கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் தேசிய பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதம் | தினகரன் வாரமஞ்சரி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் தேசிய பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதம்

இ.தொ.காவின் உப தலைவரும் முன்னாள் ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சருமான செந்தில் தொண்டமான் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி

பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவு என்ற  நிலைப்பாடு,  இது வேறு வழியில்லை என்ற நிலையில் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது தீர்க்கமான முடிவுகளுடன் எடுக்கப்பட்ட தீர்மானமா? 

இ.தொ.காவைப் பொறுத்தவரையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வாக்குகளை  பிரதேச சபைகளில் பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சம் வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானித்தது.  4 இலட்சத்தில் 2 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.  இ.தொ.கா இம்முறை நடுநிலையாக இருந்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை அறிக்கையை தேசிய சபை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.   தேசிய சபை பிரதான இரு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளையும் கருதி தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு   ஆதரவளிக்க இ.தொ.கா  முன்வந்தது. 

32 அம்ச கோரிக்கை என்கிறீர்கள், முக்கியமான சிலவற்றை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா? 

32 கோரிக்கைகளுமே முக்கியமானவைதான். அதில் கல்விக்கு இம்முறை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி பல்கலைக்கழகம் (யாழ்ப்பாணத்தில் இருப்பது போல) ஒன்று நிறுவப்பட வேண்டும். அதுபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தமிழ் மொழிப் பாடசாலைகள் உள்ள பகுதிகளில் விஞ்ஞானப் பாடசாலைகள்   நிறுவப்பட வேண்டுமென  கோரியுள்ளோம். 

தற்போது கொழும்பு, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் மட்டுமே விஞ்ஞான பாடசாலைகள் இயங்கி வருகின்றன. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்விதான் அழியாத சொத்து.  

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்காக பிரசாரம் செய்தீர்கள். ஆனால் மலையக மக்கள் வேறு மாதிரி தீர்மானம் எடுத்தார்கள். இம்முறையும் அப்படி நடக்காது என்பதில் என்ன நிச்சயம்? 

பொதுவாக மக்கள் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பது,  அவர்களை வழிகாட்டுவதற்காக அந்த வழிகாட்டல்களை மீறியும்  அவர்களாகவே சிலநேரங்களில் முடிவெடுக்கிறார்கள். கடந்த 5 வருடங்களில் மலையக மக்கள் பாரிய சவால்களுக்கும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கும் முகம் கொடுத்தார்கள்.  இந்த ஐந்து வருட காலத்தில் 128 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி,  இன்று 180  ரூபாவாக அதிகரித்திருக்கிறது.  அரிசியைக்கூட இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள்  அனைத்துமே ஆடம்பரப் பொருட்களின்  விலையாக மாறியுள்ளது. மக்கள் அன்று தவறானதொரு முடிவை எடுத்ததால் இன்று அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாக மாறியிருக்கிறது. 2014இல் மூன்று வேளையும் சாப்பிட்ட மக்கள் இன்று இரண்டு வேளையே சாப்பிடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான   ஆட்சி திரும்பவும் வரும்பட்சத்தில் என்ன நடக்கப்போகிறது? மைத்திரிக்கு பதிலாக சஜித் வரப்போகிறார். ஆனால் இந்த அரசாங்கத்தின் கொள்கையும் அமைச்சர்கள் மற்றும்  வரிகள் அனைத்தும் அப்படியேதான்   இருக்கும். 2015 நல்லாட்சி மாதிரி இது நல்லாட்சியின் இரண்டாவது அங்கமாக இருக்கும். நல்லாட்சி ஒன்றில் மக்கள் பொருளாதார ரீதியில் தாங்கமுடியாத நெருக்கடிக்குத்  தள்ளப்பட்டார்கள். இனி  நல்லாட்சியின் இரண்டாம் கட்டத்தை  எப்படித்தான் நினைத்துப் பார்க்க முடியும்?  

சஜித்துடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அறிந்தோம். ஐ.தே.க கூட்டணியுடன் இணைவதில் எவ்வாறான பின்னடைவுகளை எதிர்கொண்டீர்கள்? தமிழ் முற்போக்குக் கூட்டணியைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பிரச்சினைகள் எவையாக இருந்தன? 

பின்னடைவு என்று எதுவுமில்லை. ஐ.தே.க.வினர் பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 வருடகாலத்தில் அவர்கள் கொண்டிருந்த கொள்கைகளில் பாரிய முரண்பட்ட கருத்து இருந்தது. உதாரணத்திற்கு தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதாக உறுதியளித்தனர். எட்டு மாதங்களாகியும் அது வழங்கப்படவில்லை. கேட்டால் தனியார் தோட்டங்களுக்கு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறினர். அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் தோட்டத் தொழிலாளர்களுக்காகவாவது வழங்கியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் வழங்கப்படவில்லை.   அது மட்டுமல்லாமல் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்குவதாகக் கூறி அதுவும் இரண்டு மாதங்கள் மட்டுமே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. தேர்தல் வந்ததும் அதனை நிறுத்தி விட்டார்கள்.  

சிறுபான்மை மக்களுக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்குவோம் சம உரிமை என்றெல்லாம் கூறினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கிழக்கை எடுத்துக்கொண்டால் தமிழர்கள் அன்றாட வாழ்க்கைக்காக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  

முல்லைத்தீவு பிள்ளையாரடி கோவில் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதனை மீறி செயற்பட்டார்கள். காவல் துறையினர் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இவ்விடயத்தில் அரசாங்கம் சிறுபான்மையினருக்கு பாரபட்சமாகவே நடந்துகொண்டது. திகன சம்பவத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது பாதுகாப்பு தரப்பினர் எதனையும் கண்டுகொள்ளவில்லை.  

2009 யுத்தம் ஏற்பட்டபோது அப்பகுதிகளில் தமிழர்களுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டது. அதனை எவராலும் மறுக்க முடியாது. இ.தொ.காவும் அதனை ஏற்றுக்கொண்டது. இறுதி யுத்தத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் இறந்தனர். ஆனால் அப்போது நாட்டில் எப்பகுதியிலும் அமைதி சீர்குலையவில்லை. இலங்கையில் வேறு எங்காவது தமிழ் மக்களுக்கு ஒரு கீரல்கூட ஏற்படாத அளவிற்கு அப்போதைய அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. அப்பாவித்தமிழர்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் 1983இல் 11 இராணுவத்தினர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்கள் எனக்கூறி தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதுதான்  இந்த இருவருக்குமுள்ள வித்தியாசம். 1989இல் ஜே.வி.பி கிளர்ச்சியின்போது அப்போதும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கமே இருந்தது. அப்போதும் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இவையெல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துப் பார்த்தால் கோட்டாபே ராஜபக்ஷ வந்தால்தான்  நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பது தெளிவாகிறது.   

கடந்த பிரதேசசபைத் தேர்தலில் ஐ.தே.க நுவரெலியாவில் 160,000 வாக்குகளை எடுத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 44,000 வாக்குகளைப் பெற்றது. பொதுஜன பெரமுன 110,000 வாக்குகளைப் பெற்றது. இ.தொ.கா சேவல் சின்னத்தில் 106000 வாக்குகள் ஆனால் வெற்றிலைச் சின்னத்தில் 30000 வாக்குகளையே பெறமுடிந்தது. இ.தொ.கா மொத்தம் 1 35000 வாக்குகளை எடுத்தது. எல்லாவற்றையும் சேர்த்து 260,000 வாக்குகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இ.தொ.கா பொதுஜன பெரமுன ஆகியவை பெற்றன. ஐ.தே.க 160,000 வாக்குகளையே பெற்றது, இந்நிலையில் இ.தொ.கா தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது. அதனால் இ.தொ.காவின் ஆதரவு எல்லாத்தரப்புக்கும் தேவைப்பட்டது.  

ஜனாதிபதித் தேர்தலில் மலையகத்தைப் பொறுத்தவரையில் இ.தொ.கா ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமா? 

