எதனையும் செய்ய மாட்டோம் என்கிறவர்களுக்கு எப்படி ஆதரவை வழங்குவது? | தினகரன் வாரமஞ்சரி

எதனையும் செய்ய மாட்டோம் என்கிறவர்களுக்கு எப்படி ஆதரவை வழங்குவது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி....

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எந்தச் சிங்களக் கட்சிக்கும்  வாக்களிக்க முடியாது என்றும் ஆனால் தேர்தலில் வாக்களியுங்கள் என்று தமிழ்  மக்களிடம் கூறியிருப்பதன் மூலம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு நேரடியாக  அல்லாமல் மறைமுகமாக கையைக் காட்டியிருக்கின்றார் என்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம். அவரது செவ்வி விரிவாக....

கேள்வி – நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்: - நாட்டில் ஏழு ஐனாதிபதித் தேர்தல் முடிவடைந்திருக்கின்ற நிலையில் தற்போது எட்டாவது ஐனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியானதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியமானது. அந்த நிலைப்பாடு என்பது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதாகவே அமைய வேண்டும். 

ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். ஆகவே இனியும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படவும் கூடாது. அதே நேரம் ஏமாறவும் கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். ஆகவே ஏமாந்து போவதனை விடவும் எமது நிலைப்பாட்டை நாம் தெரிவிக்ககக்கூடிய வழிமுறைகள் இருப்பின் அதனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

குறிப்பாக ஐனாதிபதித் தேர்தல் என்பதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி தமக்கான ஆதரவை கோருவார்கள். அனால் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்கள் கூறிய வாக்குறுதிகளை அவர்களே மறந்துவிடுவார்கள் அல்லது அதனைச் செய்ய மாட்டார்கள் என்பது தான் யதார்த்தமாக உள்ளது.  

இதனை தமிழில் இருக்கின்ற பழமொழிகளைப் போன்று சொல்வதானால் தேர்தல் காலத்தில் 'ஆறு கடக்கும் வரை அண்ணண் தம்பி' ஆனால் ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்பது போல் தான் தேர்தல் முடிவுகளின் பின்னர் இருக்கும். இந்த நிலைமை தொடர்வதால் நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஆகவே இந்த நிலை மாற வேண்டும். 

கேள்வி – தமிழர் தரப்பு பொது வேட்பாளர் தொடர்பில் பேசியிருந்த போதும் இறுதியில் பொது வேட்பாளரை நிறுத்தாத நிலையில் நீங்கள் களமிறங்கியிருக்கின்றீர்களே? 

பதில்: - தமிழ் மக்கள் பேரவையின் சுயாதினக் குழு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. இதற்கமைய தமிழர் தரப்பு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தது. ஆயினும் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் தமிழர் தரப்பின் சார்பாக ஒரு பொது வேட்பாளராகவே நான் களமிறங்கியிருக்கிறேன்.  

இதனூடாக தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளையும் நீதிக்கான கோரிக்கைகளையும் வலியுறுத்துவதுடன் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். இதற்கு பலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தாலும் தமிழ் மக்களுக்காக களமிறங்கியுள்ள எனது பயணம் பலரதும் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. 

கேள்வி – தேர்தலில் நீங்கள் களமிறங்கியிருப்பது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே? 

பதில்: - தமிழர் தரப்பு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி எடுத்தமை அனைவருக்கும் தெரியும். அப்போது உடையாத வாக்குகள் இப்ப நான் களமிறங்கியிருப்பதால் உடையுமென்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கருத்தாகவே நான் பார்க்கிறேன். குறிப்பாக தமிழர் தரப்பின் சார்பில் நான் களமிறங்கியிருப்பதால் வாக்குகள் உடையுமென்று கூறுவார்களாயின் யாரின் வாக்குகள் உடையும் என்ற கேள்வி எழுகிறது.  

