இனவாதத்தை பரப்பி அதிகாரத்தை கைப்பற்ற முயல்வது நாசகாரச் செயல் | தினகரன் வாரமஞ்சரி

இனவாதத்தை பரப்பி அதிகாரத்தை கைப்பற்ற முயல்வது நாசகாரச் செயல்

எதிர்தரப்பினர் தினம் தினம் அச்சத்தையும் பீதியையும் பரப்பி மோசமான கருத்துகளை மக்கள் மனத்தில் பதியவைக்கும் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்து அதிகாரத்தை கைப்பற்ற முற்பட்டு வருவதாகப் புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். 

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  எமது எதிர்தரப்பினர் தினம் தினம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றனர். பல்வேறு மோசமான கருத்துகளை மக்களிடம் விதைக்கும் வகையில் இனவாதம், மதவாதம், தேசியவாதம் மற்றும் மதப்பிரிவினைவாதத்தைத் தூண்டுகின்றனர். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை  மற்றும் சகோதரத்துவத்தை இல்லாதொழிப்பதே இவர்களது நோக்கமாகவுள்ளது. 

இந்நாட்டில் தேசியப் பாதுகாப்பு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஒற்றுமை என்பன அத்தியாவசியமானது. இன, மத பேதங்களை உருவாக்கி நாட்டைப் பாதுகாக்க முடியாது. நாம் இந்த நாட்டை நேசிக்கின்றோம். நாட்டைப் பாதுகாக்க நினைக்கும் நபர்கள். தேர்தலை இலக்குவைத்து இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டுவார்களாயின் அஃது அவர்கள் நாட்டுக்கு செய்யும் நாசகாரமான செயலாகும். 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, உண்மையான சிங்கள பௌத்தராக செயற்பட்ட போதிலும், ஒருபோதும் இனங்களுக்கிடையில் பிரிவினையையும், குரோதங்களையும் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டிருக்கவில்லை. அவர் இந்நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க அமைச்சொன்றையும், நிதியமொன்றையும் உருவாக்கினார். இனவாதத்தைத் தூண்டாத வகையிலேயே பௌத்தத்தை அவர் பாதுகாத்தார். எதிர்தரப்பினர் பௌத்தத்தை முன்னிறுத்தி அவர்கள்தான் பௌத்தத்தின் உரிமையாளர்களெனக் காட்ட முற்படுகின்றனர். 

அவர்கள்தான் உண்மையான பௌத்தர்கள் என்றால், பௌத்த சாசனத்தை பாதுகாக்க இதுவரை என்ன செய்தனர் என்பதை கேட்க விரும்புகிறேன் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments