திடுக்கிடச் செய்த தஜிகிஸ்தான் தகவல்கள்! | தினகரன் வாரமஞ்சரி

திடுக்கிடச் செய்த தஜிகிஸ்தான் தகவல்கள்!

யுனிவல் ஸ்டூடியோ லொஸ் எஞ்சல்ஸ் - ' த ஜோவ்ஸ்' திரைப்படத்தின் ஞாபகார்த்த சின்னம்

பரிஸ்தா அங்கிருந்த மூன்று வாரங்களும் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டேயிருந்தார். சீஸ் வகைகள், பொரியல்கள் மற்றும் பழங்களைக் கண்டால் போதும் வாங்கி குவித்துக் கொள்வார். தானும் கொறித்தபடி பிறருக்கும் வலுக்கட்டாயமாக உண்ணக் கொடுப்பார். அவ்வப்போது தனது எட்டு வயது மகன், திருமண வாழ்க்கை, சினிமா, செல்லப்பிராணி, தாய், உடன் பிறந்தோர், மருமக்கள் என அனைவரைப் பற்றியும் எம்மிடம் கூறி, கைப்பேசியிலுள்ள புகைப்படங்களையும் காட்டி மகிழ்வார்.  

பரிஸ்தாவுக்கு அலுவலக பொறுப்பு அதிகம். அவருடைய பணி சமூக பொறுப்பு வாய்ந்தது. அவர் ஊடகம், தொழில்நுட்பம், பாலினம் என பல துறைகளிலும் கற்றுத் தேர்ந்திருந்ததனால் அவருடைய பேச்சிலும் செயற்பாட்டிலும் பக்குவத்தையும் பொறுப்புணர்வையும் காண முடிந்தது.  

தன்னுடைய நாடு பற்றிய ஒட்டு மொத்த தரவுகளையும் அவரால் வழங்க முடியாது போனாலும் அவரது அமைப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். தஜிகிஸ்தானில் சுமார் 17 ஆயிரத்து 700 ஆண்பால் சேர்க்கையாளர்கள் உள்ளனராம். மாற்று பாலினத்தவர்கள் பற்றிய உத்தியோகப்பூர்வமான தகவல்கள் இல்லாவிட்டாலும் சுமார் 200 பேர் வரை இருக்கலாமென்றும் அவர் என்னிடம் கூறினார்.  

1992 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தஜிகிஸ்தானில் 11 ஆயிரத்து 367பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டமல்ல 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் எச்.ஐ.வி தொற்றுடன் 694பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பரிஸ்தா கூறியபோதுதான் அவருடைய அமைப்பு மற்றும் அது நாட்டுக்கு ஆற்றும் பங்களிப்பு பற்றி என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.  

அந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆண் சமூகத்தில் 99 சதவீதமானவர்கள் ஆண்களுடன் உடல் உறவு கொள்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். சிலர் ஆண்களுடன் மட்டும் தமது உறவை மட்டுப்படுத்தியுள்ளபோதும் பெரும்பாலானவர்கள் திருமணம் முடித்து மனைவி, குழந்தைகள் உள்ள நிலையிலும் ஆண்களுடன் உடலுறவு கொள்பவர்களாக உள்ளனர் என்ற தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது எனக்கு தூக்கிவாரிப்போட்ட மாதிரி இருந்தது. உண்மையைத்தான் சொல்கிறீர்களா, 99 சதவீதமா? என்று திரும்பவும் கேட்டேன், சந்தேகத்துடன். அவர் தனது தரவு சரிதான் என்றார்.  