குறிப்பாக வெல்லக் கூடிய சிங்களப் பேரினவாதிகளின் வாக்குகள் தான் உடையுமென்றால் வெல்லக் கூடியவர் தமிழ் மக்களுக்கு எதனைச் செய்யப் போகின்றார் என்பதே கேள்வியாக உள்ளது. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பேசுவதற்குக் கூட தயாரில்லாத வேட்பாளர்களாகத் தான் இவர்கள் இருக்கின்றனர்.  

அதிலும் குறிப்பாக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரித்துள்ள 13கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை எந்தவொரு பிரதான சிங்கள வேட்பாளர்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மறுத்துள்ளனர். ஆகவே எதனையும் செய்ய மாட்டோம் என்றவர்களுக்கு எப்படி ஆதரவை வழங்க முடியும்.  

ஆகவே நீங்கள் எதனையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி அவர்களின் காலில் சென்று நாம் ஆதரவை வழங்கி அடிமை வாழ்வை வாழ வேண்டுமா என்பதே கேள்வி. ஆகையினால் தமிழர் தரப்பிலிருந்து நான் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.  

அதற்காக விமர்சனங்களை சிலர் முன்வைத்தாலும் பரவாயில்லை. அந்த விமர்சனங்களையும் தாண்டி எனது மக்களுக்கான என்னுடைய பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன். என்னுடைய இந்தப் பயணத்திற்கு தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலுமென பலரும் ஆதரவையே வழங்கி வருகின்றனர். 

கேள்வி – நீங்கள் கூறுவது போன்று தமிழ் பொது வேட்பாளரான உங்களை மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? 

பதில்: - பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் நேரடியாக எதனையும் செய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ முடியாமல் தடுமாறுவதில் இருந்தே பொது வேட்பாளருக்கான நியாயம் பலமடைந்து வருகிறது.  

ஆகையினால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழர் தரப்பின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி போட்டியிடுகின்ற எனக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அந்த வகையிலே இவ்வாறான விடயத்தை முன்னெடுச்துச் செல்ல நான் தயாராக இருக்கிறேன். 

கேள்வி – ஐந்து தமிழ்க் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்காமல் வாக்களியுங்கள் என்று கோரியிருப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

பதில் - முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எந்தச் சிங்களக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது என்றும் ஆனால் தேர்தலில் வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களிடம் கூறியிருப்பதன் மூலம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கையைக் காட்டியிருக்கின்றார்.  

இதன் பின்னர் ஐந்து தமிழ்க் கட்சிகள் தாங்கள் கூடி ஆராய்ந்த போதிலும் தாமும் யாருக்கும் வாக்களியுங்கள் என்று கூற முடியாது என்றும் நீங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளனர்.  

அவ்வாறு விரும்பியவர்களிலே தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்பதாக கூட அவர்களது நிலைப்பாடு இருக்கலாம். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லகின்ற திராணி அந்த ஐந்து கட்சிகளிடமும் இருக்கவில்லை. அதனை நியாயப்படுத்தவதற்கான காரணிகளும் இல்லை. ஆகவே அவர் தனிய நிற்கிறார் உடைக்கிறார் சதி என்று கூட சொல்ல முடியாமல் இருக்கிறது.  

ஏற்கனவே பிரதான மூன்று கட்சிகள் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பக்கச் சார்பு என்று சொல்ல முடியாத நிலைமையில் ஐந்த தமிழ்க் கட்சிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அந்தக் கட்சிகள் அடுத்த வாரம் கூட ஒரு முடிவை எடுத்து அறிவிப்பார்கள் என நினைக்கவில்லை.  

கேள்வி – ஐந்து கட்சிகளும் பொதுவான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் அவர்கள் தனித் தனியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் செயற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? 

பதில்: - தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது ஐந்து கட்சிகளோ தாம் ஒருவரைச் சுட்டிக்காட்டினால் அந்த கட்சி அல்லது அந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு குறையுமென்று கருதலாம். ஆகவே அந்த தந்திரோபாயத்தை வைத்துக் கொண்டு தான் இரகசியமாக குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டில் கூட இருக்கலாம்.  

