ரூபாவை மிதக்கவிடுதல் என்பதன் அர்த்தம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

ரூபாவை மிதக்கவிடுதல் என்பதன் அர்த்தம் என்ன?

ரூபாவை மிதக்கவிடல் என்றால் என்ன? ரூபாவை நிலையாக வைத்திருத்தல் என்றால் என்ன? என்னும் வினாக்கள் அடிக்கடி எழுகின்றன. உண்மையில் இவை இரண்டும் பொருளியல்  வார்த்தைகளில் கூறுவதாயின் வேறு நாணய மாற்று வீத முறைமைகளாகும். நாணய மாற்றுவீதம் (அல்லது அந்நியச் செலாவணி மாற்றுவீதம்) என்பது ஒரு அலகு.    வெளிநாட்டு   நாணயத்தின் பெறுமதியை உள்நாட்டு நாணய அலகுகளின்   எண்ணிக்கையில் கூறுவதாகும். ஒரு அமெரிக்க டொலர் 179   இலங்கை ரூபா எனக்கூறுவது இந்த  அடிப்படையிலாகும். 

இங்கு 1=179 என்பது ஒரு விகிதமாகும். அப்படியானால் அதனை  ஏன் நாணய மாற்று வீதம் என்கிறோம்? நாணயமாற்று விகிதம்   என்று தானே சொல்ல வேண்டும்? வீதம் என்பது நூற்று வீதம்   என்றே பொருள்படும். இங்கு 1=179 என்பது நூறினாலோ    ஆயிரத்தினாலோ பெருக்குப்படவில்லையே? இந்த    சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.  நாணய மாற்று வீதம்  என்பதை மனிதர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ‘துரைசிங்கம்’,    ‘புலிகேசி’ என்று மிருகப் பெயர் வைத்து அழைப்பது போன்றே   பார்க்க வேண்டும். அதாவது நாணய மாற்று வீதம் என்பது   வெறுமனே ஒரு பெயர் மாத்திரமேயாகும்.     சரி இந்த நாணய மாற்றுவீதம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் மத்திய வங்கி உலகில் உள்ள குறிப்பிட்ட   நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியினை  வெளியிடுகிறது. எனவே மத்திய வங்கி தான் நாணய மாற்று வீதப் பெறுமதியை தீர்மானிக்கிறது என்று எண்ணத்தோன்றும்.  ஆனால்  உண்மை அதுவல்ல.  உண்மையில் உள்நாட்டு நாணய மாற்று  சந்தையில் (Foreign Exchange Market/ Forex Market ) ஒரு வெளிநாட்டு  நாணயத்திற்கு நிலவும் கேள்வி மற்றும் நிரம்பலின்  அடிப்படையிலேயே அதன் இலங்கை ரூபாவிலான பெறுமதி   தீர்மானிக்கப்படுகிறது. அதனை மத்திய வங்கியானது நாட்டின்  தலைமை நாணய அதிகாரி என்ற அடிப்படையில்  பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகிறது.

உதாரணமாக டொலரின் 1=  179 ரூபா என்ற பெறுமதி ஒரு குறிப்பிட்ட நாளில் டொலருக்கு  நாணய மாற்று சந்தையில் நிலவிய கேள்வி மற்றும் நிரம்பலின்   அடிப்படையில்  தீர்மானிக்கப்பட்டதாகும். இங்கே டொலரை ஒரு  பொருளாகக் கருதி அதன் விலையை இலங்கை ரூபாவில்  கணிப்பிடுகிறோம்.  சாதாரண சந்தையில் ஒரு பொருளின்   விலையை அதற்கான கேள்வியும் நிரம்பலும் தீர்மானிப்பது  போல டொலரின் விலையை டொலருக்கான கேள்வி மற்றும்  அதன் நிரம்பலின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். அவ்வளவு    தான். 

டொலருக்கான கேள்வி என்பது இலங்கையில் வசிப்பவர்கள்   டொலருக்கு எழுப்பும் கேள்வியாகும். அதாவது இலங்கையில்   உள்ளவர்களுக்கு ஏன் டொலர் தேவைப்படுகிறது எவ்வளவு   தேவைப்படுகிறது என்பதாகும். இறக்குமதி செய்ய வெளிநாடு   செல்ல, வெளிநாட்டு கல்வி பெற, பெற்ற கடனை மீளச் செலுத்த வெளிநாடுகளில் முதலீடு செய்யபோன்ற பல்வேறு காரணங்களால் டொலருக்கு கேள்வி எழுகிறது.  இந்த எல்லா   சந்தர்ப்பங்களிலும் டொலர் நாட்டிலிருந்து வெளியே செல்கிறது.

எனவே டொலர் நாட்டுக்கு வெளியே செல்லும் எல்லாச்   சந்தர்ப்பங்களையும் டொலருக்கான கேள்வியாக கொள்ளலாம்.   மறுபுறம் டொலர் நாட்டுக்கு உள்ளே வரும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் டொலரின் நிரம்பலாகக் கருதலாம். ஏற்றுமதி   செய்தல், உல்லாசப் பயணிகள் வருகை, கடன் பெறல்,   வெளிநாட்டு   முதலீடுகள் உள்வருகை, நன்கொடைகள் உள்வருகை,   இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து உழைத்து அனுப்பும்   பணம் என்பன டொலரின் நிரம்பலை தீர்மானிக்கும்  விடயங்களாகும்.

ஒரு குறிப்பிட்ட நாளில் டொலருக்கு நிலவும்   கேள்வி (அதாவது டொலர் நாட்டுக்கு வெளியே செல்லும் தொகை) டொலரின் நிரம்பல் (அதாவது டொலர் நாட்டுக்கு  உள்ளே வரும் தொகை) என்பன ஒன்றிணைந்து டொலரின்   விலையை இலங்கை ரூபாவில் தீர்மானிக்கின்றன. அவ்வாறு   12.10.2019ல் தீர்மானிக்கப்பட்ட  ஒரு டொலரின் விலை (நாளை     மாற்று வீதிம்) 180.50 இலங்கை ரூபாவாகும். 

இவ்வாறு ஒரு   குறிப்பிட்ட நாளில் தீர்மானிக்கப்பட்ட நாணயமாற்று வீதத்தை  அடுத்துவரும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாறாமல்  நிலையாக நாணய அதிகாரிகள் வைத்திருப்பார்களாயின் அதனை   நிலையான நாணய மாற்று வீதம் (Fixed Exchange Rate System)   முறைமை எனக் கூறப்படும்.   இதன்போது ஒரு குறிப்பிட்ட  காலப்பகுதிக்கு நாணயமாற்று வீதம் மாறாது. இதனால்  வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் நாணய மாற்றுவீதம்  கூடுமோ குறையுமோ என்ற அச்சமுமின்றி தமது  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 

ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், நிலையான   நாணய மாற்றுவீதத்தை பேண மத்திய வங்கி நாணய மாற்றுச்  சந்தையில் தலையீடு செய்ய வேண்டியிருப்பதாகும். உதாரணமாக நாணய மாற்று வீதம் 12.10.2019 இல் 180.50 ரூபாவாக  இருந்தது. மத்திய வங்கி இதனை நிலையான நாணய மாற்று  வீதமாக தீர்மானிப்பதாகக் கொள்வோம்.

எனவே அடுத்துவரும்  குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு ரூபா 180.50 என்பது ஒரு  டொலருக்கான விலையாக இருக்கும்.   இனி 13.10.2019 இல் நாணய மாற்றுச் சந்தை திறக்கும். இதன்போது   டொலருக்கான கேள்வியும் நிரம்பலும் மாற்றமடையும். 

உதாரணமாக டொலருக்கான கேள்வி அதிகரிக்குமாயின்   (இறக்குமதி அதிகரிப்பதால் அல்லது பெற்ற கடனை மீளச்செலுத்துவதால்) டொலரின் விலை 180.50 ரூபாவை விட  அதிகரிக்க வேண்டும். இதற்கான அழுத்தம் நாணய மாற்றுவீத    சந்தையில் ஏற்படும் ஆனால் நாணய அதிகாரிகள் டொலரின்   விலையை நிலையாக வைத்திருப்பதனால் அதன் விலையை  அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்.  எனவே 180.50 ரூபா   விலையில் சந்தையில் டொலருக்கு பற்றாக்குறை ஏற்படும்.

இந்தப் பற்றாக்குறையை மத்திய வங்கி தன்னிடமுள்ள டொலர்   கையிருப்புகளில் ஒரு பகுதியை நாணய மாற்றுச் சந்தைக்கு   விடுவிப்பதன் மூலம் டொலரின் பெறுமதியை 180.50 ரூபாவாக    வைத்திருக்க முயற்சிக்கும். ஆனால் நாணய மாற்றுச் சந்தையில்   டொலருக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரிக்கச் செல்லுமாயின் மத்திய வங்கியினால் தொடர்ந்தும் டொலர்  கையிருப்புகளை சந்தைக்கு வழங்க முடியாது ஏனென்றால்  மத்திய வங்கியிடம் வரையறுக்கப்பட்ட ஒரு தொகை   டொலர் கையிருப்புகளே இருக்கும். அதனை முழுமையாக  தீர்த்துவிட முடியாது. 

அதுமட்டுமல்லாமல் மத்திய வங்கி தன்னிடமுள்ள டொலர்   கையிருப்புகளை சூட்கேஸில் போட்டு சந்தையில் கொண்டு   போய் கொட்டுவதில்லை. மாறாக டொலரை சந்தையில் விடும்  போது அதற்கீடான இலங்கை ரூபா சந்தையில் இருந்து மத்திய   வங்கியை நோக்கிச் செல்லும்.  இதனால் நாட்டின் உள்நாட்டு பண   நிரம்பல் குறைவடைந்து வட்டி வீதம் அதிகரிக்கும். உள்நாட்டு  வட்டி வீத அதிகரிப்பு, உள்நாட்டு முதலீடு, உள்நாட்டு நுகர்வு  என்பவற்றை குறைப்பதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி  பாதிக்கப்படும்.

எனவே நிலையான நாணய மாற்று முறைமையை பேணிச் செல்வது நடைமுறையில் சிக்கலானதும் செலவு கூடியதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதும்  ஆகும்.

இலங்கையில் இத்தகைய நிலையான நாணயமாற்று வீத  முறைமை 1977 நவம்பர். 15ஆம் திகதி வரையில் அமுலில்   இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி அதிகளவு டொலர்   கையிருப்புகளை பேண வேண்டியிருந்த படியினாலும்,  பொருளாதாரத்தில் வட்டி வீத அதிகரிப்பு ஊடாக பக்க   விளைவுகளை ஏற்படுத்திய காரணத்தினாலும் உலகளாவிய  ரீதியில் நிலையான நாணய மாற்று வீத முறையை  கைவிடப்பட்டு வந்த காரணத்தினாலும் இலங்கையும் அதனைக்  கைவிட்டது. 

கலாநிதி எஸ். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments