கவிதை போன்றது ஸ்பானிஷ் | தினகரன் வாரமஞ்சரி

கவிதை போன்றது ஸ்பானிஷ்

மொழிபெயர்ப்பு எழுத்தாளர் அமரந்தா கூறுகின்றார்

தமிழ் மொழிக்கு உலக மொழி இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவர்களில் அமரந்தா முக்கியமானவர். அதிலும் குறிப்பாக லத்தீன் அமெரிக்க இலக்கியத்துடன் பரிச்சயம் கொண்ட எவரும் அமரந்தாவை அறிந்திருப்பர். இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களை உள்வாங்கி தனது லாவகமான மொழிநடையில் வாசகரிகளிடம் கொண்டு சேர்த்த பெருமை கொண்ட விசாலாட்சி எனும் இயற்பெயர் கொண்ட அமரந்தா, தற்போது காக்கைச் சிறகினிலே எனும் சஞ்சிகையின் ஆசிரியர் குழாமில் இருக்கின்றார். ‘காக்கைச் சிறகினிலே’ சஞ்சிகையை் பிரபல்யப்படுத்தும் முகமாக இலங்கைக்கு வந்த அவர் தினகரன் ஆசிரியர் பீடத்துக்கும் வந்திருந்தார். புனைவிலக்கியத்தைப் படைப்பதிலும் பார்க்க மொழிபெயரப்பிலக்கியத்தில் உள்ள கஷ்டங்கள், மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றி அவர் மனம் திறக்கின்றார்...  

மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் அதிகளவு ஈடுபாடு கொண்டிருக்கும் நீங்கள இலத்தீன் அமெரிக்க நூல்களையே அதிகளவில்் மொழிபெயர்க்க பிரத்தியேக காரணம் ஏதும் உண்டா? 

நான் அதிகளவில் இலத்தீன் அமெரிக்க நூல்களைத்தான் மொழிபெயர்த்திருக்கின்றேன. உண்மைதான், அதேபோல வேறு இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பிற்காகத் தேர்தெடுத்திருகின்றேன். கென்யாவின் பிரபல எழுத்தாளரான பேராசிரியர் கூகி வாத்தியாங் கோ DEVIL ON THE CROSS என்றதொரு நாவல் எழுதியிருந்தார். மூன்றாம் உலக நாடுகளில் ஆபிரிக்க நாடுகளில் தான் முதன்முதலில்் உலக மயமாதல் திணிக்கப்பட்டு பொருளாதாரங்கள் சிதைக்கப்பட்டன. கென்யாவும் ஒரு காலனித்துவ நாடாக இருந்ததுதான். காலனித்துவ நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்கும் முயற்சி ஆபிரிக்காவில் இருந்தே ஆரம்பமானது.

அங்கிருந்தே இலத்தீன் அமெரிக்காவுக்குப் பரவின. பூகோளமயமாக்கல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர் நாவலாகப் பதிவு செய்திருக்கின்றார். அதுவும் மிகவும் சீரியசான ஒரு விடயத்தை, நகைச்சுவையாக அனைவருக்கும்் புரிம்படி அவர் எழுதியிருப்பார். காதல் தோல்வி அதன் பின்னர் வீர மங்கை உருவாவது என்று கதை நகரும். ஆனால் இவற்றின் பின்னால் நுங்கி வாத்தியாங்கோ சொல்ல விளைந்திருப்பது சந்தைப் பொருளாதாரம் எந்தளவுக்கு மக்களைப் பாதிக்கின்றது என்பதைத்தான். கார்பரேட் வர்த்தகர்களை கொலைகாரர்கள், திருடர்கள் என்று மிகவும் நகைச்சுவையாக எழுதியிருப்பார். இது முக்கியமானது.  

அதைத்தவிர பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கின்றேன்.  

சேகுவேரா கியுூபாவுக்கென்று ஒரு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் என்பது அனேகருக்குத் தெரியும். அவர் வகுத்த புதிய பொருளாதாரக் கொள்கை அவர் கொல்லபட்டதால் வெளிவராமலேயே போய்விட்டது. மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் 2010ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது ஆராய்ச்சிக்காக அதனை எடுத்திருந்தார். The Economics of Revolution என்பது அதன் பெயர். அதனை தமிழில் மொழி பெயர்த்தேன். அதேபோல வட அமெரிக்காவின் தொழிற்கட்சியின் செயலாளர் ஜாக் பான்சன் என்பவரும் ஸ்டீவ் கிளார்க்கும் எழுதிய எழுதிய Cheguera and His Marxist continuity எனும் கட்டுரையை நான் தமிழில் சேகுவேராவும் மார்க்சியப் பொருளாதாரமும் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கின்றேன், அதுவும் நூலாக வெளிவந்திருக்கின்றது. 

பொருளாதாரக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதென்பது இலகுவானதல்லவே?  

உண்மைதான். பொருளாதாக் கட்டுரைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றின் சாராம்சத்தை உள்வாங்கித்தான் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் எனது மொழிபெயரப்புகள் பொருளாதாரத்துறையோடு மாத்திரம் மட்டுப்பட்வையல்ல 

நிக்காரகுவா துணை ஜனாதிபதிக்கு காஸ்ட்ரோ அளித்த பேட்டியை மொழிபெயர்த்திருந்தேன். இது இலக்கியம் தவிர ஏனைய துறை சார்ந்த எனது மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஒன்று. 

