திசை மாறிய காதல் | தினகரன் வாரமஞ்சரி

திசை மாறிய காதல்

"வசந்தன்... வசந்தன்..."அம்மாவின் குரல் கேட்டு விழித்தேன். "என்னப்பா மணி ஏழு ஆகிறது. இன்னும் விடியவில்லை என்று நினைத்துக் கொண்டாயோ” அம்மா மேலும் கூறினாள். எழுந்து இயந்திர வேகத்தில் காலைக் கடன்களை முடித்துவிட்டு டிரஸ் பண்ணிக் கொண்டு எனது அழகைக் கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.  

அம்மா தேநீரைக் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றார். தேநீரைப் பருகுவதற்கு கையில் எடுக்கும் போது தொலைபேசி அலறியது.  

‘இயஸ் டொக்டர் வசந்தன் இயர்’ மறுபுறத்தில் நர்ஸ் மிஸ் மீனா ‘டொக்டர் வெரி சீரியஸ் ஒரு பேசன்ட்ட எட்மிட் பண்ணி இருக்காங்க. கம் வெரி சூன்’ தேநீரையும் பருகாமல் அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு காரில் வைத்தியசாலையை நோக்கி விரைந்தேன்.  

உள்ளே நுழைந்த நான் ஒரு கணம் அதிர்ந்தே போனேன். அங்கே கட்டிலில் உணர்விழந்து, மயக்க நிலையில் கிடந்தாள் மதுரா. ‘ஆஹா...மதுரா...! உனக்கென்ன நேர்ந்தது. கண்ணீர் ததும்பும் முகத்தோடு அவளைத் தொட்டு பரிசோதித்தேன்.  

சிறிது நேரத்தில் இலேசாக கண் விழித்தாள் மதுரா, “மதுரா உனக்கென்னம்மா நேர்ந்தது?” ஏக்கத்துடன் அவளை நான் வினவ, அவள் திறந்த கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.  

‘சரியம்மா நீ றெஸ்ட் எடுத்துக் கொள். உன்னை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை’ மேலும் நிற்க முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.  

அங்கு இருந்தவரிடம் இவளைப் பற்றி விசாரித்தேன். சந்தைக்குச் சென்று கொண்டிருந்த போது சைக்கிள் மோதி மயக்கம் போட்டு விழுந்தவளை யாரோ வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாக அவர் மூலம் அறிய முடிந்தது.  

அதன் பின் அவளைப் பார்க்க அந்த அறைக்கு நான் செல்லவில்லை. பின் வீட்டிற்கு சென்றேன். அங்கு அவள் நினைவு என்னை வாட்டிக் கொண்டே இருந்தது.  

மறுநாள் வைத்தியசாலைக்குச் சென்றதும் முதலில் அவள் அறைக்கே சென்றேன். அங்கே கட்டிலில் மதுராவைக் காணவில்லை. அப்போது அங்கே வந்த நர்ஸ் மீனா “குட் மோர்னிங் டொக்டர்” என்றாள். நானும் பதிலுக்கு ‘குட் மோர்னிங்’ கூறிவிட்டு, “இந்த கட்டிலில் இருந்த பேசன்ட் எங்கே?” என்றேன், அவங்க நேற்று மாலையே போய் விட்டாங்க டொக்டர் என்றாள் மீனா.  

“என்ன நேற்றே போய் விட்டாளா? அவளுக்கு சுகமாகி விட்டதா?” என்றேன் சந்தேகத்துடன், ஆமாம் டொக்டர், உங்களுக்கு தேங்ஸ் சொல்லச் சொன்னாங்க என்றாள்.  

அடக் கடவுளே... அவளைக் காணத்தானே ஓடோடி வந்தேன், என்னை ஏமாற்றி விட்டாளே என் மனம் பதறியது. அன்று முழுவதும் எனக்கு வேலையே ஓடவில்லை.  

அதன் பின் என்னால் அவளைக் காண முடியிவில்லை. அவளைப் பற்றி பலரிடம் விசாரித்தேன் அவள் நுவரெலியாவில் இருப்பதாகவும், அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் அறிந்தேன்.  

ஒரு நாள் எதிர்பாராவிதமாக கண்டியில் அவளைச் சந்திக்க நேர்ந்தது. மதுரா... அன்று கண்ட மதுராவா இவள்?  

கல்லூரி நாட்களில் அன்னநடை நடந்து, ஆண்களை மயக்கும் வகையில் அழகு பதுமை போல அசைந்து நடந்து வரும் மதுராவா இவள்? என்னால் நம்பவே முடியவில்லை. நன்றாய் இளைத்துப் போயிருந்தாள்.  

“மதுரா என்னைத் தெரியவில்லையா?” என மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன். ‘ஆ... வசந்தன்... நீங்களா? அன்று என்னைக் காப்பாற்றிய டொக்டர் நீங்களா? என என்னைக் கண்டவள் வியப்புடன் மேலும் கீழுமாகப் பார்த்தாள். நான் தான் மதுரா, உன்னுடன் கல்லூரியில் படித்த வசந்தனேதான். எப்படி சுகமா இருக்கிறாயா? என்றேன். முதலில் வியப்புடன் பார்த்தவள். பின் ஆத்திரத்துடன் என்னை பார்த்து விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.  

அவளை சமாதானப்படுத்த பெரும் சிரமப்பட்டு விட்டேன். அதன் பின் அதிகம் கதைக்கவில்லை. தான் நுவரெலியாவில் இருப்பதாகவும், கண்டிக்கு அவளின் உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் கூறி முகவரியையும் தந்து விட்டு சென்று விட்டாள்.  

வீட்டிற்கு வந்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “சுகமா இருக்கிறாயா?” என்றவுடன் ஏன் அப்படி அழுதாள்? ஏன் அப்படி இளைத்து போய் விட்டாள்? என என்னுள்ளே கேள்விகளை எழுப்பிக் கொண்டேன்.  

அன்றிலிருந்து அவள் வீட்டிற்கு சென்று அவளைக் காணும் நோக்கமாகவே இருந்தேன். மறுநாள் வைத்தியசாலைக்குச் சென்று, ‘டொக்டர் சந்திரமோகனை பார்க்கச் சொல்லி விட்டு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு மதுராவின் வீட்டிற்கு விரைந்தேன்.  

“வசந்தன்... அமருங்கள்” என்றவள் இருக்கையை இழுத்துப் போட்டாள். அவளிடம் வீட்டாரைப் பற்றி விசாரித்தேன். அதை அவள் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல் இருந்து விட்டு, உள்ளே சென்று விட்டாள்.  

எனக்கு ஒரே யோசனை. அவளைப் பற்றி நினைத்தவாறே அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் தேநீர்க் கோப்பையுடன் வந்தவள் என்னிடம் நீட்டினாள்.  

‘தேங்ஸ்’ என்வாறே தேநீரைப் பருகிக் கொண்​ேட அவளை கடைக்கண் பார்வையாகப் பார்த்தேன். சற்று நேரத்தில் அங்கு ஒரே மௌனம். பின்பும் நான் தான் கதையைத் தொடர்ந்தேன்.’ அன்று ஏன் என்னிடம் கதைக்கவில்லை? “என்னிடம் சுகமா என்று கேட்டீர்களே. அது என்னை கதைக்க விடாமல் தடுத்து விட்டது. இப்போது நான் அடியற்ற மரம் போல அணு அணுவாய் செத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் என்னை ஏளனத்துடன் பார்க்கிறார்கள்.  

“என்னுடைய தோழிகள் எல்லோரும் திருமணமாகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஏமாந்தவள் நான் தான். அப்போது என்னை எத்தனையோ பேர் எச்சரித்தார்கள். எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தன. அவ்வளவையும் எதிர்த்து நின்றேன். இப்போது எனது நிலையை யாரிடம் கூறுவது?” என்று விம்மி விம்மி அழுதாள்.  

நானும் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். பலன் கிட்டுவதாகத் தெரியவில்லை. ஒருவாறு நிறுத்தி ஒரு ஏக்கப் பெருமூச்சை விட்டவள்.  

“இனி என்ன செய்வது? முதந்தது முடிந்துதான்”, என்று கூறி சோகக் கண்ணீரை மழைபோல வடித்தாள்.  

