மலையக மக்கள் சஜித்துக்கே பூரண ஆதரவு | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்கள் சஜித்துக்கே பூரண ஆதரவு

ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கே.ரி. குருசாமி உடன் ஒரு சந்திப்பு

இந்த ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.காவின் இணைவு சரிவை ஏற்படுத்துமா? 

ஒரு அரசியல் கட்சியினுடைய நிலைப்பாடு என்னவென்பதை விட  மக்களின் நிலைப்பாடு என்னவென்பதையே  நாம் பார்க்க வேண்டும்.   மலையகத்தைப் பொறுத்தவரையில் செளமியமூர்த்தி தொண்டமான் காலப்பகுதியிலிருந்தே யானைக்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் மலையக மக்கள். இ.தொ.காவே இதற்கு பிரதான காரணம். இந்த ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக்கொண்டால் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மலையக மக்கள், கட்சித் தலைவர்கள் சொல்வதை விட அவர்களாகவே  முடிவெடுத்து  மாறியிருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவிற்கே வாக்களிப்பதென முடிவெடுத்துவிட்டார்கள். இ.தொ.கா கூட சஜித்திற்கு ஆதரவாகவே இருந்தது. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் இ.தொ.கா சஜித்தை ஆதரிக்குமானால் அதனை தாம் வரவேற்பதாக கூறியுமிருந்தார். ஆனால்  இறுதிநேரத்தில் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை.  

அவர்கள் கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அந்த ஆதரவு சஜித்துக்கு சரிவை ஏற்படுத்துமா என்றால் இல்லை என்றே கூறுவேன். இ.தொ.கா கோட்டாபயவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தாலும்   மலையக மக்கள் அதற்கு சாதகமாக இல்லை என்பதே  உண்மை. எங்களது கருத்துக் கணிப்பின்படி, கட்சியின் நிலைப்பாட்டை வைத்து பார்க்கவில்லை. மக்கள் சஜித் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான்  இருக்கிறார்கள். மலையக மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறது. சஜித்திற்கான ஆதரவு அலை இன்றுவரை இருக்கிறது.  

2015 நடைபெற்ற தேர்தலைப் போன்றதொரு நிலையே காணப்படுகிறது என்கிறீர்களா? 

அன்றைய போக்குக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. 2015இல் கூட ஒரு தளம்பல் நிலை இருந்தது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நேரடி வேட்பாளராக எவரும் களமிறங்கவில்லை. அப்போது உண்மையான ஐக்கிய தேசியக்கட்சியினர் எவரும் அன்று வாக்களிக்கவில்லை. காரணம் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்டாரே தவிர அவர் ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்தவரல்ல. அதனால் 2015  கள நிலவரப்படி மஹிந்த ராஜபக்ஷ என்ற நபரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் இருந்தது. இன்று அப்படியல்ல, நேரடியாகவே சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக்கட்சியின் நேரடி வேட்பாளர். இது ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் போட்டியிடவில்லை. பத்து வருடங்கள் கழித்து ஐ.தே.க வேட்பாளர் களமிறங்குகிறார். அதைவிட சஜித் பிரேமதாச என்ற இளைஞர், 52 வயதான இவர், நாட்டின் தலைமைத்துவத்திற்கு இளைஞராகவும் அரசியலில் 25 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் வாரிசாகவும் இருப்பது அவருக்கு இரட்டிப்பு வாய்ப்பு. அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மக்கள் தலைவனாக இருக்கிறார். 

இருப்பினும் ஒருவிடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள், கள்ளத்தோணி என்ற அந்த மரபை மாற்றி செளமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே மலையகத் தமிழர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்தார். பிரஜாவுரிமை பெற்ற மலையகத் தமிழர்களில் நானும் ஒருவன். அதுவரை எனது தந்தையாரும் எனது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறும் பட்டியலிலேயே  இருந்தோம். ரணசிங்க பிரேமதாச என்ற நாட்டின் தலைவரின் மகன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை காலமும் நாட்டின் தலைவர்களாக இருந்தவர்கள் ஏதாவதொரு விதத்தில் மக்களால் விமர்சனங்களுக்குள்ளானவர்கள். ஆனால் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக எந்தவொரு விமர்சனமும் எழவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.  

கோட்டாபய ராஜபக்ஷவை எப்படி எடைபோடுகிறீர்கள்?  

கோட்டாபய ராஜபக்ஷவை நான் எடைபோட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஊடகவியலாளர்கள். ஒட்டுமொத்த மக்களும் அவரை எடைபோட்டுப் பார்த்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தன்னை ஒரு இராணுவ ஆட்சியாளராக, அதிகாரியாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து ரீதியான ஆட்சி நடத்தியவர். ஒரு அரசியல் தலைவராக வருபவர் பிரதேச, மாகாண, மாவட்ட ரீதியாக அரசியலில் படிப்படியாக உயர்ந்து பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சராக, பிரதமராக இருந்து ஜனாதிபதியாக     வரவேண்டும்.   அதுபோல் ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க அதுபோல் சஜித் பிரேமதாசவும் கீழ் மட்டத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து நாட்டின் தலைவருக்கான தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். நானும் அப்படித்தான். கடந்த 15 வருடங்களாக மாநகர சபை, மாகாண சபை என அரசியலில் இறங்கி மக்கள் மத்தியில் வேலை செய்து அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றி படிப்படியாக உயர்ந்திருக்கிறேன். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ என்ற அந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அந்த அனுபவங்கள் இல்லை. அவ்வாறான வழியில் வந்தவரல்ல கோட்டாபய. அதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.  

