ஜனாதிபதியின் நடுநிலை வகிப்பு ஆரோக்கியமானதொரு முன்மாதிரி | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் நடுநிலை வகிப்பு ஆரோக்கியமானதொரு முன்மாதிரி

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஒருவர் அத்தேர்தலில் எந்தவிதமான தலையீட்டையும் செய்யாது நடுநிலை வகிப்பதென்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு அபூர்வ அரசியல் சம்பவமாகும்.  

இலங்கை அரசியல் வரலாற்றில் மிக அரிதான இத்தன்மை பற்றிய இறுதி முடிவு சில தினங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. எட்டு ஆசனங்களுடன் எதிர்கட்சியில் விழுந்து கிடந்த காலத்தில் கூட அரச தலைவரைத் தெரிவு செய்யும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் முதல் முறையாக இம்முறை தம்மை தனியாகவோ முதன்மைப்படுத்தியோ தேர்தல் களத்தில் இறங்குவதை தவிர்த்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக 1994ஆம் ஆண்டு முதல் தம்மை முதன்மைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு இந்நாட்டின் அதிக எண்ணிக்கையிலான ஜனாதிபதிகளை உருவாக்கிய கட்சி என்ற பெருமிதத்தைக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மைப்படுத்திய கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தத்தக்க ஜனாதிபதி வேட்பாளராக தமது பொதுச் செயலாளரையே பெற்றுக் கொடுக்கின்ற அளவிற்கு பலம் பொருந்திய நிலையிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே இன்றைய ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை தவிர்த்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது.  

இந்தப் பின்னணியிலும் அதிகாரத்தில் இன்னும் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் அடுத்தபடியாக அப்பதவிக்கு தெரிவு செய்யப்படவிருப்பவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக தமது பலத்தை பயன்படுத்தாதிருப்பதன் மூலம் தேர்தல் களத்தில் போட்டியிடும் சகல போட்டியாளர்களுக்கும் சமமான ஒரு ஆடுகளத்தை உருவாக்க முன்வந்திருக்கின்றமை நமது நாட்டு அரசியல் கலாசாரத்தை பொறுத்தவரையில் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு அடுத்ததாக அப்பதவிக்கு வரவிருக்கின்றவரை தெரிவு செய்யவிருக்கும் தேர்தலின் போது எத்தரப்பையும் சாராதிருக்க எடுத்திருக்கும் முடிவானது ஆரோக்கியமானதொரு முன்னுதாரணமாகும். அதற்கும் மேலாக அத்தேர்தல் முடியும் வரை தனது பக்கச்சார்பற்ற தன்மையினை வெளிப்படுத்தும் வகையில் இதுவரை காலமும் தம்வசம் வைத்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விடைபெற்று அப்பொறுப்பின் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரத்தை கட்சியின் நீண்ட கால அங்கத்தவரும் தலைமைத்துவத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச அவர்களிடம் கையளித்திருக்கின்றார்.

அந்தவகையில் ஜனாதிபதியின் நடுநிலைக் கொள்கையானது இந்த நாட்டில் ஒரு நல்லதோர் நகர்வாக அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் எண்ணுகின்ற ஒரு நிலைமை இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.  

பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் தேர்தலில் நடுநிலை வகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடாத சந்தர்ப்பத்தில் மட்டுமே இது சாத்தியமாகும். ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மற்றும் டீ.பீ விஜேதுங்க ஆகியோர் முறையே 1988 மற்றும் 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடவில்லை, ஆயினும் அச்சந்தர்ப்பங்களில் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணசிங்க பிரேமதாசவை 1988 ஆண்டிலும் காமினி திசாநாயக்க மற்றும் ஸ்ரீமா திஸாநாயக்கவை 1994 ஆண்டிலும் ஆதரித்தனர். அதேபோன்று சுதந்திரக் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தார். இருப்பினும், ஜே.ஆர், விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா ஆகிய மூன்று ஜனாதிபதிகளும் தேர்தல் நடைமுறைகளில் தலையிடவில்லை என்பதுடன் அமைதியான தேர்தல் மற்றும் அமைதியான அதிகார மாற்றம் என்பன இதன்போது உறுதி செய்யப்பட்டன. இந்த முன்னுதாரணங்களின் மேலுமொரு முன்னேற்றகரமான அத்தியாயமாகவே மைத்ரியின் இந்த முடிவு அமைந்திருக்கின்றது.  