சுயபாலின சேர்க்கை என்ற பேச்சு எழுந்தாலே பொதுவாக அனைவருக்கும் கிரேக்க நாடுதான் நினைவுக்கு வரும். சுயபால் சேர்க்கை அந்நாட்டில் ஒரு பண்பாடாகவே இருந்தது. கிரேக்க கப்பல்களில் வேலை செய்யும் நமது மாலுமிகளுக்கு இது தெரியும். சோக்கிரடீஸ் காலத்தில் ஆசிரியரிடம் கல்வி கற்க வரும் மாணவரை சுயபால் சேர்க்கைக்குப் பயன்படுத்திய பின்னரேயே மாணவராக அங்கீகரிக்கப்படுவது வழமை. சோக்கிரடீசின் மாணவரான அரிஸ்டோட்டிலும் தனது மாணவராக ஜூலியர் சீசரை ஏற்றபோதும் இதுவே நடந்தது. இவ்வழக்கம் தவறாகப் பார்க்கப்படவில்லை. இப்போது தஜிகிஸ்தானில் இவ்வாறான ஒரு பாலியல் பண்பாடு நிலவுவதை அறிந்து கொண்டபோது, அதிர்ச்சி ஏற்படாமலா இருக்கும்? சில நாடுகளில் ஏன் இப்படி அமைகிறது என்பது எனக்கு புரியவில்லை. என்றாலும் அனைத்து நாடுகளிலுமுள்ள ஆண்களும் பெண்களும் மேலோட்டமாக சாதாரண பாலியல் இச்சைகள் கொண்டவர்களாகக் காணப்பட்டாலும் உண்மையில் அவர்களிடம் வேறு பாலியல் இச்சைகள் மறைந்திருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.  

அதனால்தான் அங்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அப்பாவி மனைவி மற்றும் பிள்ளைகளும் இத்தொற்றுக்கு உள்ளாகும் துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மனம் நொந்து கொண்டார்.  

இதனால் எச்.ஐ.வி தொற்று, அதன் அபாயம், அதிலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், உபகரணங்கள் என்பவற்றை அவரது அமைப்பு ஒருபால் சேர்க்கையாளர்களுக்கு வழங்கி உதவி வருகின்றது. அமைப்பினால் கண்டறியப்பட்ட அனைத்து ஒரு பால் சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை எச்.ஐ.வி சோதனைகள் மற்றும் ஆணுறைகளையும் அவர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.  

இதையெல்லாம் விட திடுக்கிடும் விடயம் என்ன தெரியுமா? அயல் நாடான ரஷ்யாவில் பாலியல் தொழிலுக்குதான் அதிக கிராக்கியாம்! ஒரு மணித்தியாலத்துக்கான கட்டணம் ஆகக்குறைந்நதது ஐந்தாயிரம் ரூபெல்களில் இருந்து ஆரம்பிக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிஸ்தாமூ குலாவா 

பணமென்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்களே அது இது தானோ! விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தஜிகிஸ்தான் இளைஞர்களும் மாற்று பாலினத்தவர்களாக அதாவது யுவதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ரஷ்யா சென்று பாலியல் தொழில் செய்து பிழைக்கின்றனராம்.

செயற்கை மார்பகங்களை அணிந்தும் புருவங்களை திருத்திக் கொண்டும் கண்ணுக்கு மை, உதட்டுக்குச் சாயமென பணத்துக்காக பெண்களாக மாறுகின்றனராம். இதைக் கேட்டு நான் வியப்படைவதை பார்த்ததும், ஏன் இப்போது கைப்பேசிகளிலேயே ஆண்களை பெண்களாக அழகுபடுத்திக் காட்டும் 'எப்' உள்ளதே உங்களுக்கு தெரியாதா? தஜிகிஸ்தான் மாற்று பாலினத்தவர்கள் மத்தியில் அவை பிரபலம், என்றார் பரிஸ்தா, அதிரடியாக!  

பாலியல் தொழிலாளர்களாக ரஷ்யா சென்று பணம் சம்பாதித்து செல்வந்தர்கள் ஆனபின், முப்பது வயதளவில் மீண்டும் அவர்கள் சொந்த நாட்டுக்கு ஆண்மகனாக திரும்பி, ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து குழந்தை குட்டிகளை பெற்று குடும்பம் நடத்துவது தஜிகிஸ்தானில் சர்வ சாதரணமாகிவிட்டாதாம். அவர்களுள் பலர் அறியாமை காரணமாக பணத்துடன் எச்.ஐ.வி தொற்றையும் கூடவே தன் சொந்த நாட்டுக்கு எடுத்து வருவதுதான் கொடுமை என்கிறார் அவர்!  

தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வேறு நாடுகளில் இடம்பெயர்ந்து பணியாற்றி வந்தாலும் அவர்களில் பாலியல் தொழில் செய்வோர் பற்றி எந்த புள்ளிவிபரங்களும் இல்லையாம்.  பாடசாலை மாணவர்கள் ஒரு பால் சேர்க்கை மற்றும் மாற்று பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் மனம் குழம்பி தற்கொலை வரை செல்கின்றனர் என்றொரு பரிதாபகரமான தகவலையும் தந்தார் அவர்.  

'ஈக்குவல் ஒப்பர்ச்சுனிட்டிஸ்' எனும் அவருடைய அமைப்பு ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் தலைமையாகக் கொண்டது. இதெல்லாம் வெளிநாட்டவன் வேலை என்று மனதோரம் நாம் திட்டிக் கொண்டாலும் பரிஸ்தாவுடனான முழுமையான கலந்துரையாடலுக்குப் பின்னர்தான் அவர்களின் சமூகப் பொறுப்புணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதைப்பற்றியெல்லாம் பேசுவதே அசிங்கம் என எல்லோரும் ஒதுங்கினால் வழிதவறிச் செல்பவர்களை இறுதியில் யார்தான் வழி நடத்துவது? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. அதிலும் ஒரு பெண்ணாக பரிஸ்தாவின் துணிச்சலான செயற்பாடும் ஆளுமையும் என்னை மேலும் வியப்புக்குள்ளாக்கியது.  

அதுமட்டுமல்ல, தஜிகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானிலிருந்தே ஹெரோயின், கொக்கெயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்நிலையில் அதற்குரிய பணத்தை தஜிகிஸ்தானிலுள்ள கடத்தல்காரர்களினால் ஆப்கானிஸ்தான் கடத்தல் காரருக்கு செலுத்த முடியாமல் போனால் அதற்கு பதிலாக தஜிகிஸ்தானிலுள்ள அப்பாவி இளைஞர்களையும் யுவதிகளையும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு கொத்தடிமைகளாகக் கொடுத்துவிடுவார்களாம். அதை கேட்கும்போது என்னவோ திகில் திரைப்படம் பார்ப்பதுபோல என் உடம்பே ஆடிப்போனது. அண்மையில் தஜிகிஸ்தானில் மாற்று சத்திரசிகிச்சை நிலையமொன்று நிறுவப்பட்ட பின்னர் அங்கு பல சிறுவர்களும் சிறுமியர்களும் காணாமற்போவதாகவும் பரிஸ்தா விசனம் தெரிவித்தார். இவற்றை கேட்டபோது எனக்கென்னவோ என் நாட்டைப் பற்றி நினைக்க உள்ளூர பெருமையாக இருந்தது.  

இதெல்லாம் தஜிகிஸ்தானின் ஒரு பக்கம் மட்டுமே! அங்கு பார்க்க, ரசிக்க, வாங்க எத்தனையோ அம்சங்கள் உள்ளன. அது தங்கம் விளையும் நாடு. மஞ்சள் மட்டுமல்ல வெள்ளை  மற்றும் ரோஸ் நிறத் தங்கத்தையும் அங்கே வெட்டி எடுக்கிறார்கள். அங்கே தங்கத்தின் விலையும் மலிவாம். அங்கே தர்ப்பூசணியில் ஊறுகாய் போடுவார்களாம். அதை சொல்லும்போதே பரிஸ்தாவுக்கு நாவூறியது. ஏன், எனக்கு மட்டும் என்ன!  

நான்கு பருவக்காலங்களையும் தஜிகிஸ்தான் மக்கள் சந்திப்பதனால் அதற்கு ஏற்றாற்போல விளையும் உணவுகளை விதம் விதமாக சமைத்து உண்பார்கள் என்றும் மதிய உணவுக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கை சாப்பிடுகிறார்கள் என்றும் சொன்னார். உருளைக்கிழங்கை அவித்து அதனுடன் தக்காளிச் சாற்றை ஊற்றி செய்யும் ஏதோவொரு உணவு பற்றி பரிஸ்தா கூறினார். கற்பனையில்கூட என்னால் அதன் தோற்றத்தையும் ருசியையும் புரிந்து கொள்ள முடியாமல் போனது.  

கட்டாயம் என்னையும் தஜிகிஸ்தான் வருமாறு பரிஸ்தா அன்புடன் அழைப்பு விடுத்தார்.  

நினைவுகள் தொடரும்....

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments