கருவிகள், அரவைக்கல், மண்குடுவை, தந்தச் சீப்பு என்பன ஆதாரமாக உள்ளன. 

இதுவரை 16 ஆயிரம் வரையிலான தொல்பொருட்கள் கீழடியில் கிடைத்துள்ளன. எனவே கீழடியிலேயே ஒரு வசதிகள் கொண்ட கண்காட்சி கூடத்தை அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கீழடி ஆய்வுகளுக்கு புறம்பாக கன்யாகுமரி கடலில் புதையுண்டிருக்கும் பழைய மதுரை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  சங்க இலக்கியம் என்ற பெயர் எப்படி அமைந்தது? என்பது பற்றியும் நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். தமிழறிஞர் மு. வரதராசனார் தனது தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் இப்படி விவரிக்கிறார்.  

சங்கம் என்பது அறிஞர் அறவோர் பலர் கூடி அமைக்கும் அமைப்பு. பிற்காலத்தில் (கி.பி. 4,5ஆம் நூற்றாண்டில்) சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ்நாட்டில் சங்கம் ஏற்படுத்திக் கல்வித் தொண்டும் சமயத் தொண்டும் புரிந்தார்கள். அவர்களின் காலத்துச் சங்கங்கள் போலவே, அதற்கு முந்திய காலத்திலும் புலவர்களின் சங்கங்கள் இருந்திருக்கவேண்டும் என்றும், பழைய பாட்டுக்கள் (எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலியவை) அந்தச் சங்கங்களைச் சார்ந்த புலவர்களால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதினர்.  

பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழச் சங்கங்கள் இருந்தன என்றும், மதுரையிலும் கபாடபுரத்திலும் இருந்த முதல் இரண்டு சங்கங்கள் மறைந்த பிறகு, மூன்றாம் தமிழ்ச் சங்கம் மதுரையில் பாண்டியர்களின் காலத்தில் நிகழ்ந்தது. என்றும் கருதப்படுகிறது. மூன்றாம் தமிழ்ச் சங்கத்து நூல்களே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்று கருதி, அவற்றைச் சங்க இலக்கியம் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. மதுரையில் புலவர்கள் கூடித் தமிழை ஆராய்ந்து வந்தார்கள் என்பதற்கும், பாண்டிய மன்னர்கள் அவர்களுக்கு ஊக்கமூட்டி ஆதரவு நல்கிவந்தார்கள் என்பதற்கும் பழைய பாட்டுகளில் சான்றுகள் உள்ளன. பாண்டியர்களைப் போலவே சோழ மன்னர்களும் சேர மன்னர்களும் மற்றச் சிற்றரசர்களும் வள்ளல்களும் புலவர்களும் ஆதரவு நல்கி வந்தார்கள் என்பதும் அப் பாட்டுகளால் தெரிகிறது. அவர்களின் உதவியும் ஊக்கமும் பெற்ற புலவர்கள், தம் உள்ளத்துக் கற்பனைகளைப் பாடியதோடு நிற்காமல், அந்த மன்னர்களையும் வாயாரப் புகழ்ந்து பாடினார்கள் என்பதும் தெளிவாகிறது. ஆனால், மூன்று சங்கங்கள் இருந்தன. அவை, இன்னார் இன்னார் தலைமையில் இத்தனை இத்தனை ஆண்டுகள் இருந்தன என்றெல்லாம் பிற்கால அறிஞர் கூறும் கருத்துகளுக்குப் போதுமான சான்றுகள் இல்லை. எவ்வாறாயினும், புலவர்கள் அவ்வப்போது கூடி ஆராய்ந்தார்கள் என்பதும், அவர்களில் சிலருடைய முயற்சியாலேயே சங்க இலக்கியம் எனப்படும் தொகைநூல்கள் அமைந்தன என்பதும் மறக்கமுடியாதவை என்றும் எழுதியிருக்கிறார் வரதராசனார். 

(தொடரும்) 

அருள் சத்தியநாதன்
[email protected]

Comments