எல்பிட்டி தேர்தல் முடிவு: ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது | தினகரன் வாரமஞ்சரி

எல்பிட்டி தேர்தல் முடிவு: ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலின் தோல்வியை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், இத்தேர்தலின் பெறுபேறுகள் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதென அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எல்பிட்டி தேர்தல் தோல்வியை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பெறுபேறுகள் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வகையிலும் பாதி ப்பை ஏற்படுத்தாது. குறைபாடுகளை சரிசெய்து கொண்டும் சரியான பாதையில் பயணிப்போம். 

எல்பிட்டி பிரதேச சபையில் வாக்கு சதவீதம் ஐ.தே.கவுக்கு கடந்தகாலத்தில் இருந்ததைபோன்றே உள்ளது.

இந்த முடிவுகளை ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். அவர்களது கனவு நிறைவேறாது. சஜித் பிரேமதாச உறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவார் என்றார். 

இதேவேளை, இந்த ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் நளின் பண்டார, 

எல்பிட்டி பிரதேச சபை என்பது முழு நாடல்ல. நான்கு தேர்தல்களில் படுதோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, இந்த வெற்றியை வைத்து நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்.

நவம்பர் 16ஆம் திகதி முழு நாட்டிலும் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார்.

இதனை அவர்கள் பார்க்கவே போகின்றார்கள் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments