விஞ்ஞாபனம் வெளியானதும் மக்களுடன் பேசிய பின்னரே கூட்டமைப்பு முடிவெடுக்கும் | தினகரன் வாரமஞ்சரி

விஞ்ஞாபனம் வெளியானதும் மக்களுடன் பேசிய பின்னரே கூட்டமைப்பு முடிவெடுக்கும்

ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கைகளை வெளியிட்ட பின்னர் எமது மக்களுடன் கலந்துரையாடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த மாவை சேனாதிராசாவிடம் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந் நிலையில் இத்தேர்தல் தொடர்பில் பல கட்சிகளும் தமது நிலைப்பாடுகளையும் வெளியிட்டிருக்கின்றன.

அதனால், இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்றும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றனர் என்றும் பலரும் எம்மிடம் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். 

இந் நிலையில் தமிழ் மக்களுடைய விடுதலை, தமிழ் மண்ணின் விடுதலை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இதற்கமைய அந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடைய கட்சிகளுடன் அதிகாரப் பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருக்கின்றோம். ஆனாலும் இன்னும் பல கட்சிகளுடனும் வேட்பாளர்களுடனும் பேசவேண்டியும் இருக்கின்றது. 

ஆகையினால், போட்டியிடும் கட்சிகளும் எமது மக்களுக்கு என்ன வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள் என்பதையும் அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் என்னென்ன விடயங்களைப் குறிப்பிடப் போகின்றார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.

அதிலும் குறிப்பாக இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே முக்கியமானது. 

அதனடிப்படையில் முழு இலங்கையிலும் மக்கள் வாக்களிக்க இருக்கின்ற இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுதொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும்.

அவ்வாறு இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன அடிப்படைகள் என்பதை பகிரங்கமாக முன்வைத்து தமது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். 

அவ்வாறு பகிரங்கமாக முன்வைக்கப்படுகின்ற தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் எங்கள் மக்களுடனும் நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாமென்று நினைக்கிறேன். இதற்காக மாவட்ட ரீதியாக எங்கள் மக்களுடன் சந்திப்புக்களையும் நடத்தி வருகின்றோம்.

அதனடிப்படையில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்துதேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்ற முடிவை உரிய நேரத்தில் கூட்டமைப்பாக நாங்கள் அறிவிப்போம் என்றார். 

பருத்தித்துறை விசேட நிருபர்   

Comments