கோட்டாபய ராஜபக்ஷ சொல்வதை செய்பவர் | தினகரன் வாரமஞ்சரி

கோட்டாபய ராஜபக்ஷ சொல்வதை செய்பவர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சொல்வதை கட்டாயம் செய்பவர். அவர் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோமென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு...

கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரங்கள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன? 

பதில்: இலங்கை பூராகவும் 148 பிரசாரக் கூட்டங்கள் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளன. இதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 100 பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதுடன், பிரதேச மட்டத்தில் 5000ம் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. 

வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகமென நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 27,28,29 ஆம் திகதிகளிலும் அடுத்த மாதம் 6, 9ஆம் திகதிகளிலும் வடக்கு, கிழக்கில் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை, எமது பங்காளிக் கட்சிகளும் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றன. 

கேள்வி: உங்களது தேர்தல் விஞ்ஞாபனம் எப்போது வெளியிடப்படும்? 

பதில்: எதிர்வரும் 30ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் வகையிலேயே ஏற்பாடுகளை செய்துவருகின்றோம். 

கேள்வி: உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதில் தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் விசேட அறிவிப்புகளை எதிர்பார்க்க முடியுமா? 

பதில்: வடக்கின் அரசியல்வாதிகளுக்கு உள்ள பிரதான பிரச்சினைதான் அரசியல் தீர்வு பற்றி பேசுவது. நாம் அதற்கு அப்பால் அவர்களது பொருளாதார பிரச்சினைகள் குறித்து சிந்திக்கின்றோம். பொருளாதார ரீதியான சவால்களை வெற்றிக்கொள்வதே அந்த மக்களுக்கு உள்ள பிரதான சவாலாகவுள்ளது. 

நான் கிளிநொச்சி மற்றும் அங்குள்ள கிராமங்களுக்குச் சென்றேன். பலர் உண்ணுவதற்கு உணவில்லாதுள்ளனர். முதலில் அந்த மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேவேளை, இரண்டாவதாக அபிவிருத்தியை முன்னெடுப்பதே கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணமாகவுள்ளது. பாதைகள் இல்லை, முறையான நீர் திட்டங்கள் இல்லை, மின்சாரம் முறையாக இல்லை. இவற்றுக்கு அடுத்தகட்டம்தான் அரசியல் தீர்வாகும். 

13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் வடக்கின் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், வடக்கின் தமிழ் தலைமைகள் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதனை செய்தாலும் தெற்கு மக்களின் ஆதரவுடன்தான் கொடுக்க முடியும். வடக்கை மாத்திரம் சந்தோஷப்படுத்த முடியாது. அதேபோன்று தெற்கை மாத்திரம் சந்தோஷப்படுத்துவதும் ஏற்புடையத்தல். இருதரப்பினரும் சந்தோஷமடையும் விதத்திலேயே நாம் செயற்பட வேண்டியுள்ளது. 

13ஆவது திருத்தச்சட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளன. அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென கலந்துரையாட தயாராகவுள்ளோம். 

கேள்வி: தாம் ஆட்சியை கைப்பறினால் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவோமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கூறியிருந்தார். அந்த நிலைப்பாட்டில் இன்னமும் உள்ளாரா? 

பதில்: புதிய அரசமைப்பொன்று கொண்டு வருவதைவிடுத்து இருக்கின்ற அரசமைப்பில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏதோ ஒரு விதத்தில் இனப்பிரச்சினைக்கு இந்த அரசியலமைப்பில் தீர்வுகாண முடியாத சூழல் ஏற்பட்டால் புதிய அரசியலமைப்பு பற்றி பேச முடியும். என்றாலும் இருக்கின்ற அரசியலமைபபில் வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொடுக்க முடியும். 

கேள்வி: நீண்ட இழுபறிக்குப் பின்னர் இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்துள்ளார். அவரது ஆதரவை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்: ஒவ்வொரு அரசியல் கட்சியும் நாட்டு மக்களது கருத்துகளை அறிந்துதான் தமது தீர்மானங்களை எடுக்கின்றன. தொண்டமானா அல்லது திகாம்பரமா என்பது முக்கியமல்ல. தோட்டபுற மக்களின் வாழ்க்கைத்தரத்தையே பார்க்க வேண்டும். 

மலையகத்தில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வோம், வீடுகளைக் கட்டுவோம், பொருளாதாரத்தை பலப்படுத்துவோம் எனக் கூறியே வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால், ஐந்து வருடத்தில் இவர்கள் செய்துள்ளதென்ன?. 

50 ரூபாவைக்கூட இவர்களால் அந்த மக்களுக்கு வழங்க முடியாது போனது. 50 ரூபாவைக்கூட கொடுக்க முடியாத அரசாங்கம் மலையகத்திற்கு எதற்கு? தேவையில்லையென அந்த மக்கள் முடிவுசெய்துவிட்டனர். 

கேள்வி: மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டமேதும் உள்ளதா? 

பதில் : மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்துவது மாத்திரமல்ல அவர்களை பொருளாதார ரீதியில் பலமடையச் செய்யும் விசேட வேலைத்திட்டங்களை கோட்டாபய ராஜபக்ஷ கொண்டுள்ளார். தோட்டபுற இளைஞர்கள் கடைகளிலும், ஆடைத் தொழிற்சாலைகளிலும், கொழும்பின் ஹோட்டல்களிலுமே பணிப்புரிக்கினறனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். 

மலையகத்தில் உள்ள பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்;. அவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களை அரச பொறிமுறைக்குள் உள்வாங்க வேண்டும். வைத்தியர்கள், பொறியிலாளர்கள், பேராசிரியர்கள் என உயர்துறைக்கு மலையக இளைஞர்களை கொண்டுவருவதே கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது இலக்காகவுள்ளது. இரண்டாவது தோட்டப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது. 

மலையகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஒரு தெளிவான திட்டமொன்று கோட்டாபய ராஜபக்ஷவிடம் உள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட வீடமைப்புத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்துவார். ஒரு மாடியில் நான்கு வீடுகள் இருக்கும். அத்திட்டத்தி;ல் சிறுவர் விளையாட்டு திடல், பூங்கா, குடிதண்ணீர் திட்டம் உட்பட பல்வேறு பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். அதேபோல் தோட்டபுற நகரங்களும் உருவாக்கப்படும். பல தோட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நகரமாக மாற்றியமைக்கப்படும். எஞ்சியுள்ள இடங்களில் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். தேயிலையில் மாத்திரம் வருமானம் பெரும் பெருந்தோட்ட மக்களை விவசாயத்தின் மூலமும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் இலக்குகளை அடையவதே கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டமாகும். 

கேள்வி: பெருந்தோட்டப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் போது அதனை வழிநடத்தும் பிரதான அங்கமான கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுடன், தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக ஆக்கப்பட வேண்டுமென மலையக அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறதே? 

பதில் : சம்பளம் தொடர்பில் பேச்சுகள் நடத்தும்போது முதலாளிமார் சம்மேளனம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் உதவி செய்யாது சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. முதலாளிமார் சம்மேளனத்துக்கு உதவியளிக்காது சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோருகின்றோம். அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்துடன், அரசாங்கம் ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு சாதாரணமான சம்பளமொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

தோட்டங்களை கூறுபோட முடியாது. தோட்டங்களை பிரித்துக்கொடுத்தால் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சிகண்டுவிடும். தேயிலை தொழில் துறையை கைவிட்டுவிட்டு பின்னர் அந்நிலங்களில் மரக்கறி பயிரிடக்கூடும். பின்னர் நிலங்களை விற்பனை செய்வார்கள். வீடுகள் கட்டுவார்கள். இதனால் தேயிலை தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும். 

வடக்கு, தெற்கு, மலையகமென அனைத்து தமிழ் மக்களுக்கு நான் ஒன்றை தெளிவாக கூற விரும்புகிறேன். கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் சொல்வதை செய்பவர். ஐ.தே.க. போன்று வெறும் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுபவர் அல்ல. ஆகவே, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் நாம் உத்தரவாதமளிக்கின்றோம். 

கேள்வி: வடக்கின் தமிழ் தலைவர்கள் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுத்துமூலமான உத்தரவாதத்தை வழங்காத முடியாதவர்களுக்கு ஆதரவளிக்க முடியாதென கூறியுள்ளனரே? 

பதில் : வடக்கின் தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தயாராகவே உள்ளார். ஆனால், உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அவர் தயாரில்லை. 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவைவிட 10 மடங்கு கோட்டாபய ராஜபக்ஷ நல்லர். புலிகள் தனது தந்தையை படுகொலைச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சஜித் பிரேமதாச இன்னமும் மறக்கவில்லை. 

கோட்டாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பல கட்சிகள் எம்முடன் இணைந்துள்ளன. டக்ளஸ் தேவாநந்தா, ஆறுமுகன் தொண்டமான் உட்பட பல தலைவர்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். கிழக்கில் வியாழேந்திரன் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான், கருணா உட்பட பலர் எம்முடன் இணைந்துள்ளனர். 

2015ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு கொடுத்திருந்த எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோமென கூறினர். ஆனால், வெறும் பேச்சுவார்த்தையை மாத்திரமே நடத்தியுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறில்லை. சொல்வதை செய்பவர். தமிழ் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவார் என்றார்.   

நேர்காணல்: சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments