தீபாவளித் திருநாள் பண்பாடும் பின்புலமும் | தினகரன் வாரமஞ்சரி

தீபாவளித் திருநாள் பண்பாடும் பின்புலமும்

புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளே இன்று தீபாவளியாகிவிட்டது. இறைவன் அசுரனை அழித்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தின் பின்னணியில் ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அதாவது நம் உள்ளத்தில் எழும் காம, குரோத, பாப குணங்களான அழுக்குகளை நீக்கி சத்வ குணமான நல்ல மனதைப் பெற வேண்டும் எனும் செய்தியை மக்களுக்கு உணர்த்துவதே அந்தத் தத்துவம்.  

தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதம் வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் திகதி தீபாவளி வந்தது.  

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.  

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.  

எங்கெல்லாம், அநீதி தழைத்தோங்கி தர்மவாழ்வு சிதைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் தோன்றி அதர்மம் செய்பவர்களை அழித்து நல்லோரை வாழ்விக்கிறான் என்பதற்கு எடுத்துக் காட்டாக தீபாவளி திருநாள் அமைந்திருக்கிறது. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான ஒரு போராட்டத்தில், எத்தகைய நிலையில் தர்மம் வெற்றி பெறுகிறது என்பதை இது சொல்கிறது. இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் தீபாவளி ஓர் உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அறியாமை இருள் அகன்ற நாள், அறிவொளி பரந்த நாள், அசுர  குணங்கள் தேய்ந்து விலகிய நாள், தெய்வீகம் பொங்கிப் பிரவாகித்த புனிதநாள். அகந்தை ஒழிந்த நாள். அருளும், கருணையும் மறுமலர்ச்சி பெற்ற நாள். அச்சம் கழிந்த நாள், அமைதி பிறந்த நாள், தீயனவெல்லாம் தொலைந்த திருநாள் என்றெல்லாம் சிறப்புப் பெறுகிறது இந்த்த் தீபாவளி திருநாள்.  

திருமாலின் அவதாரத்தின் போது பூதேவியின் மகனாகப் பிறந்த நரகாசுரன். மக்களுக்கு எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான். தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்ற நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.  

நரகாசுரன் கிருஷ்ணர் மீது அம்பு எய்தான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். உடனே சத்யபாமா நானேந்தி அஸ்திரம் கொடுத்தாள். சத்யபாமாவின் அம்புக்கு பலியாகி விழுந்தான் நரகாசுரன்.  

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். எல்லா மக்களும் இந்த நாளை திருநாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டியதால் தீபாவளி உருவானது என்பது புரான காரணம்.  

ஒருவர் இறந்து போனால் எண்ணெய் வைத்து குளிப்பது வழக்கம். தீபாவளி அன்றும் அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது எந்த நீரில் குளித்தாலும் அது கங்கைக்குரிய அந்தஸ்தை பெறுவதால் கங்கா ஸ்நானம் என்கிறோம்.  

அவன் மகன் பகதத்தன் தான் முதல் முதலில் தீபாவளி கொண்டாடினான், ராவணனை வென்று சீதையை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் ஆகவும் தீபாவளி அமைகிறது.  

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு வெடித்தல், இனிப்பு வகைகள் செய்தல், என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.  

தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது அனைவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றி பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.  

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும். தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் என்பதாகும். எனவே, இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

துன்பம், அச்சம் என்பன இருளின் இயல்பு; இன்பம், தெளிவு என்பன ஒளியின் சிறப்பு. ஒருவர் இன்பமும் தெளிவும் பெறவேண்டுமானால் துன்பமும் அச்சமும் அகல வேண்டும். இருள் அகல தீபம் துணை நிற்கும். தெளிவு பிறக்க பக்தி வழிகாட்டும். எனவேதான் தீபங்கள் ஏற்றிவைத்து தீபாவளியை பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.  