இம்முறை தேர்தல் மிகவும் கடுமையானதொரு போட்டியாக தோன்றுவதனால் சில சமயங்களில் வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி சிறிசேனவின் நடுநிலை வகிப்பதற்கான முடிவு, தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டமும் ஒழுங்கும் முறையாக பேணப்படுவதை உறுதிப்படுத்த உதவும் என்பதே அரசியல் நோக்குநர்களின் கருத்தாக இருக்கின்றது.  

ஜனாதிபதி சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பதில் கடமை தலைவரை நியமித்து தமது தனிப்பட்ட செல்வாக்கை செலுத்துவதை தவிர்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி தற்போதைய கட்சியின் செயலாளரான பாராளுமன்ற     உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியிருக்கின்றார். இந்த முடிவானது நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதித் தேர்தல் நியாயமானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும் என அவர் விரும்புவதனாலேயே இந்த முடிவை எடுத்திருக்கின்றார். ஆகையால் இது அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என நான் கருதுகின்றேன்.  

மேலும் இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியன ஜனாதிபதியின் கீழேயே செயற்பட்டு வருகின்றன. எனவே ஜனாதிபதி தேர்தலின் போது அவர் நடுநிலை வகிப்பது அவசியம் என்றும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஜனாதிபதி ஆதரித்தால் அது ஒட்டுமொத்த செயன்முறையின் பக்கச்சார்பற்ற தன்மையையும் பாதிக்கும் என்றும் ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.  

இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஒருவர் போட்டியிடாத போதிலும் சுதந்திரக் கட்சியானது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வுக்கு ஆதரவளித்து, அவரின் வெற்றிக்கு சுதந்திரக் கட்சி முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் அக்கட்சியின் தலைவர் என்ற வகையில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நடுநிலை வகிப்பதென்பது அனைத்து போட்டியாளர்களுக்கும் பக்கச்சார்பற்ற ஒரு தேர்தல் களத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.  

சுதந்திரக் கட்சியின் இந்த முடிவுடன் 1956 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவினால் ஒருமுகப்படுத்தப்பட்ட சகல அணிகளும் இம்முறை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோடாபய ராஜபக்ஷவை ஆதரிக்கின்ற பின்னணியில், அந்த கூட்டணியின் தலைவராக தனது அதிகாரத்தை தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தாமை எதிர்தரப்பிற்கு நிச்சயம் நிம்மதியைப் பெற்றுக்கொடுப்பதாகவே அமையும்.  

கடந்த வார இறுதியில் முடிவுகளை வெளியிட்டிருக்கும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்த விதமும் அதன் முடிவுகளும் ஜனாதிபதி எடுத்துக்கொண்ட இந்த நடுநிலைக் கொள்கையின் சிறந்ததோர் வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றது.

அரச தலைமைத்துவத்தின் தலையீடு இன்மையால் சுதந்திரமான சட்டத்தை மதிக்கும் ஒரு தேர்தல் பெறுபேறுகள் கிடைத்திருப்பதுடன் வன்முறையற்ற சுதந்திரமான ஒரு தேர்தலையே மக்கள் விரும்புகின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. இத்தகையதோர் மகாத்மா அரசியலையே சாதாரண வாக்காளர்கள் விரும்புகின்றார்கள் என்பதை ஜனாதிபதியின் நடுநிலை வகிக்கப்போகும் அறிவிப்பின் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இரு மூத்த அரசியல்வாதிகளின் கீழ்காணும் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.  

ஜனாதிபதி அவர்களே தேர்தல் வெற்றியை தமக்கு சாதகமாக அமைத்துக் கொள்வதற்கு தமது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதிருப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவானது ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவாகும். அதற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்காலத்தின் உண்மையான வீரன் நீங்களே  

வாசுதேவ நாணயக்கார  

ஜனாதிபதி அவர்களே உங்களது இந்த முடிவானது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. மிக மிக அரிதான இந்த முடிவை எடுத்ததையிட்டு உங்களைப் பாராட்டாது இருக்க முடியாது. 

ரவிரத்தனவேல்  

Comments