நானும் ஒருவாறு அவளிடம் இருந்து விடுபட்டு விடை பெற்றுக் கொண்டு வந்து விட்டேன். மேலும் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வீட்டை அடைந்த எனக்கு அந்தப் பழைய கதை மீண்டும் மனத்திரையில் தோன்றியது.  

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமது – எங்கள் வகுப்பில் நானும் எனது நண்பன் மோகனும் தான் எல்லாத்துறையிலும் மேலோங்கி நின்றோம்.  

படிப்பாயினும் சரி, விளையாட்டுத் துறையாயினும் சரி, இலக்கிய துறையாயினும் சரி எம்மிருவரையும் வெல்ல எமது வகுப்பில் வேறு யாரும் இல்லை.  

எமது வகுப்பில் புதிதாக ஒரு மாணவி வந்து சேர்ந்தாள். அவள் பெயர் ‘மதுரா’ பெயருக்கேற்றாற் போல் அழகானவள்.  

அவளுக்கும் மோகனுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு காதலாக மாறியது.  

காலப்போக்கில் அவர்களின் காதல் யாராலும் பிரிக்க முடியாத அளவுக்கு பிணைக்கப்பட்டு விட்டது. “மோகன் – மதுரா” காதல் விடயம் கல்லூரி முதல் ஊர் முழுவதுமே சுடர்விட்டு பரவியது. இரு பகுதி பெற்றோர்களும் தடை போடும் முடிவுக்கு இறங்கினார்கள். மதுரா கல்லூரி செல்வது தடை செய்யப்பட்டது.  

இரு பகுதி பெற்றோரின் அறிவுரைகளும் தூக்கி எறியப்பட்டன. அவர்களின் கண்களில் மணதூவப்பட்டன. ‘மோகன்- மதுரா” இருவரிடமும் கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. தபால்காரனாக நான் செயல்பட்டடேன். இடை இடையே வாசிகசாலை, தியேட்டர்களிலும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.  

எமக்கும் கல்லூரி காலம் முடிவுற இருந்தது. கடைசியாக மோகன் அவளிடம் கூறிய விடயம் “மதுரா இன்னும் சில வருடங்களில் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் கவலைபடாதே.  

ஆனால் இறுதிவரை என்னை மறந்து விடாதே, மீண்டும் நாம் சந்திக்கும் போது நீ சாதாரண மோகனின் மனைவியாக இருக்க மாட்டாய். டாக்டர் மோகனின் மனைவியாக இருப்பாய். இது சத்தியம்”, இரு உள்ளங்களும் பிரியாமல் பிரிந்து விட்டன.

நானும் நண்பனும் நுவரெலியாவை விட்டு கண்டிக்கு சென்றோம்.  அங்கு உயர்தரம் கற்றோம்.  எனினும் மேலும்  கொஞ்ச காலம் சேர்ந்து படிக்க  முடியவில்லை. விதி எம்மை பிரித்து விட்டது.

எனக்கு மாத்திரம் பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பின் நானும் நண்பனும் சந்தித்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அரிதாகி விட்டன.  

நண்பன் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தாவா இருப்பதாக கடிதம் போட்டிருந்தான். நாம் பிரிந்து விட்டாலும் எமது கடிதத் தொடர்பு நீடித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் மதுராவைத் தான் அடிக்கடி சந்திப்பதாயும் நிச்சயம் அவளைத்தான்  திருமணம் செய்யப் போவதாகவும் அதை நிச்சயம் எனக்கும் தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.  

ஒரு விடுமுறையில் நான் வந்திருக்க போது ஒரு நாள் அவனை பூங்கா ஒன்றில் சந்தித்தேன். யாரோ ஒரு மங்கையுடன் நின்று கொண்டிருந்தான். அவளைக் கண்டு நான் அதிர்ந்த போது அது அவனின் உறவினர் என்று கூறினான்.  

உடனே, மதுராவை பற்றி ஞாபகமாகக் கேட்டேன். அவர்களுடைய திருமணம் நிச்சயம் நடக்குமென்று கூறினான்.  

அப்போது நான் விரைவில் லண்டனுக்குப் போகப் போவதாக கூறினேன். அன்று லண்டனுக்கு நான் பயணமான போது என்னை பயணம் அனுப்ப விமான நிலையத்துக்கு நண்பன் வந்திருந்தான்.  

