இ.தொ.கா. யாருக்கு ஆதரவு? | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.கா. யாருக்கு ஆதரவு?

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான இறுதி முடிவெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடுகிறது. 

இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தேசிய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கடந்த புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். என்றாலும், அதனை இ.தொ.கா முற்றாக மறுத்திருந்ததன் பின்புலத்திலேயே இன்று அதன் தேசிய சபை கூடுகிறது. 

ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரதான கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் விசேட குழுவொன்றை நியமித்து பிரதான கட்சிகளுடன் இ.தொ.கா. பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தக்குழுவின் அறிக்கையும் இன்று நடைபெறவுள்ள தேசிய சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென இ.தொ.கா. தனது இறுதி முடிவை இன்று அறிவிக்குமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ‘தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments