சமூக புரட்சியின் ஆரம்பம் - சஜித் | தினகரன் வாரமஞ்சரி

சமூக புரட்சியின் ஆரம்பம் - சஜித்

வலுவான நாடு, போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் மற்றும் நீதியான சமூகம் என்ற தொனிப் பொருளில் சமூக பொருளாதார அரசியல் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார். 

கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற விசேட வைபவத்தின்போது அவர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துகையில் பல்வேறு முக்கிய விடயங்களைக் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.  

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் தாமதமின்றி மேற்கொள்வதனூடாக 'மக்களின் அரசியலமைப்பு' பாராளுமன்றம் மூலம் ஆரம்பிக்கப்படும்.  

பிரதமரின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்று ஜனாதிபதியின் செயற்பாடுகள், அதிகார பகிர்வு மற்றும் தேர்தல்முறை மாற்றம் ஆகியவை அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் தாமதமின்றி நிறைவு செய்யப்படும். சுதந்திரம் மற்றும் சமத்துவமான பிரஜைகளாக அனைவரும் வாழக்கூடிய எந்தவொரு வித்தியாசமும் இல்லாத வகையில் நாட்டில் அனைத்து மக்களும் அமைதியுடனும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையும் உருவாக்கப்படும்.  

எமது நாட்டை ஆட்சி செய்வதை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் புதிய அரசியலமைப்பு நாட்டு மக்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

தேர்தல் முறைமாற்றம், ஊழல் மோசடிகள் மற்றும் வீண்விரயங்களைத் தவிர்த்தல் விருப்பு வாக்கு தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார அங்கத்துவத்துக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தி அதனைப் பாதுகாக்கும் முறையொன்று உருவாக்கப்படும்.  

புதிய அரசியலமைப்பின் மூலம் தேர்தல் முறை மாற்றப்படும். பாராளுமன்றத்தில் கட்சித் தாவுதலை முடிவுக்கு கொண்டுவருதல், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரித்தல், மக்களின் தேர்தல் விருப்பு வாக்கை பாதுகாத்தல் ஆகியன உள்ளடங்கியதாக புதிய அரசியலமைப்பு அமையும்.  

புதிய அரசியலமைப்பு 19ஆவது திருத்தத்திற்கு இணங்க உருவாக்கப்படுவதோடு அரசியலமைப்பு பேரவையில் அதிக சிவில் சமூகங்களை இணைத்துக்கொள்ளுதல், ஆணைக் குழுக்களின் சுயாதீனத்தன்மை மற்றும் அதன் மூலமான பிரதிபலன்களை அதிகரித்தல், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை தேசிய பட்டியல் மூலமாக நியமிக்கப்படும் உறுப்பினர்களில் ஆகக் குறைந்தது 25%பெண்கள் என உறுதி செய்வது பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை சட்டமாக்குதல்,  

நீதிமன்ற சுயாதீனம்:  

நீதிமன்றம் அரசாங்கத்திடமிருந்து சுயாதீனமாக்கப்பட வேண்டும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவை மூலம் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார்.  

அடிப்படை உரிமை:  

பலம்மிக்கவர்களாக நாட்டு மக்களை உருவாக்கும் வகையில் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். மக்களது அடிப்படை உரிமை மீறப்படும்போது அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் கொழும்பு உச்சநீதிமன்றம் மற்றுமன்றி அதனோடு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டைத் தாக்கல் செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல்,  

மக்களுக்கு அதிகாரம்:  

நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களில் மக்கள் மேலும் நெருக்கமாக்கப்படுவார்கள். பிளவுபடாத, பிரிக்கப்படாத இலங்கையில் உச்சளவு அதிகாரப் பகிர்வு.சட்டத்தின் மூலம் மட்டுமன்றி உள ரீதியாகவும் இலங்கையர்கள் மத்தியில் நிலையான சமத்துவத்தை ஏற்படுத்துதல் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்,  

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளைக் கவனத்திற்கொண்டு மாகாண அதிகாரம், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தல் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அவர்களின் அதிகாரத்தை செயற்படுத்துவது உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கிய இரண்டாவது சபையாக செனற் சபையை உருவாக்குதல்,  

போதைவஸ்து, ஊழலுக்கு எதிராக மற்றும் அடிப்படை வாதத்திற்கு எதிராக கடுமையான கொள்கையை நடைமுறைப்படுத்தல், நாட்டின் மூன்று முக்கிய மோசமான விடயங்களான போதைப்பொருள், ஊழல் மற்றும் மத ரீதியான அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக சட்டங்களை உருவாக்குதல்,  

பலமான நாட்டை உறுதிசெய்தல்:  

எமது பாதுகாப்பு கொள்கை, புலனாய்வு ஆகியவை பலப்படுத்தப்படவேண்டும். நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரும் அச்சுறுத்தல்களை ஏற்கனவே இனங்காணுதல் முக்கியமாகும். அதற்கான மூலோபாயங்களை அபிவிருத்தி செய்தல் அவசியம். அத்துடன் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல் தலையீடுகள் இல்லாமல் சகலரும் செயற்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். பாதுகாப்பு படையினர் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு நவீனமயப்படுத்தப்பட்டு பாதுகாப்பு துறையை பலப்படுத்த வேண்டும்.  

நவீன பாரபட்சமற்ற நீதிமன்ற துறையை ஸ்தாபித்தல், இதுவரை குவிந்துள்ள 7,25,000க்கு அதிகமான வழக்குகளை விசாரணை செய்து நிறைவுசெய்தல், அதற்காக சட்டத் தொகுதியை விரைவுபடுத்தும் வகையில் அவற்றை இரட்டிப்பார்க்க வேண்டும். வழக்குகள் தாமதமாவதால் ஏற்படும் அநீதிகள் துயரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படல்வேண்டும்,  

சுதந்திரம் மற்றும் நீதியான ஊடகம்:  

நான்காவது அரசாங்கமாக இனம் காணப்படும் ஊடகம் சட்டவாக்கம் மற்றும் நீதித்துறைக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு தொடர்பிலான கொழும்பு பிரகடனத்திற்கு இணங்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்.  

ஊடகவியலாளர்களுக்கு 1000வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வட்டியில்லாத கடன் மூலம் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு வீட்டுத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். அதேநேரம் 2025இல் அனைத்துக் குடும்பங்களுக்கும் சொந்த வீடு பெற்றுக்ெகாடுக்கப்படும்.  

ஊடகவியலாளர்களுக்குப் 10மில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதியைப் பெற்றுக்கொடுத்தல், தகவல் சட்டத்தை மேலும் பலப்படுத்துதல் என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 20ஆயிரம் ரூபாயை 30ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.  

மேலும் 35வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

வடக்கு.கிழக்கு சமூக நிலை மாற்றம்வடக்கு, கிழக்குப் பகுதிகளின் மறுசீரமைப்புக்காகவும் சமூக  மேம்பாட்டுக்கான நடவடிக்ைககளைத் துரிதமாக முன்னெடுக்கவும் இரண்டு ஜனாதிபதி  செயலணிகள் ஏற்படுத்தப்படும். 

பாதுகாப்புக்கு அவசியமற்றதெனக் கருதப்படும் காணிகளைத்  துரிதமாக விடுவிப்பதற்கும் குற்றச்சாட்டுகளின்றி நீண்டகாலமாகத் தடுத்து  வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கும் துரித நடவடிக்ைக எடுக்கப்படும். 

வடக்கு மட்டும் கிழக்கு மாகாணங்களில் மறுசீரமைப்பு மற்றும்  சமூக மேம்பாட்டுக்கென இரண்டு ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிக்கப்படும்.  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள காணிப் பிரச்சினையை  ஒரு வருடத்திற்குள் தீர்த்துவைக்கும் ஜனாதிபதி ஆனைக்குழு நியமிக்கப்படும்.  மகாவலி, வனவிலங்கு, வேறு திணைக்களங்கள் போருக்கு முன்னர் மக்களுக்கு  சொந்தமாக இருந்த காணிகளை மக்கள் மீளக்குடிமயர்வதற்கென விடுவிக்கப்படும்.  

அகதிகளாக அந்நிய நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும்  இலங்கையர்களுக்கு அவர்கள் மீளத் திரும்புவதற்கான ஊக்குவிப்பும் உதவியும்  வழங்கப்படும். மேலும் மீளத்திரும்பும் செயல்முறையை எளிதாக்க தேவையான ஆதரவை  நாங்கள் வழங்குவோம்.

குற்றம் சுமத்தப்படாமல் விசாரணையின்றி நீண்ட காலம்  தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் விடுவிக்கப்படுவார்கள்.  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து காணாமலாக்கப்பட்டவர்களைக்   கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  அலுவலகத்தை நாம் முழுமையாக ஆதரிப்போம்.

எங்கள் வரலாற்றில் தனி  நபர்கள், குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பிற நிறுவனங்களின் வரலாற்று  வகிபாகம், சிந்தனைப் போக்கு அவர்கள் இழைத்த தவறுகள் என்பவற்றை மாணவர்கள்  புரிந்துகொள்ளும் வகையில் அவசியமான இடங்களில் பாடத்திட்டம் திருத்தியமைக்கப்படும்.

மலையக சமூக மேம்பாடு

தோட்டத் தமிழ் விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க 'அவுட் - க்ரோவர்' திட்டம் குறித்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பொறிமுறை.  

தோட்டப் பகுதிகளில் 10தேசிய பாடசாலைகள்.  

7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும்.  

நியாயமான மற்றும் சமமான சம்பள அதிகரிப்பு.  

பெருந்தோட்ட சுகாதாரமானது ஏனைய பகுதிகளைப் போன்று தரமுயர்த்தப்படும்.  

உயர் கல்வியை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகம் திறக்கப்படும்.   மனிதவளம் மற்றும் தாய்நாட்டை அடிப்படையாகக் கொண்டு புரட்சிகரமான சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான திட்டங்களின் ஆரம்பத்தையே குறிப்பிடுகின்றது. எமது நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் அனைத்து மதங்களுக்கும், தொடர்புடைய அனைவரினதும் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பாக இருப்பது பொருளாதார ரீதியில் வலுவான, அரசியல் ரீதியில் அதிகாரமிக்க பலமான நாட்டையும் உறுதியான ஆட்சியொன்றும் உருவாவதை காண்பதாகும்.

‘நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு புதிதாக தெரியவேண்டியதில்லை. எனது தந்தையை பயங்கரவாதம் காரணமாக இழந்தேன். இந்நாட்டில் பயங்கரவாதம் காரணமாக குடும்ப அங்கத்தவர்களை இழந்த குடும்பங்களின் துயரம், கண்ணீர், வேதனையை நான் நன்கறிவேன். தேசிய பாதுகாப்புக்காக வலுவான, திட்டமொன்றை நாம் புதிதாக செயல்படுத்துவோம்.

Comments