முஸ்லிம்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு பெருகிவருகிறது | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு பெருகிவருகிறது

கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் அடிவாங்குவார்கள் என கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பு முக்கியஸ்தரான அலி சப்ரி கூறியதாக அரசியல் ​மேடைகளில் பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்தும் ஜனாதிபதித் தேர்தலின் தற்போதைய நிலைமை பற்றியும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் சட்ட ஆலோசகருமான அலி சப்ரியுடனான நேர்காணல்.  

கேள்வி: கோட்டாபயவுக்கு வாக்களிக்காவிட்டால் வாக்களிக்காத முஸ்லிம்களை தாக்கப் ​போவதாக நீங்கள் கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.கோட்டாபயவின் மனநிலையை தான் இது சித்தரிப்பதாக ஆளும் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவது பற்றி?  

பதில்: கூட்டமொன்றில் நான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி விமர்ச னம் முன்வைக்கப்படுகிறது. இதனை முற்றாக நிராகரிக்கிறேன்.  

ஐ.தே.க ஆட்சிக்கு வந்த எல்லாக் காலத்திலும் சிறுபான்மையினருக்கு பாதிப்பே ஏற்பட்டு வந்துள்ளது. 1980இல் யாழ் நூலகத்தை தீவைத்தார்கள். 1990இல் ஆர்.பிரேமதாச ஆட்சியில் வைத்து வடக்கிலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்ட ​போதும் அவர்களுக்கு எந்த நியாயமும் நிலைநாட்டப்படவில்லை. அளுத்கம சம்பவம் நடந்தாலும் ஒரே நாளில் அது கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் ஐ.தே.க ஆட்சிக்கு வந்த பின்னர் முஸ்லிம்கள் மோசமாக பாதிக்கப்பட்டார்கள். சிறுபான்மையினருடன் இருப்பதாக காண்பித்து அவர்களுக்கு எதிராக செயற்படும் இவர்களின் சூழ்ச்சியில் முஸ்லிம்கள் ஏமாறக் கூடாது. சஜித் தலைமையிலான அரசு வந்தால் தொடந்து முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளே எழும். நான் புள்ளிவிபரங்களுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க முடியாது.  

இவர்கள் எனது உரையில் விடுபடும் கால் மாத்திரையையும், விழிப்புக் குறியையும் பிடித்துக் கொண்டு விமர்சிக்கும் கீழ்த்தரமான அரசியலையே செய்கின்றனர். சிறுபான்மை உரிமைகள், சொத்துக்கள் எக்காலப்பகுதியில் மிக பாதுகாப்பாக இருந்தது என்பது தொடர்பில் ஐ.தே.கவில் இருக்கும் எந்த தலைவருடனும் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன். அவர்களை விவாதத்திற்கு வருமாறு சவால் விடுகிறேன்.  

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறிய வசனத்தை நான் திருப்பிக் கூறியதை பிடித்துக் கொண்டு நான் முஸ்லிம்களை தாக்குவதாக கூறியதாக பொய்ப்பிரசாரம் செய்கின்றனர்.  

கேள்வி: முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் பின்னணியில் மொட்டு கட்சியினரே இருப்பதாக ஆளும் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வர இவ்வாறு குழப்பம் தோற்றுவிப்பதாக கூறப்படுவதை ஏற்கிறீர்களா?  

பதில்: ஆட்சியில் இருக்கும் தரப்பிடமே பொலிஸ், பாதுகாப்பு எல்லாம் 

இருக்கிறது. இவர்களுக்கு உரிய விசாரணை நடத்த முடியும். ஆனால் தமது குறையை மறைப்பதற்காக எம்மீது விரல் நீட்டுகின்றனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இவ்வாறு தான் சாக்குப் ​போக்கு கூறுவார்கள். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் புலிகள்   தாக்குதல் நடத்தியபோது எதிரணிக்கும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்த  பிரேமதாசவிற்கும் ஏசிக் கொண்டிருக்கவில்லை. உறுதியாக முடிவு எடுத்து புலிகளை ஒழிக்க அவர் செயற்பட்டார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்படி செயற்பட்டிருந்தால் முஸ்லிம்களுக்கு இத்தனை பிரச்சினை ஏற்பட்டிருக்காது.  

