சு.க: உட்கட்சி முறுகல் தீவிரம் | தினகரன் வாரமஞ்சரி

சு.க: உட்கட்சி முறுகல் தீவிரம்

கட்சி இரண்டாக உடையும் சாத்தியம்; கைமாறுமா கட்சி தலைமைத்துவம்?

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்க முடிவெடுத்ததால், கட்சியின் ஒரு தரப்பினர் அதிருப்தியின் உச்சகட்டத்திற்குச் சென்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், கட்சியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசார மேடைகளிலும் கலந்துகொண்டுள்ளமையால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் அடிமட்ட அங்கத்தினர்களும் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் பெரும்பாலும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாட்டை இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட தலைவர் ஒருவர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். 

பெரும்பாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடும் நிலைக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இந்த முரண்பாட்டு அணியினர் ஒன்றிணைந்து சுதந்திரக் கட்சியை வழிநடத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இவர்களுள், ஆரம்பத்திலிருந்தே கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்டோர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கட்சியை வலுப்படுத்த முயற்சித்து வருவதாகத் தெரியவருகிறது. இது குறித்த முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை (16) நடைபெறுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்குக் கடிதம் அனுப்பியதைச் சுட்டிக்காட்டிய அந்த சிரேஷ்ட தலைவர், பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி இணைந்து உடன்படிக்ைக கைச்சாத்திட்ட தினத்திலிருந்து அதன் அழிவு ஆரம்பித்துவிட்டதாகவும் விசனம் தெரிவித்தார். 

இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்வதால், சுதந்திரக் கட்சி கரைந்துபோகும் என்பதைத் தாம் ஆரம்பம் முதற்கொண்டே சுட்டிக்காட்டி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் தேசிய தேர்தலான ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி போட்டியிடாமல், அந்நியப்பட்டிருப்பது கட்சி அங்கத்தினர்கள் மத்தியில் கடும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

விசேடமாக, பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சுதந்திரக் கட்சியினரைப் பழிவாங்கும் போக்கினைப் பிராந்திய அமைப்பாளர்கள் கொண்டிருப்பதால், கட்சியின் உயர் மட்டத்தினர் தற்போது எடுத்துள்ள முடிவுக்கு எவ்விதத்திலும் உடன்பட முடியாதென்று அவர்கள் தலைமைப்பீடத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில், சுதந்திரக் கட்சியின் மாற்றுக்குழுவினராகத் தற்போது உருவெடுத்துள்ள தரப்பினர், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைப்பற்றி இன்னும் ஓரிரு தினங்களில் முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் அவருடன் கலந்துரையாடி தமது முடிவை அவர்கள் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.ஏ.எம். நிலாம்

Comments