பண்டிகைகள் சமய நோக்கு, சமூக நோக்கு என இருவகையானவை. சமய நோக்கில் பெரிதும் இடம்பெறுவது வழிபாடு செய்பவரின் சுயதேவைகள், நலன்கள் என்பவற்றை நிறைவுசெய்வதற்கான வேண்டுதல்களை இறைவனிடம் முன்வைத்துப் பெற்றுக் கொள்ளுதலும், ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட வரங்களுக்கு நன்றி சொல்லுதலும் ஆகும். அந்தவகையில், தீபாவளி பண்டிகை சமய, சமூக நோக்குகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஈதல் அறம், பகிர்ந்துண்ணல், பகைமை ஒழித்தல், பிறர்நலம் பேணுதல், வேற்றுமையில் ஒற்றுமை காணுதல், இன, மத குல அந்தஸ்து பேதங்களை தவிர்த்தல் என்பன மூலம் தீபாவளி திருநாள் ஓர் ஒற்றுமைத்தினம் என்பதாகவும் சிறப்புப் பெறுகிறது.  

தீபாவளி தினத்தன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, கோயில்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்து கொள்வது முக்கிய கருமங்களாக அமைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நெருங்கிய உறவினர்களது வீடுகளுக்குச் சென்று வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வதுடன், இனிப்புப் பலகாரங்கள் வழங்கி விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும் ஒரு பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது.  

தீபாவளி என்பது மது அருந்தி, மாமிச உணவுகளை உண்ணும் ஒரு கொண்டாட்டமாகவே முன்னைய காலத்தில் ஒரு சிலரால் கருதப்பட்டது மட்டுமல்ல. அதனையே அவர்கள் பின்பற்றியும் வந்தார்கள். இந்து மதத்தினருக்கு உரிய ஒரு வழிபாட்டு நாளாகவும், ஓர் இந்துப் பண்டிகையாகவும் அமைந்திருக்கும் தீபாவளி திருநாளில் இத்தகைய செயற்பாடுகளை அறியாமை காரணமாக முன்னைய காலத்தில் ஒருசிலர் மேற்கொண்டு வந்திருப்பது எமது இந்து மதப் பாரம் பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் எவ்வகையிலும் பொருந்தாது. இத்தகைய ஒரு குறைபாடு முன்னர் இலங்கையின் வடபகுதியில் காணப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. பின்னர் ஏற்பட்ட காலமாற்றமும், அதற்கு அமைவாக மக்கள் மனதில் உருவான புதிய சிந்தனைகளும், தொடர்ந்து வந்த நாகரிக வளர்ச்சியும் நவீனத்துவ செயற்பாடுகளின் அறிமுகமும் இத்தகைய இழிவான செயல்களுக்கு முற்றுப் புள்ளியாக அமைந்தன எனலாம். குறிப்பாக, அறுபதுகளின் இறுதியில் இந்த நிலை மாறிவிட்டது என்று சொல்லலாம்.  

பல்வேறு படையெடுப்புகளால் நம் பண்பாடு மற்றும் கலாசாரங்கள் மட்டுமல்லாமல், நம் பழங்கால வழிபாட்டு முறைகளும் தற்போது பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கின்றன. எந்த ஒரு விழாவையும் தற்போதுள்ள நம்பிக்கைகளின் வழியாக மட்டும் பார்த்துக் கொண்டாடுவதோ அல்லது அதை மட்டுமே கருத்தில் கொண்டு எதிர்ப்பதோ கூடாது. ஒவ்வொன்றுக்கும் பின்னாலுள்ள வரலாற்றை அறிந்துகொள்ள முற்படுவது அவசியம். அப்படிக் கொண்டாடுவதன் மூலம்தான் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் பண்பாட்டைக் கொண்டு செல்லமுடியும்.    

ஆர். மகேஸ்வரன்
நூலகர் 
பேராதனைப் பல்கலைக்கழகம்.   

Comments