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அரபு மயமாக்கல், இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற பலவிடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை பற்றிய உங்கள் கருத்தென்ன?  

பதில்: பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பாரதூரமானதும் ஒருதலைப்பட்சமுமான   அறிக்கையென்றே கூறுவேன். அரசியல் நோக்கிலே இது தயாரிக்கப்பட்டுள்ளது. ரவூப் ஹக்கீம் இந்த குழுவில் இருந்திருக்கக் கூடாது. அரபுமயமாக்கல்,இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகையில் அவர் ஏன் மௌனமாக  

இருந்தார். முஸ்லிம்களை கேவலப்படுத்துவற்தாக வந்த இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய ஒருவருக்கும் சாட்சியளிக்க இடமளிக்கப்பட்டது.இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம்.  

கேள்வி : தான் கூறிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளாரே?  

பதில்: அவ்வாறானால் அவர் அது பற்றி தனது ஆட்சேபனைக் கருத்தை அறிக்கையாக முன்வைக்க வேண்டும். சமூகத்திற்காக அவர் அதனை செய்ய வேண்டும்.  

கேள்வி : முஸ்லிம்களை தாக்கவேண்டும் என்று நீங்கள் கூறியதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு போன்றே முன்னாள் அமைச்சர் பௌசி தொடர்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ரவூப் ஹக்கீம் தொடர்பிலும் அரசியல் மேடையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இவ்வாறு ஏன் நடைபெறுகிறது.  

பதில் : எமது நாட்டில் தேர்தல் காலத்தில் தரமான விதத்தில் கருத்துக்கள்   முன்வைக்கப்படுவதில்லை. நான் கொள்கைகளை பேசுகையில் அதற்கு பதில் வழங்காது எனது பேச்சில் குறையை தேடிப்பிடித்து விமர்சிக்கின்றனர். பொதுபல ​சேனாவுக்கு எதிராக பேசினேன். ஹலால் பற்றியும் பேசினேன்.  அன்றும் பேசினேன் இன்றும் பேசுகிறேன். சிலருக்கு பணம் கொடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாக கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர்.என்னை விமர்சித்த  

உடன் இதில் இருந்து ஓடிவிட மாட்டேன். அமைச்சர்களும் சில முஸ்லிம் தலைவர்களும் என்னை விமர்சிக்கின்றனர். எமது பங்களிப்பினால் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.கோட்டபய தரப்பிற்கு   முஸ்லிம்களின் 5வீதமான ஆதரவே இருந்தது. இது 20முதல் 25வீதமாக   உயர்ந்துள்ளது. இதனை 30முதல் 35வீதமாக அதிகரித்துள்ளது.  

கேள்வி: ஸஹ்ரானுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தொடர்பு இருப்பதாகவே பொதுஜன பெரமுன மேடைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் ஹக்கீம் தொடர்பில் முறையிட்ட மௌலவி சஹ்லானும் உங்கள் தரப்பிலே இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுகிறது.  

பதில்: அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கோ ரிசாத் பதியுதீனுக்கோ, ஹிஸ்புல்லாவிற்கோ பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக நான் ஒரு போதும் குற்றஞ்சாட்டமாட்டேன். அவ்வாறான குற்றச்சாட்டுகளை ஏற்கவும் மாட்டேன். அரசியலுக்காக மனச்சாட்சிக்கு முரணாக பேசமுடியாது. ஆனால் அவர்களின் இனவாத அரசியலை அங்கீகரிக்க முடியாது.கொள்கையில்லா அரசியலால் முஸ்லிம்கள் தொடர்பான மரியாதையை இழக்க நேரிட்டுள்ளது.  

கேள்வி : எவருக்கும் 50வீத வாக்குகள் கிடைக்காது. இரண்டாவது விருப்பு வாக்கு கிடைப்பவரே வெல்வார் என்ற ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் கணிப்பு பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள்?  

