கிழக்கில் தமிழர்களின் நிலையை மோசமாக்கியது கூட்டமைப்பே | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கில் தமிழர்களின் நிலையை மோசமாக்கியது கூட்டமைப்பே

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலையைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மோசமாக்கியதென்று தெரிவித்துள்ள வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளருமான  அ.வரதராஜப் பெருமாள், மாகாண சபையைப் பலப்படுத்த, பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைமேற்கொள்ளுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைப்பற்றிய முடிவை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பிருந்தே மேற்கொண்டு தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்த வரதராஜப் பெருமாள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வடக்கு, கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவை வழங்குவார்கள் எனத்தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்லடியில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

"பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து 65 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக  வருவார் எனப் பல கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.  அதேபோல் மலையக மக்கள் மத்தியில் இருந்து 50 வீதத்துக்கும் அதிகமான  வாக்குகளையும் அவர் பெறுவார்.

முஸ்லிம் மக்களிடம் இருந்தும் மிகக் கணிசமான அளவு வாக்குகளைப்  பெறுவார். ஆகவே,வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களும் இன்றைய  காலத்தின் தேவையையும் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும்  ஏற்படுகின்ற மாற்றங்களையும் கருத்தில் எடுத்து மிகப் பெருமளவில் தாமரை  மொட்டுக்கு வாக்களிப்பார்கள்" என்று தாம் எதிர்பாரப்பதாகவும் அவர் மேலும் கூறினார். (வி)

கல்லடி குறூப் நிருபர்

Comments