நல்லாட்சியில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு தங்களது அபிவிருத்திகளோ, இனப்பிரச்சினைத் தீர்வோ அல்லது சம்பள அதிகரிப்போ, அபிவிருத்தித் திட்டங்களோ அல்ல. அமைதி, நிம்மதி. வெள்ளை வான் கடத்தல்கள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ் வேண்டும் என்பதே மக்களின்  தேவையாக இருக்கிறது.  கடந்த நான்கரை ஆண்டுகளின் நல்லாட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்தானே! வெள்ளை வான் கடத்தல்கள் இல்லை. யாராவது கடத்தப்பட்டார்களா? எரியூட்டப்பட்டார்களா? கொல்லப்பட்டார்களா? எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். பொதுவாகவே எந்தவொரு அரசாங்கமும் தமிழர்களுக்கென எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.  

ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரையில் அமைச்சர் மனோகணேசன் இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கின்றார். தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழி, சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் என்ற முறையில் பெருமளவு  நிதியை ஒதுக்கீடு செய்து அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின்பேரில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போதுதான் விதை போடப்பட்டுள்ளது. இதன் பலாபலன்களை அடுத்தடுத்த வருடங்களில் காணக்கூடியதாக இருக்கும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்ற குறுகியகாலப்பகுதிக்குள் நிறைய அபிவிருத்திகளைச் செய்திருக்கிறார் அமைச்சர் மனோகணேசன். தமிழ்ப் பாடசாலைகளுக்கு அதிகளவு நிதியொதுக்கீடுகளைச் செய்தவர். அதுபோல அமைச்சர் திகாம்பரம் தனது அமைச்சின் மூலம் வீடமைப்புத் திட்டங்களை செய்திருக்கிறார். கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வீ. இராதாகிருஷ்ணன் பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்திருக்கிறார். இந்த ஆட்சிகாலப் பகுதியில் மலையக அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. இரண்டு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன.  

சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். இதில் புதிதாக செயலணியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கிறார். அதுபற்றி சொல்கிறீர்களா?

சஜித் "என் தலையை அடகு வைத்தேனும் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" எனக் கூறியிருக்கிறார். ஏன் அப்படிக் கூறுகிறார் என்றால் தமிழ் முற்போக்குக் கூட்டணி வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். தனிநாடு, ஈழம், தனி பொலிஸ் அதிகாரம் எதனையும் நாம் கேட்கவில்லை. மலையக மக்கள் தங்களுக்குத் தேவையான காணி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றே கேட்கிறார்கள்.  ஏழு பேர்ச் காணி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் காணி அதிகாரங்கள், மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் இவ்வாறான சாதாரண கோரிக்கைகளையே நாம் முன்வைத்திருக்கிறோம். அவராலும் இதனை செய்யக்கூடியதாக இருக்கும். வாழ்க்கை என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் நாம் வாக்களிப்போம்.  

பயத்துடன் நாம் வாக்களிக்க முடியாது. இலங்கை அழகான நாடு, சகல இனத்தவரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழும் ஒரு நாடு. மக்கள் நிம்மதியாக வாழவே விரும்புகிறார்களேயொழிய எந்தநாளும் குண்டுவெடிப்புகள், வன்முறைகள் கைதுகள்  என அச்சத்தில் வாழ விரும்பமாட்டார்கள்.  

இ.தொ.கா சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? 

நாலைந்து தடவைகள் சந்தித்துப் பேசியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். தமிழ் முற்போக்குக் கூட்டணியாக நாங்கள் சொல்வது சஜித் ஜனாதிபதியாக வெற்றிபெற வேண்டும் என்பதைத்தான்.  அதற்கு எந்தக்கட்சி ஆதரவு கொடுத்தாலும் பரவாயில்லை என்ற பெருமனதுடன் இருந்தோம். இ.தொ.காவாக இருக்கலாம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம், ஹிஸ்புல்லாவாக இருக்கலாம். யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கும்போது எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்ற நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இருந்தது.  

சஜித்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமா? 

ஏற்கனவே தமிழ் முற்போக்குக் கூட்டணி பத்து அம்ச கோரிக்கையை அவரிடம் வழங்கியுள்ளது. கையொப்பம் இடுவதால் எல்லாம் நடக்கும் என்று சொல்லமுடியாது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் மலையக மக்களைச் சார்ந்ததே. அதற்காக அது ஒரு சட்ட ஆவணமாகாது. இது ஒரு புரிந்துணர்வு. தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. அனைத்தும் நிறைவேற்றக்கூடியதே. எனவே பொறுத்திருந்து பாருங்கள். எமக்கு சஜித்தைத் தெரியும். எம்மை அவர் அறிவார்.

சந்தித்தவர்கள்: அருள் சத்தியநாதன், பி. வீரசிங்கம்

Comments