பதில் : அது அவரின் கருத்து. ஆனால் 2018உள்ளூராட்சி தேர்தல் முடிவின்படி பொதுஜனபெரமுனவிற்கும் சு.கவிற்கும் கிடைத்த வாக்குகளையும் எம்முடன் இணைந்துள்ள டக்ளஸ், தொண்டமான், அதாவுல்லா, பிள்ளையான் தரப்பு அருண்தம்பிமுத்து, வியாழேந்திரன் எனப் பலரையும் சேர்த்து கோட்டாபயவிற்கு 68இலட்சம் வாக்குகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஐ.தே.கவிற்கு சுமார் 37இலட்சம் வாக்குகள் வரை இருக்கிறது.

இதனுடன் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரின் தலா ஒரு இலட்சம் வாக்குகளும் த.தே.கூட்டமைப்பின் 3இலட்சம் வாக்குகளும் தான் கிடைக்கும் மொத்தமாக 42இலட்சம் வாக்குகள் தான் சஜித் பெறுவார். 16இலட்சம் மேலதிக வாக்குகளினால் கோட்டாபய முன்னிலையில் இருக்கிறார்.  

கேள்வி : இருதரப்பிற்கும் ஆதரவு வழங்கும் நபர்களை வைத்து அந்த தரப்பு இனவாதத்தை ஆதரிப்பதாக இருதரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்கின்ற. சஜித் தரப்பில் அமைச்சர் சம்பிக்க போன்றோர் இருப்பதாகவும் கோட்டாபய தரப்பில் கருணா, ரிசாத் பதியுதீன்,இனவாத கட்சிகள், வரதராஜப் பெருமாள், கம்மம்பில, ரதன தேரர் போன்றோர் இருப்பதாக கூறப்படுகிறது.கோட்டாபய வந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழமுடியாத நிலை ஏற்படும் எனப்படுகிறதே?  

பதில் : இரு தரப்பிலும் இனவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் இருக்கின்றனர்.    

அமெரிக்கா, பிரிட்டன் என எல்லா நாடுகளிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். த.தே.கூ., ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் தான் சிங்கள சமூகத்தில் இனவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.. ஆனால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கவில்லை. ரதன தேரர் ஆளும் தரப்பினருடன் கடந்த முறை இருந்தபோது அவர் 'ஹலால்' இன்று எமது தரப்பில் இருப்பதால் அவர் 'ஹராம்'. ஆனால் சம்பிக்க ரணவக்க 2003இல் இருந்து முஸ்லிம்கள்  தொடர்பில் இனவாத கருத்துக்களை விதைத்து வந்தவர்.இரு தரப்பிரும் இனவாதிகள் இருப்பதற்காக அவர்கள் கூறுவதை தான் கோட்டாபயவும் சஜித்தும் கேட்கப்போகிறார்கள் என்று அர்த்தமாகிவிடாது.நாட்டில் அமைதியான நிலைமை இன்றி நாட்டை முன்னேற்ற முடியாது.நாட்டில் இனவாதம் பரவ இடமளிக்கப் போவதில்லை என கோட்டாபய எம்மிடம் உறுதியளித்துள்ளார்.  

கேள்வி.ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறப்படுகிறது.அதன் ​போது ரவூப் ஹக்கீம்,ரிசாத் பதியுதீன் போன்றோருக்கு அமைச்சு பதவி கிடைப்பதை எதிர்ப்பீர்களா?  

பதில்.எமக்கு அவர்களுடன் எந்த தனிப்ப்பட பிரச்சினையும் கிடையாது. 2015தேர்தல் முடிகையில் 144பேர் இருந்த கட்சியிருக்க 42எம்.பி உள்ள கட்சி தலைவரே பிரதமராக நியமிக்கப்பட்டார்.கோட்டபய வென்றவுடன் ஆளும் தரப்பில் உள்ள பலர் கியூவில் வருவார்கள்.கடந்த 5வருடங்கள் அவர்கள் அனைத்தையும் அனுபவித்த பின்னர் மீண்டும் எமது பக்கம் வந்தால் எமது கட்சியை முன்னேற்ற முடியாது போகும்.குற்றச்சாட்டு இல்லாவர்களை ஆட்சியில் இணைப்பதில் ஆட்சேபனை கிடையாது.       

ஷம்ஸ் பாஹிம்    

Comments