கண்ணை வைத்து வியாபாரம்! | தினகரன் வாரமஞ்சரி

கண்ணை வைத்து வியாபாரம்!

ஊழல் என்றால், நிர்வாகத்தில் முறைகேடு, நடத்தைக்ேகடு, ஒழுக்கக்ேகடு, சீரழிவு என்று பல அர்த்தங்கள் உண்டு. சேறு, சகதி, கழிவு என்றும் அர்த்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எல்லாச் சொற்களுக்கும் ஊழல் பொருந்திப்போகத்தான் செய்கிறது!  

ஆச்சரியம் என்னவென்றால், சேறு, சகதி, கழிவு போன்றவற்றில்கூட இன்று ஊழல் செய்கிறார்கள். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஊழல் தாண்டவமாடிக்ெகாண்டிருக்கின்றது. இதனால், தனி மனிதர்கள் மட்டுமல்லாது, சமூகமும் பாதிக்கின்றது. இறுதியில் அது நாட்டைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்குகின்றது.  

சந்தையில் காய்கறி விற்பவர்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள், கைப்பேசி விற்பனையாளர்கள், பஸ் நடத்துநர்கள், இலத்திரனியல் பொருள்களைத் திருத்துவோர், நடைபாதை வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்க்ைக நிலையின் இருப்புக்காக ஊழலைக் கையாளத்தான் செய்கிறார்கள். இன்னும் சட்டத்தரணிகள், மருத்துவர்கள்கூட ஊழல்புரிகிறார்கள்.  

பொதுவாக அரச நிறுவனங்களில் ஊழல் நிறைந்து கிடப்பதை அரச அதிகாரிகள் மட்டுமன்றித் தற்போதைய அரசில்வாதிகளும் நிரூபித்துக்ெகாண்டிருக்கிறார்கள். நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பில் மக்கள் சுயமாக உழைத்துண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மாத்திரமே செல்வச் செழிப்புடன் வாழக்கூடியதாக இருக்கின்றது. வாய்ப்புகள் எல்லோருக்கும் சமமாக இல்லாததன் காரணத்தாலும் தேவைக்கு ஏற்றவாறு ஊதியம் கிடைக்காததாலும் அவர்கள் ஊழலில் இறங்குகிறார்கள். மேலும் ஒரு தரப்பினர், உபரியாக வருமானத்தை ஈட்டிக்ெகாண்டாலும், பேராசையினால் மேலும் மேலும் சேகரித்துக்ெகாள்ளும் நோக்கில் ஊழல் செய்கிறார்கள்.  

இலங்கையைப் பொறுத்தவரை, ஊதியத்தினாலன்றி ஊழல் மூலம் அதுவும் இலஞ்ச ஊழலின் மூலம் சுளை சுளையாகப் பணம் உழைக்கும் நிறுவனங்கள் என்ற பெயரை சில முக்கிய நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன. ஆட்பதிவுத் திணைக்களம், கடவுச்சீட்டு வழங்கும் திணைக்களம், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திணைக்களம், (மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்) செயலகங்கள், பொலிஸ் துறை, உள்ளூராட்சி மன்றங்கள் எனச் சொல்லிக்ெகாண்டே போகலாம்.  

எந்த நிறுவனத்திலாவது ஓர் அலுவலைச் செய்துகொள்ள வேண்டும் என்றால், இலஞ்சம் கொடுக்காமல் செய்துகொள்ள முடியுமா? என்பது சந்தேகமே! நிலவுகின்ற கெடுபிடிகளுக்கு மத்தியில் எவ்வளவாச்சும் கொடுத்துத் தமது அலுவலைச் செய்துகொள்ளத்தான் பார்க்கிறார்கள் என்கிறார் நண்பர். அந்த 'எவ்வளவாச்சும்' வாங்கிக்ெகாள்ளாமல் கருமமாற்றிக்ெகாடுப்பதற்கு அதிகாரிகள் இல்லாமலும் இல்லை. ஆனால், அவ்வாறான மனப்பாங்குடையோர் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.  

உதாரணமாக, இந்தப் பகுதியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த விடயத்தைத்தான் நண்பர் மீண்டும் நினைவுபடுத்தி, நீண்டகாலமாக நடந்து வரும் ஓர் அநியாயத்தை ஆதாரபூர்வமாகக் கண்டதாகச் சொல்கிறார். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவச் சான்றிதழ் (மெடிக்கல்) பெறச் செல்வோர் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாவதாக நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால், கடந்த வாரம் நண்பருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கிறது.  