அன்றும் கூட மதுராவைப் பற்றி விசாரித்து விட்டு கடைசியாக அவனிடம் நான் கேட்டுக் கொண்டது ‘மதுராவை மறந்து விடாதே, தவிக்க விடாதே’ என்பது தான், அவர்கள் திருமணம் நடைபெற்றிருக்கும், அவர்கள் கணவன் – மனைவி ஆகி இருப்பார்கள் என்று தான் நான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்.  

மாதங்கள் பல கடந்து வருடம் மூன்றும் முடிந்தது. எனது பயிற்சியும் முடிந்து எனது ஊருக்கு திரும்பினேன். எனது ஊரிலுள்ள வைத்தியசாலையிலே வைத்தியர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. வேலைகள் அதிகமாக இருந்த படியால் நண்பனை சந்திக்கப்போக முடியவில்லை. அவர்கள் இருவரையும் காணும் ஆசையில் தான் இருந்தேன்.  

இந்த நேரத்தில் தான் வைத்தியசாலையில் மதுராவை அவளின் மாறுபட்ட கோலத்தைக் காண முடிந்தது. அந்த சோகக் கதையையும் கேட்க முடிந்தது.  

நண்பன் என்று நினைத்திருந்த அந்த கயவனை கண்டு எனது நட்பை நிறுத்திக் கொள்ளும் நோக்கோடு அவனைக் காணச் சென்றேன்.  

அங்கே வீட்டில் மோகனும் வேறொரு பெண்ணும் உல்லாசமாக கதைத்துக்  கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் நண்பனின் மனைவி என்று ஊகித்துக் கொண்டேன். எனது வரவை எதிர்பார்க்காத அவன் என்னைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்தான். பின் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு என்னைப் பற்றி விசாரித்தான்.  

அவன் முகத்தில் குழப்பங்கள் நிறைந்த ஒரு பய உணர்வைக் காண முடிந்தது. என்னுடன் கதைப்பதற்கே சிரமப்பட்டான்.  

தனது பெற்றோர் உறவினர்கள் மதுராவை வெறுத்ததாகவும் அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் அதனால் அத்திருமணத்தை நிராகரித்து விட்டு அவனது உறவுப் பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் கவலையுடன் கூறினான். இச்செயலுக்காக தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.  

எனக்குத் தலை சுற்றியது. அவனின் முகத்தில் காறி உமிழ வேண்டும் போலிருந்தது. மேலும் அவனுடன் பேசி விரும்பாது விர்ரென்று வெளியே வந்து விட்டேன்.  

அன்று முழுவதும் எனக்கு உணர்வே இல்லை. ஏதோ நான் மதுராவை ஏமாற்றி விட்டது போல் என் மனம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. நண்பனின் இச்செயலை நினைத்து நினைத்து வருந்தினேன்.  

மறுநாள் விடிந்ததும் முதலில் அவள் வீட்டை நோக்கி விரைந்தேன். எனது வரவை எதிர்பார்ந்திருந்தவள் போல் வாசற்படியில் நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் புன்னகை தவழ்ந்த முகத்தோடு ‘உள்ளே வாருங்கள்’ என்றாள்.  

‘மதுரா உனக்கு ஏற்பட்ட இந்த சோகக் கதைக்கு நான் காரணம் அல்ல மோகன் நிச்சயம் உன்னைக் கைவிட மாட்டான் என்றுதான் நம்பியிருந்தேன். அவன் இப்படி செய்வான் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை.  

என்னை மனித்து விடு மதுரா! என்னையும் அவனைப் போல நினைக்க வேண்டாம். அவன் செய்த தவறுக்கு நான் ஒத்தாசையாக இருந்து விட்டேன்.

எனவே, உன்னை நானே திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கின்றேன். உன்னைப் போன்ற பெண் எனக்கு மனைவியாக அமைவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றேன்.  

இவ்வளவையும் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்தவள். நாணத்துடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறே என் பாதங்களில் விழுந்து வணங்கி எனது எண்ணத்துக்கு சம்மதித்தாள்.   

பசறையூர் 
ஏ. எஸ். பாலச்சந்திரன்

Comments