தென்எருவில்பற்றில் மியோவாக்கி முறையிலான காடு வளர்ப்புத்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

தென்எருவில்பற்றில் மியோவாக்கி முறையிலான காடு வளர்ப்புத்திட்டம்

மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத் திட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் அயராத முயற்சியினால் களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  

மியோவாக்கி காடு வளர்ப்பு என்றால்என்ன?

மியோவாக்கி என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி. அவர் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையான காடுகளை உருவாக்கியவர். அவை செயற்கைக் காடுகள் எனப்படுகின்றன. (Man Made Forest) அவர் நோபல் பரிசுக்குச் சமமான புளு பிளானட் விருதினைப் பெற்றவராவார். அது குறுகிய நிலப்பரப்பில்,  காடுகளை உருவாக்கும் ஒரு அற்புதமான செயற்பாடாகும். ஆழமான குழிகளை வெட்டி அதிலே குப்பைகளை இட்டு நெருக்கமாக செடிகளை வளர்க்கும் ஒருமுறையாகும். இதனை மியோவாக்கி என்பவர் அறிமுகப்படுத்தியமையினால் இது மியோவாக்கி காடு வளர்ப்பு என அழைக்கப்படுகின்றது.  

மியோவாக்கி காடு வளர்ப்பின் பின்னணி

இயற்கையின் படைப்பில் மனிதனைத்தவிர அனைத்து ஜீவராசிகளும், போட்டி பொறாமை போன்ற குணங்களை விடுத்து ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச் செய்யும் இவ்வற்புதத்தை இவ்வகை மர வகையின் மூலம் அறியலாம். மரங்கள் வளர வளர ஒன்றுடன் ஒன்று உறவாடி வளரும் காட்சி சீதோசனத்தில் மட்டுமின்றி மனித மனங்களிலும், மாற்றத்தை ஏற்படுத்தும்.  

இதன் பயன்பாடு

குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். 1000 சதுர அடி நிலத்தில் 300 முதல் 400 மரங்கள் வளர்க்கலாம். நெருக்கமான மரங்களால் பூமி வெப்பம் குறையும், காற்றின் ஈரப்பதன் பேணலாம், குட்டி வனத்துக்குள் பறவைகள், புழு பூச்சுகள், நுண்ணுயிர்கள், தேனிக்கள், அதிகளவு வாழும். இதனால் உயிர்ச் சூழல் மேம்படும். கடற்கரைப்பகுதிகளில் இந்தக்காடுகள் இருப்பதனால் சுனாமியால் ஏற்படும் பேரிழப்பு தடுக்கப்படும். இதனால் குப்பைகள் முறையாகப் பயன்படுத்தி அதிகளவு காடுகளை உருவாக்க முடியும், இத்திட்டத்தினால் 10 வருடத்தில் ஒரு மரம் என்ன வளர்ச்சியில் இருக்குமோ அந்த வளர்ச்சி 2 வருடத்தில் கிடைத்துவிடும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும், மாசுக்கள் குறையும், சிறிய இடத்தில் பெரிய ஒட்சிசன் தொழிற்சாலை உருவாகும் என்பதாகும்.  

மியோவாக்கியின் திட்டத்திற்கமைவாக செயற்படுத்தப்படும் விதம்

100 அடி நீளம், 10 அடி அகலம், 5 அடி ஆழத்தில் குழி வெட்டிய பின் இரண்டு நாட்கள் வெப்பம் தணிய குழியை ஆற விட வேண்டும்.  

பின்னர் தென்னை ஓலைகள் ஒரு படைக்கும், இதன்மேல் மணல் ஒருபடைக்கும், இட்டு குழி நிரம்பி வழியும்வரை நீர் பாய்ச்ச வேண்டும்.  

பின்பு தேங்காய் உரிமட்டை ஒரு படைக்கும், அதன்மேல் மணல் ஒருபடைக்கும் இட்டு குழி நிரம்பி வழியும்வரை நீர் பாய்ச்ச வேண்டும்.  

பின்னர் வாழை மட்டை ஒருபடைக்கும், இலைகள் ஒருபடைக்கும், அதன்மேல் மணல் ஒருபடைக்கும், இட்டு குழி நிரம்பி வழியும்வரை நீர் பாய்ச்ச வேண்டும்.  

