வாக்காளர் அட்டை விநியோகத்தை நவ. 03 இற்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு | தினகரன் வாரமஞ்சரி

வாக்காளர் அட்டை விநியோகத்தை நவ. 03 இற்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அரச அச்சகர், எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

அரசாங்க அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தினகரன் வார மஞ்சரிக்குத் தகவல் தருகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கமைவாக வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

வாக்குச் சீட்டுக்கள் அச்சிட்டு முழுமையாகத் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் வரை அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கும் அதனை சூழவுள்ள பிரதேசத்திலும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒருகோடி 59 இலட்சத்தைத் தாண்டியுள்ளதால், இந்த முறை ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுவதாகவும் அரச அச்சகர் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சகல மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவை அடுத்த வாரம் முதல் வாக்காளர்களுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. 

எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகளை விநியோகித்து முடிக்குமாறு ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மாவட்டத்தேர்தல் அலுவலகங்களின் பிரதி ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

சனிக்கிழமைகளில் தபால் ஊழியர்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன், வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய பிரதிகளும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

-எம்.ஏ.எம். நிலாம்   

Comments