கண்டிப்பாக இருக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இ.தொ.கா கடந்த தேர்தலிலும் இருந்திருக்கும். ஆனால் இவ்வாறு நடக்கப்போவதாக நாம் கூறியபோது ஆசை வார்த்தைகளைக்கூறி மக்களை திசைதிருப்பி விட்டனர். இம்முறை அவ்வாறெல்லாம் நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல. நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.  

இந்தத் தேர்தலில் சஜித் அலை வீசுவதாக தெரிவிக்கப்படுகிறதே! 

இந்த அலையை எல்பிட்டிய தேர்தலில் எம்மால் அவதானிகக்கூடியதாக இருந்தது. காலிமுகத்திடலில் லட்சக்கணக்கில் ஜனத்திரளாக கலந்துகொண்டாலும் எல்பிட்டிய தேர்தலில் 10,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை அவர்களால் பெறமுடியவில்லையே. 

எல்பிட்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 5000 வாக்குகளையும் பொதுஜன பெரமுன 23 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தெற்கில் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரியை விட அதிகமாக இருந்தார். வடக்கில் மூன்று இலட்சம் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகித்தார். தற்போது 225 இற்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் தலைமையில் இயங்கி வருகிறது. இதில் ஒரு உள்ளூராட்சி சபையில் 18 ஆயிரம் வாக்குகள் வீதம் 20 சபைகளில் வாக்குகளைப் பெற்றாலே போதும். வடக்கில் அளிக்கப்படும் 3 இலட்சம் வாக்குகளுக்கு அது சமமாகிவிடும்.  

தமிழ் மக்கள் மத்தியில் சஜித்துக்கு அலை வீசுகிறது என்றாலும் அந்த அலை சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலுமே காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் வாக்குப்பெட்டிகளில் அதைக் காணமுடியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலிமுகத்திடல் கூட்டத்தைப் பார்த்த பின்னரும் கூட எல்பிட்டியவில்  பத்தாயிரம் பேர்களே  வாக்களித்திருக்கிறார்கள்! சஜித் மக்களைக் கவரவில்லை என்பதுதானே அர்த்தம்!

ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பிக்கள் என அனைத்து வளங்களும் இருந்தும் ஒரு பிரதேச சபைத் தேர்தலில் வெல்லமுடியவில்லை என்றால் ஒரு பிரதேச சபைத்தேர்தலுக்கான திட்டமிடல் இல்லையென்றால் அவர்கள் எப்படி இந்த நாட்டை வெல்லப்போகிறார்கள்?

2005 முதல் 2014 வரையில் அன்றைய அரசுக்கு ஆதரவாக இருந்தீர்கள். ஆனால் மலையக மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு அன்றைய அரசு பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் அவர் மலையக சமூகத்துக்கு நன்மைகள் செய்வார் என்பதற்கு என்ன உறுதி? 

2005 இலிருந்து 2014 வரை நன்மைகள் செய்யவில்லையென்பது   ஊடகவியலாளரின் கருத்து. இ.தொ.காவிடம் நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. 2009 இலிருந்து 2014 வரை கட்டப்பட்ட வீடுகளை விட இந்த ஐந்துவருட காலப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாகும். இலங்கை அரசால் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கொண்டு கட்டப்பட்ட வீடுகள் அவை. மஹிந்தராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது சிறுபான்மை மக்களுக்கு பாரியளவில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆசிரியர் நியமனம், பொலிஸ், தாதியர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், தபால் துறையில் என ஒரு காலப்பகுதிக்குள் மட்டும் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகளுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் மஹிந்த கொடுத்த மூவாயிரம் ஆசிரியர் நியமனத்தைத் தவிர வேறெதனையும் அவர்கள் செய்யவில்லை.  

இந்தத் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ வேட்பாளராக போட்டியிட்டிருந்தால் இந்த முடிவை முன்னரேயே  எடுத்திருப்போம். கோட்டபாய புதிதாக அரசியலுக்கு வருவதால் அவரைப்பற்றி நாம் இன்னும் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. கோட்டாபாய வந்தால் நிச்சயம் உடன்படிக்கை  செய்தேயாக வேண்டும். அதற்காகத்தான் 32 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கிறோம்.

பி. வீரசிங்கம்

Comments