‘அமெரிக்கா இல்லாத தெற்காசிய பாதுகாப்பு’;பயிற்சிகள் சாத்தியமா? | தினகரன் வாரமஞ்சரி

‘அமெரிக்கா இல்லாத தெற்காசிய பாதுகாப்பு’;பயிற்சிகள் சாத்தியமா?

ஒன்றுக்கொன்று சமாந்திரமாக அல்லது நேர் எதிரானதான பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் அவற்றில் மிக முக்கியமானதான மூன்று விடயங்கள் தெற்காசியாவில் இடம்பெற்றிருக்கின்றன.  

ஒன்று இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பத்தாவது இராணுவக் கூட்டுப்பயிற்சியான நீர் காகம் பயிற்சிகள் மற்றையது மாலைதீவில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாடு மூன்றாவது விடயம் ஆண்டு தோறும் இடம்பெறும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு என்பனவாகும்.  

மாலைதீவில் நடைபெற்ற நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கியிருந்தார்.  

இந்திய மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  இந்த மாநாட்டிற்கு மாலைதீவு அரசாங்கமும், சிங்கப்பூரில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான எஸ். ராஜரட்ணம் நிலையமும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றன.  

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் அண்மையில் அங்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பிரதமர் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.  

ஆயினும் இந்த நான்காவது இந்து சமுத்திர மாநாடு கடல்சார் பாதுகாப்பு தொடர்பானதா அல்லது கடல்சார் சூழலியல் தொடர்பானதா அல்லது இவை இரண்டுமே இல்லை எனில் இந்த மாநாட்டின் சாராம்சம்தான் என்ன என்பதும் விடை காணப்பட வேண்டிய கேள்விகளாகத்தான் இருக்கின்றன.  

இதேவேளை, இலங்கை உள்ளிட்ட சுமார் 26நாடுகளின் முப்படையினர் கலந்துகொண்ட நீர்க்காகம் கூட்டு இராணுவப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வுகள் திருகோணமலை, குச்சவெளியில் நிறைவடைந்திருக்கின்றன.  

செப்டெம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமான நீர்க்காகம் கூட்டு இராணுவப் பயிற்சி 23ம் திகதியுடன் நிறைவடைந்திருக்கின்றது.  

இலங்கை இராணுவத்திலிருந்து இரண்டாயிரத்து 400பேரும், கடற்படையைச் சேர்ந்த 400பேரும், விமானப் படையினர் 200பேரும் இந்த கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  

சர்வதேச நாடுகளின் சார்பில் சுமார் 100படை வீரர்கள் பங்கேறிருப்பதாக பாதுகாப்பு சார்ந்த தகவல்கள் உள்ளன.  

பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான பல்தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், திறமைகளை வழிகாட்டுதல், சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு இந்த பத்தாவது இராணுவ கூட்டுப்பயிற்சி இடம்பெற்றிருக்கின்றது.  

வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய, மாகாணங்கள் இந்த நீர்க்காகம் எனும் இராணுவ கூட்டுப்பயிற்சிக்கான கலங்களாக தீர்மாணிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.  

வெளிநாட்டு இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொள்ளும் இந்தகைய கூட்டுப் பயிற்சிகள் மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்திலிருந்துதே ஆரம்பமாகின.  

இந்த நீர்க்காகம் கூட்டு பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணி, விஷேட படையணி, எயார் மொபைல் படையணி, பொறிமுறை காலாட் படையணி, கடற்படையினர் மற்றும் விமானப் படையினரும் கலந்து கொண்டிருக்கின்றன.  

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான், ஐக்கிய இராச்சியம் மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளின் இராணுவத்தினரும் நீர்க்காகம் பயிற்சியில் கலந்து கொண்டனர்.  

இவை ஒரு புறமிருக்க இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் இடம்பெறும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இம்முறையும் ஒன்பதாவது தடவையாக பண்டாநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 42நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சுமார் 800பேர் பங்கேற்றனர்.  

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் முதலாவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு இதுவென்பதும் விசேட அம்சமாகும்.   

பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட உள்ளடங்கலான உள்நாட்டு வளவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நிபுணர்ளும் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.  

ஆயினும், ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான முதல் நாள் தொடக்க நிகழ்வின் போது அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளவில்லை.  

இது இவ்வாறிருக்க, இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்று கடந்த 2017ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம் திகதியும் மறுநாளான செப்டெம்பர் முதலாம் திகதி வரையிலான இரு தினங்கள் இடம்பெற்றிருந்தமையும் ஞாபகமிருக்கலாம்.  

கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஈரான் உள்ளிட்ட சுமார் பதினேழு நாடுகள் கலந்து கொண்டன.  

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அண்மையில் காலம் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் கூட்டாக ஆரம்பித்து வைத்தனர்.  

டெல்லியைத் தளமாகக் கொண்டு செயற்படும் இந்திய மன்றமே 2017ம் ஆண்டிற்கான இந்து சமுத்திர மாநாட்டினையும் ஏற்பாடு செய்திருந்தது.  

இதில் இந்தியாவின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பிரபு, வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.  