மீண்டும் காய் கறிக்கழிவுகள் ஒருபடைக்கும், அதன்மேல் மணல் ஒருபடைக்கும், இட்டு குழி நிரம்பி வழியும்வரை நீர் பாய்ச்ச வேண்டும்.  

பின்பு மாட்டெரு ஒருபடைக்கும், அதன்மேல் மணல் ஒருபடைக்கும் இட்டு குழி நிரம்பி வழியும்வரை நீர் பாய்ச்ச வேண்டும்.  

பின்னர் 3 அல்லது 4 நாட்களுக்குப் பின்பு ஒரு சதுர மீற்றருக்கு 5 மரக்கன்றுகள் என்ற விதத்தில் நடவேண்டும்.  

காடுகளின் வேள்வியே, உலகைக் காப்பது நமது கடமையே! காடுகள் வளர்ப்பது! மரங்களின் மகிமை வேண்டுமா? அவசியம் சொல்கின்றேன்! ஒரு சிரட்டை தண்ணீருக்கு ஓரு கொலையே நடக்கும் மரங்கள் மொட்டையாகுமானால் மனிதரெல்லாம் வழுக்கையாவர்! இது புரியாதவருக்கும் புரியும் என்று நினைக்கின்றேன்!  

உண்மையில் இத்திட்டம் ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி மியோவாக்கி என்பவரால் உருப்பெற்றாலும்  ஒவ்வொருவரும் இதனை சுயமாகவே செய்யவேண்டிய தற்காலத்தில் இருக்கின்றோம்.  

குறைந்த நிலப்பரப்பு போதுமானது. அதிகளவான எண்ணிக்கையில் மரங்கள் நடலாம் அதிகளவான மரவகைகளை நடமுடியும். ஒரு சதுர மீற்றருக்கு 5 மரங்கள் நடலாம்! இதனைக் கவனத்திற் கொண்டுதான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்றில் முதன் முறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

1000 சதுரடியில் 450 மரக்கன்றுகளை 25 இற்கு மேற்பட்ட காட்டு மரவகைகள் நடப்பட்டமையே சிறப்பான விடயமாகும்.   இவ்வாறான மரங்கள் கடற்கரையோரங்களில் 2004 ஆம் ஆண்டில் இருந்திருந்தால் சுனாமியிலிருந்து பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.  

எத்தனையோ உட்கட்டுமான அபிவிருத்திகள் தராத மன நிறைவை இந்த திட்டம் எமக்குத் தந்துள்ளது உண்மை. “மனம் இருந்தால் போதும் ஒரு மர வனம் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையில்” இத்திட்டத்தை ஒரு நிலைபேறான ஒரு வெற்றியை நோக்கிச் செயற்படுத்துவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.  

பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற மியோவாக்கி முறையிலான காடுவளர்ப்பு முறையை அறிமுகம் செய்து அதனை முன்னோடித்திட்டமாக இப்பிரதேசத்தில் அறிமுகம் செய்து சுற்றாடல் மூலமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் அக்கறையைக் காண்பிக்க இதனை நாம் அமுல்ப்படுத்தியுள்ளோம்.  

மிகக் குறைந்த நிலப்பரப்பில் அடர்வனம் ஒன்றை உருவாக்குகின்ற ஒரு முயற்சி இது. இத்திட்டம் பற்றி வலைத்தளங்களில் நாங்கள் பார்வையிட்டதன் பின்னர் எமது பிரசேத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதன் நிமித்தம் நாம் அதனை எமது பிரதேசத்தில் முதன் முதலாக களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் நடைமுறைப்படுத்த தேர்வு செய்தோம்

எமது இந்த முன்மாதிரியான செயற்றிட்டத்திற்கு இப்பகுதி கிராமசேவகரின் முயற்சியினால், இப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழிவெட்டி பண்படுத்தியுள்ளார்கள். இன்னும் 2 வருடங்களில் 10 வருடங்களுக்குரிய மர வளர்ச்சியைக் காண்பிக்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நாம் வலைத்தளத்தில் பார்வையிட்டு இதனை எமது பிரதேசத்தில் அமுல்ப்படுத்துவதற்குத் தீர்மானித்தபோது அதற்கு எமக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் ஆகியோர் எமது பிரசேத்திற்கு ஏற்றவகையில் இத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு எமக்கு ஆலோசனை வழங்கியிருந்தர்கள்.  