அனேகமாக நீங்கள் மொழிபெயர்க்கும் நூலின் மூல மொழி எதுவாக இருந்தாலும் அவற்றை நீங்கள் ஆங்கிலத்தில் இருந்துதானே மொழிபெயர்க்கின்றீர்கள், அவ்வாறில்லாமல் மூல மொழியில் இருந்தே மொழிபெயர்க்கப்படுகையில் அப்படைப்பு இன்னமும் மெருகுபெறக்கூடுமல்லவா?  

உண்மைதான், நான் மொழிபெயர்த்த இலக்கியங்கள் எல்லாமே ஸ்பானிஷ் மொழியை மூல மொழியாகக் கொண்டவை. அந்த மொழியைக் கற்றுக்கொள்ள நான் சற்று முன்னால் போயிருக்க வேண்டும். நான் சுமார் 20ஆண்டுகள் மத்திய அரசுப் பதவியில் இருந்து விட்டு 47வயதில் கற்க முயற்சி செய்தேன். ஸ்பானிஸ் மொழிப் பரீட்சையில் சித்தியெய்தினேன். ஆனாலும் அந்த மொழி எனக்கு கைவரவில்லை. ஏனென்றால் ஸ்பானிஷ் இலக்கணம் மிகவும் கடினமானது. அதனை மனப்பாடம் செய்வதென்பது மிகவும் கடினமானது. படித்ததில் இருந்து பேசவாவது கற்றுக்கொள்ளலாமா என்று முயற்சி செய்தேன்.ஆனால் நான் புழங்கும் வட்டத்தில் என்னுடன் ஸ்பானிஷ் மொழி பேச யாரும் இல்லை. சிறு வயதில் கற்க ஆரம்பித்திருந்தால் நிச்சயமமாக கற்றிருப்பேன்.  

கஸ்ரோவின் சொற்களை மொழிபெயர்க்கும் போது, சேகுவேராவின் சொற்களை மொழிபெயர்க்கும் போது, இது மூலமொழியில் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பதுண்டு. குறிப்பாக, சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது அவதானித்தருக்கின்றேன. வரிகளெல்லாம் கவிதைகள் போல இருக்கும். ஆங்கிலத்திலேயே இவ்வாறு இருந்தால் ஸ்பானிஷ் மொழியில் எவ்வாறு இருக்கும் என்று நான் அனேக தடவைகள் வியந்ததுண்டு. ஸ்பானிஷ் படித்தால் இன்னமும் அழகாக மொழிபெயர்க்க முடியுமே என்று எண்ணித்தான் அந்த மொழியைக் கற்க ஆரம்பித்தேன். ஸ்பானிஷ் நிச்சயமாக ஒரு கவிதை போன்ற மொழிதான் என்பது நான் வாசித்த கதைகளில் இருந்து நான் அறிந்து கொண்டது. உதாரணமாக மலேரியா, சாவின் விளிம்பில், ரொசாரோவும் மழையும் போன்ற கதைகள் முழுக்க முழுக்க கவிதைகள் போன்றவை.  

அமரந்தா என்ற உங்களது புனைப்பெயர் கூட இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பாதிப்பில் வைக்கப்பட்ட பெயரா? 

நிச்சயமாக, கார்ஸியா மார்க்குவெஸ்ஸின் நோபல் பரிசு பெற்ற நாவலான ‘one hundred years of solitude’ மனதில் ஏற்படுத்திய தாக்கம்தான் அந்த பெயரில் நான் எழுதக் காரணமாயிற்று. அந்த நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்தான அமரந்த்தா. அந்த நாவலில் வரும் கதாநாயகனின் தங்கை. அமரந்தா இந்தக் கதையில் மிகவும் தனித்துவமானவளாகத் தெரிவாள். மிகவும் சுதந்திரமான சிந்தனை கொண்ட, நினைத்ததும் பறந்துபோகக்கூடிய ஒரு பெண். அதனால் அந்தக் கதாபாத்திரம் என்னைக் கவர்ந்தது.  

உங்கள் இலக்கியப் படைப்புகள், பொருளாதாரம், இலக்கியம் என்பதாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணியச் சிந்தனையாளர் அல்லவா? 

என்னைப் பொறுத்தவரை அதனை நான் ஒரு அடையாளமாகவே என்றும் கருதியதில்லை. வெறுமனே கோஷங்களாகவும் வேஷங்களாகவுமே நான் பெண்ணியத்தைப் பார்க்கின்றேன் இப்போது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் தான் நினைத்தவாறு சுதந்திரமாக வாழ்வதுதான் பெண்ணியம் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை, பொருளாதார சுதந்திரம் மற்றும் சுயமாக சிந்திக்கும் திறன் என்பவைதான். அதெல்லாம் இல்லாமல் பெண்ணியம் பேசுவதெப்படி? இந்த மூன்றும்தான் என்னைப்பொறுத்தவரை பெண்ணியம் என்பது. அந்தநிலையில் இல்லாமல் பேசப்படுவதெல்லாம் வெறும் வெற்றுக் கோஷங்கள்தான்.       

(தொடரும்...)

வாசுகி சிவகுமார் 

Comments