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை முன்னதை விடவும் தற்போது பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதே இதற்கான காரணம் என அப்போது சொல்லப்பட்டது.  

அதாவது சீனாவின் “பட்டுப்பாதை திட்டம்” முன்னதை விட அன்றைய சூழலில் நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு சவாலாக அமைந்திருக்கலாம் என்பதை மறுக்காது விட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கில்லை.  

இத்தகைய சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒன்றுதான் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பதை நன்கு அறிந்து கொண்டதால்தான் என்னமோ இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கையில் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றது.  

அதில் ஒன்றாகத்தான் இலங்கையில் கடந்த 2017ம் ஆண்டு இடம்பெற்றிருந்த ‘இந்து சமுத்திர பாதுகாப்பு’ மாநாட்டையும் தனக்கு சாதகமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தது எனலாம்.  

இது இவ்வாறிருக்க இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளின் பிராந்திய பாதுகாப்பில் சீனா தனது தலையீட்டினை அதிகரித்து வருவதாக இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் அப்போது குற்றம் சுமத்தியிருந்தார்.  

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, மியன்மார் உள்ளிட்ட நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை சீனா அதிகரித்து வந்த நிலையில் இந்திய இராணுவ தளபதி இக்கருத்தினை வெளியிட்டிருந்தார்.  

இதனிடையே இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினரின் கூட்டு கடற்பயிற்சி ஒன்று கடந்த 2017யுூலை மாதம் நடுப்பகுதியளவில் (17.07.2017) நடைபெற்றது. இதற்கு இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தன.  

வங்கக்கடலில் இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வருகின்றது.  

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இடம்பெறும் இத்தகையப் பயிற்சிக்கு மலபார் கூட்டு கடற்பயிற்சி என்பதாகப் பெயரிடப்படுகிறது.  

சுமார் பத்து தினங்கள் இடம்பெற்றிருந்த மலபார் கூட்டுப்பயிற்சியின் இறுதி தினத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 150கடல் மைல் தொலைவில்் இந்த கூட்டு கடற்பயிற்சி இடம்பெற்றிருந்தது.  

இதில் ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பல்களான விக்கிரமாதித்யா, ரன்வீஜய், ஷிவாலிக், சயாத்திரி, ஜோதி, கமோட்டா மற்றும் கிர்பான் ஆகியன பங்கேற்றிருந்தன.  

அதேவேளை உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் (சி.வி.என்- 68), ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் கப்பல்களும் இதில் பங்கேற்றிருந்தன.  

அமெரிக்காவின் விரைவாக செல்லும் லொஸ் ஏஞ்சலஸ் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.  

இவற்றுடன் ஜப்பான் நாட்டு கடற்படையில் உள்ள சுய பாதுகாப்பு படை கப்பல் ஜெ.எஸ். இஜிமோ (டிடிஎச்- 183). ஜெ.எஸ்.சஜாநமி (டிடி113) ஆகிய கப்பல்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.  

இந்த பயிற்சியை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பலரும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.  

அதேபோல் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி கப்பலிலும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.  

ஒவ்வொரு விமானமும் 20நிமிடங்கள் பறந்துவிட்டு மீண்டும் கப்பலில் வந்து இறங்கும் காட்சிகள் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்ததாகவும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்தபடியே போர் பயிற்சியில் ஈடுபட்டதால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்ததாகவும் இந்திய நிருபர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.  

கடலில் மிதவை மூலமாக போடப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அடையாளம் கண்டு அவற்றை தாண்டி முன்னேறிச் செல்வது? இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட சவால்களை சமாளிப்பது, நீர்மூழ்கி கப்பல் தடுப்பு போர் பயிற்சி, வான்வெளி தாக்குதலை எதிர்கொள்வது உள்ளிட்ட பலவித பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.  

மலபார் கூட்டு கடற்படை பயிற்சி என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல, மாறாக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே பயிற்சியில் ஈடுபட்டதாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படை அதிகாரிகள் அப்போது கூட்டாக வெளியிட்டிட கருத்தாகும்.  

கடற்படையில் அவ்வப்போது ஏற்படுகின்ற சவால்களை சந்திப்பதற்காகவே தாம் தமக்கிடையேயான நவீன தொழில்நுட்ப அறிவை இந்த பயிற்சிகளின் ஊடாக பகிர்ந்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.  

அதேவேளை குறித்த பயிற்சி மிக முக்கியமாக இந்தோ-ஆசிய பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உதவும் எனபது தமது நம்பிக்கை என்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை தொடர்ச்சியாக ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இது கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற ‘இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கட்டமைப்பு’ ஒப்பந்தத்தின் பிரகாரம் தொடங்கியது எனலாம்.  

இந்த ‘மலபார்’ கூட்டு கடற் பயிற்சியில் கடந்த 2007-ம் ஆண்டே ஜப்பான் கடற்படையும் இணைந்து கொண்டது.  

இதன் முதல்கட்டம் ஜப்பானில் உள்ள சசேபோ கடற்படை தளத்திலும், பின்னர் பசிபிக் கடற்பகுதியிலும் இந்தகைய கூட்டுபயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  

 

ஜேம்ஸ்   

Comments