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவு காணி என்கின்ற வளத்தை மிக அரிதாகக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலும் இந்த திட்டத்தை மிகப் பொருத்தமான திட்டமாகவே நாம்  பார்க்கின்றோம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவிக்கின்றார்.  

மியோவாக்கி முறையில் காடுவளர்ப்புத் திட்டத்தை தூரநோக்கு சிந்தனையில் அமுல்படுத்தியது வரவேற்கத்தக்கதாகும் - மட்டு. மேலதிக அரசாங்க அதிபர்.

தேசிய மரநடுகை தினத்தில் மரத்தை நாட்டிவிட்டு அதனை ஒரு விழாவாகக் கொண்டாடிவிட்டு, அதனை மறக்கின்ற இன்றய காலகட்டத்திலே, இயற்கையின் சமநிலையைப் பேணுகின்ற காடுகளைப் பேணுகின்ற, நாங்கள் எதிர் நோக்குகின்ற பஞ்சத்தையும் வரட்சியையும் குறைப்பதற்காக வேண்டிய இடப்பற்றாக்குறை நிறைந்த இந்தப் பிரதேசத்தில் இவ்வாறான மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை தூர நோக்குடன் சிறந்த திட்டமிடலின் கீழ், அமுல்படுத்துவதற்கு முன்வந்தமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.  

தற்போதைய இளைஞர் யுவதிகள், சமூக வலைத்தளங்களிலும், தகவல் தொழில் நுட்பத்திலும், மூழ்கிக்கிடக்கின்ற இந்நிலையில், அவர்கள் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கின்றார்கள் இல்லை என்பதற்குப் புறநடையாக இந்தப் பிரதேச இளைஞர்கள் இந்த காடுவளர்ப்புத்திட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதையிட்டு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவிக்கின்றார்.  

அசுத்தக் காற்றை சுவாசிப்பதை விட ஒரு நிமிடம் அதற்கு ஒதுக்கி நம்மால் இயன்றளவில் ஒரு மரத்தையேனும் நட்டு எதிர்கால சந்ததியினருக்காக உழைப்போம்! “கானகத்தை அழிப்பதும் வனங்களை ஒழிப்பதும் நமக்கு நாமே நஞ்சூட்டிக் கொள்வதற்குச் சமம் என்று எவரும் உணர்ந்தாரில்லை” என்கிறார் இடைக்காடனார்.  

சங்க இலக்கியங்களில் காடுகள் அழிந்த, அழிக்கப்பட்ட பல விடயங்களை புறநானுற்றுப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றது! அவ்வாறு இருப்பினும் சங்கப்பாடல்கள் இவ்வாறும் குறிப்பிட்டுள்ளது. காடுகள் இயற்கைப் பாரம்பரியத்தின் இனிமையான எச்சங்கள் என்பதனைக் கவனத்திற் கொண்டு கானவர்களைகூட காடுகளை பாதுகாத்ததாக சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.  

“காடு காத்து உறையும் கானவர் உளரே” அறிவியல் வளர்ச்சி, நவீனத் தொழில் நுட்பங்கள், மனித நாகரிகம், ஆக்கிரமிப்புகள் ஆகியன காடுகளை அழிக்காத காலக்கட்டத்திலேயே கானவர்களால் காடுகள் பாதுகாக்கப்பட்ட செய்தி வியப்பிற்குரியதாகும். இவ்வாறாக குறிப்பிடும் விடயங்களுக்கு மத்தியில் சங்கத்தமிழர்களாக காடுகளை நாமும் உருவாக்கி இயற்கை சூழலின் சமநிலையை பேணும் வகையில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் காடு வளர்ப்புத்திட்டத்தை செயற்படுத்தியுள்ளது, போன்று அனைவரும் மரங்களை நட முன்வர வேண்டும்.  

வ. சக்திவேல்

Comments