குறிப்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வழங்குவதான நிகழ்ச்சி நிரலைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஒரு சிலர் முன்னெடுக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. ஆகையினால் இவர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அந்த முடிவிற்கமைய செயற்பட முடியும் அல்லது இரகசியமாக அதற்கான வேலைகளில் ஈடுபடவும் சாத்தியம் உள்ளது. 

கேள்வி – தமிழர் தரப்பின் அத்தகைய செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்: - தற்போது நடக்கின்ற விடயங்களை வைத்துக் கொண்டே நான் இதனைப் பேசுகின்றேன். இவர்கள் ஒரு முடிவை அறிவிக்காமலே ஆதரவு வழங்கியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காத அல்லது அதனை நிராகரிக்கிற தரப்புக்களுக்கு எவ்வாறு உங்கள் ஆதரவை வழங்கப் போகின்றீர்கள் என்று இவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். 

குறிப்பாக கடந்த தேர்தலிலே இதயத்தோடு இதயமாக நின்று வெற்றி பெற்று கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணைந்திருந்த நீலமும் பச்சையும் இணைந்த ஆட்சியில் ஒர் அருமையான சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் கூட அரசியல் தீர்வை கொண்டு வர முடியாமல் போய்விட்டது என்றால் இப்போது தீர்வு எப்படி சாத்தியமாகும். எந்த அடிப்படையில் ஆதரவை வழங்க முன்வருகிறீர்கள் என்று கேட்கிறேன். 

கேள்வி – தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள்? 

பதில்: - இந்த நாட்டில் தற்போது நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் பார்த்தால் எதிர்காலத்தில் ஒரு அரசியல் தீர்வு என்பது இலங்கைக்குள் இருக்குமா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறென்றால் எங்களைப் பொறுத்தவரையில்  புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஐனாதிபதி மூன்று மாதங்களுக்கு அவர் அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறு அதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் வடகிழக்கு பிராந்தியத்திலே ஒரு சர்வஐன வாக்கெடுப்பை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை கோருவதைத் தவிர எங்ளுக்கு வேறு வழியில்லை.  

இதைப் போல நடைபெற்ற போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு இலங்கைக்குள்ளே தாங்கள் விசாரணைகளை நடாத்துவோம் என்று சொன்ன அரசு, இப்போது முடியாது என மறுத்திருக்கின்ற சூழ்நிலையில் ஐ.நா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எமக்கான நீதியையும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் வேண்டுமென்றும் கோருவோம்.  

அவ்வாறு நாம் கோருகின்ற போது இனப்படுகொலைக் குற்றவாளிகளான முன்னாள் ஐனாதி பதிகளான மகிந்த, சந்திரிகா உட்பட கோத்தபாய ராஐபக்ச இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் என அத்தனைபேரும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.  

அதிலே எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்ற அடிப்படையில் தான் என்னுடைய பிரச்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ் மக்கள் மீன் சின்னத்திற்கு வாக்களித்து உலகறிய தமிழ் மக்களின் அபிலாசைகளை தெரிவிக்க வேண்டுமென்று அன்பாகவும் பணிவாகவும் கேட்டுக் கொள்கிறேன்.  

கேள்வி –உங்களுக்கு எதிராக உங்கள் கட்சி நடவடிக்கைகள் எடுக்கிறதே? 

பதில்: - கட்சியில் பல ஆண்டு காலம் பல பதவிகளில் நான் இருந்திருக்கிறேன். கட்சி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நான் ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன். ஆகவே எனக்கு எதிராக கட்சி எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். தமிழ் மக்களுக்காக நான் எடுத்துள்ள எனது பயணம் தொடந்தும் முன்னெடுக்கப்படும். 

ஆனாலும் நான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டதாக என் மீது நடவடிக்கை எடுக்கின்ற அதே நேரத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் கட்சிக் கட்டுப்பாட்டை அல்லது தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்.  கட்சியின் சட்ட திட்டங்கள் எல்லாம் எனக்கும் தெரியும். ஆகையினால் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராகவே இருக்கிறேன்.   

பருத்தித்துறை விசேட நிரூபர் - எஸ்.நிதர்ஷன்

Comments