அவரது அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக மருத்துவச் சான்றிதழ் பெறச் சென்றிருக்கிறார். இரத்த அழுத்தம், உடல் இயக்கத் தகுதி, இரத்தத்தில் சர்க்கரை அளவு எல்லாவற்றையும் சோதித்துள்ளார்கள். எல்லாவற்றிலும் பாஸ்! அடுத்து கண் பார்வையைப் பரிசோதிக்க வேண்டும். பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொருவராகச் சோதித்துவிட்டு...இலக்கங்களையும் எழுத்துக்களையும் (அவருக்குத் திருப்தியாக) சரியாகச் சொன்னவர்களை வெளியில் அனுப்பியிருக்கிறார். ஒரு சிலர் அறையிலேயே இருக்க வேண்டும் என்று கட்டளை. அடுத்ததாக நண்பரின் வரிசை. பல தடவை அதைப் பார், இதைப்பார் என்று சொன்ன அந்தப் பெண், இவரையும் வெளியில் போகவேண்டாம் என்கிறார். "உங்கள் கண்ணாடியில் பார்வை ​தெளிவு இல்லை" என்கிறார். "ஐயோ, நான் இந்தக் கண்ணாடியைச் செய்து இரண்டு மாதம்தானே ஆகிறது!"  

"என்றாலும் இது அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவச் சான்றிதழுக்குப் போதாது" என்று ஒரு சிறு துண்டில் குறித்துக்ெகாடுக்கிறார். 'கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு மீண்டும் வரவேண்டும்' என்று துண்டில் எழுதப்பட்டிருக்கிறது. அறைக்கு வெளியில் வருகிறார்.  

"இப்ப என்ன செய்வது"  

வெளியில் உள்ள மற்றொரு பெண்மணி விடயத்தைக் கேட்டு இப்படி அறிவுறுத்துகிறார்.  

"நீங்கள் வெளியில் சென்று, வீதியைக் கடந்ததும் ஓர் இரண்டு மாடிக் கட்டடம் இருக்கும். அதில் உள்ள "அந்தக் கண்ணாடி" கடையில் ஒரு பெண்ணிருப்பார். அவரிடம் சென்று எனக்கு ஒரு கோல் எடுங்கள், நான் விடயத்தைச் சொல்கிறேன்"  

அவர் சொன்னபடி எல்லாம் நடக்கிறது. புதிதாகச் செய்த கண்ணாடியில், பார்வை குறைபாடு என்று, மெடிக்கலுக்காக மட்டும் 'லென்ஸ்' மாற்றப்படுகிறது. 2500ரூபாய். நண்பர், லென்ஸ் மாற்றப்பட்ட கண்ணாடியுடன் சென்று மீண்டும் பரீட்சைக்குத் தோற்றுகிறார். இப்போது பாஸ்! ஆனால், அவரால் அந்தக் கண்ணாடியைப் பயன்படுத்த முடியவில்லை. கிட்டப் பார்வை (தூரப்பார்வை) சரியாக இருக்கிறது. வாசிக்கவோ அருகில் பார்க்கவோ முடியாது. தாம் முன்பு கண்ணாடி செய்துகொண்ட நிறுவனத்திற்கு நேராக வருகிறார். அங்குப் பரிசோதித்துப் பார்த்ததில், ஒரு தவறும் இருக்கவில்லை. 'அங்கு' எல்லாம் வியாபாரத்திற்காகச் செய்திருக்கிறார்கள் என்பது புரியவந்திருக்கிறது. மீண்டும் தாம் செய்துகொண்ட பழைய லென்ஸைப் போட்டுக்ெகாண்டு வீடு சென்றிருக்கிறார்.  

இது நியாயமா? மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் ஊழலை ஒழிப்பதற்காகத்தானே அதனை அரசாங்கம் ஒரு முறைப்படுத்தியிருக்கிறது. இப்போது இந்த ஊழலை என்னவென்று சொல்வது? கண்ணை வைத்து வியாபாரம் செய்வதை எப்படி கண்டுபிடிப்பது?  

ஒரே வழி, மீண்டும் பழைய முறையில், 'விண்ணப்பதாரியே மருத்துவச் சான்றிதழைக் கொண்டு வரவேண்டும்' என்பதை நடைமுறைப்படுத்துவதுதான். வேண்டுமானால், சில முக்கியமான நிபந்தனைகளை விதிக்கலாம். அப்படிச் செய்தால், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மக்கள் படும் அவஸ்தையை இல்லாமற்செய்யலாம். இதை வாசிக்கும் தமிழ் தெரிந்த அதிகாரிகள், உரிய கவனம் செலுத்துவார்களாக!  

Comments