சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் | தினகரன் வாரமஞ்சரி

சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம்

அடிப்படைவாதத்தை வளர்த்து மோதலை உருவாக்கி ஒரு நாட்டால் முன்னோக்கிசெல்ல முடியாதென்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் இலங்கையர்கள் என ஒற்றுமையாக இருக்க வேண்டுமென தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கூறினார். காத்தான்குடி நகரில் (29)ம் திகதி பெண்களுக்கான கூட்டமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். “சுதந்திரத்துக்குப் பின்னர் எமது நாட்டில் 15அரசாங்கங்கள் ஆட்சிசெய்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 34வருடங்கள் ஆட்சி செய்தது. 71வருடங்கள் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தன. அந்த இரண்டுகட்சிகளுடனும் மாறி மாறி ஹக்கீம், அமீர்அலி, அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோரும் இணைந்திருந்தார்கள்.

இன்று எமது நாட்டின் நிலைமை என்ன? பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேசத்துக்கு கடனாளியான நாடொன்றே எமக்கு எஞ்சியுள்ளது. பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்களால் தாங்கமுடியாத அளவு வாழ்க்கை செலவு அதகரித்துள்ளது. விவசாயிகளின் அறுவடைகளை விற்க முடியாதுள்ளது.

வருமானத்துக்கு வழியில்லை. எமது பிள்ளைகள் படிப்பதற்கு வசதிகள் இல்லை. மருந்தெடுக்க சுகாதார வசதிகள் இல்லை. நாட்டுக்கு என்ன அழிவை ஏற்படுத்த முடியுமா அதை இந்த ஆட்சியாளர்கள் செய்துள்ளார்கள். “சிங்கள, தமிழ், முஸ்லிம் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டிய நாடு. ஆனால் என்ன நடந்துள்ளது. இவர்கள் யுத்தத்தை ஏற்படுத்தினார்கள். மோதலை உருவாக்கினார்கள். நாம் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும்நம்பிக்கையில்லாமலும் நோக்கும் நிலைமையை ஏற்படுத்தினார்கள். இந்த ஆட்சியாளர்களை மாற்ற வேண்டாமா? இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது யார்? எமது நாட்டில் பிள்ளைகளுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்க பெண்களே பெரிதும் சிரமப்படுகின்றார்கள். எமது பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது பெண்களே. தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்பவர்களும் பெண்களே. ஆடைத் தொழிற்சாலைகளில் அதிகளவு பெண்களே வேலை செய்கின்றார்கள். வெளிநாட்டு பணிப்பெண்களாகவும் பெண்கள் பணிபுரிகின்றார்கள். ஆனால் பெண்களுக்கான கௌரவம், பாதுகாப்பு, பெறுமதியை வழங்க ஆட்சியாளர்களால் முடிந்துள்ளதா? இல்லை. எமது நாட்டு பல்கலைக்கழகங்கிளல் 70%த்தை பிரதிநிதித்துவம் செய்வது பெண்களாகும். ஆனால் மொத்த வேலை வாய்ப்பின் 31%மானோரே பெண்கள் காணப்படுகின்றார்கள். எமதுபெண்கள் அதிகளவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எமது நாட்டில் நாளொன்றுக்கு 638கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்களின் சுகாதார தேவைகளுக்கான பொருட்களை விலைக்குவாங்கும் சக்தியும் பலரிடமில்லை. “நீங்கள் காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு செல்லும் போதுவசதிகளுடன் கூடிய மலசலகூட தொகுதிகள் இல்லை. அண்மையில் பி.பி.சி. நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பொது போக்குவரத்துகளில் எமது பெண்கள் 90%மானோர் தொல்லைகளுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது. அவற்றில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களாகும். இது நியாயமானதா? அதனால் பெண்களாக இந்த சமூகத்தில் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் யுத்தத்தில் இறந்தவர்களில்,  எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் அங்கத்தவர்களில்,  சாதாரண குடிமக்களில், அதிகமானோர் விதவைகளாக உள்ளார்கள். வடக்கில் மாத்திரம் யுத்தம் காரணமாக பெண்கள் விதவைகளாகியுள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையை வளமாக்க வேண்டாமா? அதேபோல் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அதன் சுமை பெண்கள் மீதே சுமத்தப்படுகின்றது.

பொதுவாக எமது நாட்டில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அதிலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் எமது நாட்டுக்கு புதிய அரசியலொன்று தேவை. நாம் சகோதரத்துவத்துடனும், சமமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்களால் 71வருடங்களாக அவ்வாறான நாடொன்றை உருவாக்க முடியாமற்போயுள்ளது. எம்முன்னால் உள்ள சகோதரிகளைப் பார்த்தால் எமது சகோதரிகளின் ஞாபகமே வருகின்றது. இன்று நான் காத்தான்குடிக்கு வந்தது நாம் தூரமாகிப் போவதை, பிரிந்து செல்வதை தவிர்த்து ஒன்றிணைந்தால், புதிய நாடொன்றை உருவாக்கலாம். நாம் அனைவரும் வாழக்கூடிய, சுதந்திரமுள்ள நாட்டை உருவாக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். “எமது நிர்வாகத்தின் கீழ் எமது நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்புக்கு உறுதியளிக்கின்றோம். ஒரு இன மக்களுக்காக மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் பாதுகாப்பை நாம் உறுதிசெய்வோம். யுத்தம் முடிவடைந்து 5வருடங்கள் செல்வதற்கு முன்னர் 2014ல் அளுத்கம, தர்கா நகர் ஆகிய இடங்களில் கலவரம் ஏற்பட்டது. மீண்டும் 2018ல் திகன, அக்குறணை போன்ற பிரதேசங்களில் மோதல்கள் ஏற்பட்டன. 2019ல் குண்டு வெடித்தது.

அடிப்படைவாதத்தை வளர்த்து மோதலை உருவாக்கி நாட்டை முன்னேற்ற முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் ஆகிய நாம் அனைவரும் இலங்கையர்கள். சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக உள்ள இனத்தை நாம் உருவாக்க வேண்டும்.

Comments