ஆபத்பாந்தவனாக கரம் கொடுக்க வரும் 1990 அம்பியூலன்ஸ் சேவை | தினகரன் வாரமஞ்சரி

ஆபத்பாந்தவனாக கரம் கொடுக்க வரும் 1990 அம்பியூலன்ஸ் சேவை

சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1990 இலவச அம்பியூலன்ஸ் சேவையை மிகவும் பின்தங்கிய கிராமங்கள், பெருந்தோட்டப்பகுதிகள் மற்றும் நகர்ப்புறம்   என சாதாரண மக்களும் இப்போது பயனடைந்து வருகின்றனர். 1990 அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்கும்போது பல்வேறு சவால்களைச் சந்தித்தேன். இதனைத் தொடர்ந்து செய்யமுடியாது எனப்  பல முட்டுக்கட்டைகள் இடப்பட்டபோதும், இந்த சேவையை முன்னெடுத்து சென்றால் மக்கள் பலனடைவார்கள் என்ற ஒரே குறிக்கோளுடன் ஆரம்பித்தேன். சுவசெரிய திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அமைச்சர் ஹர்ஷ த சில்வா. 

கடந்த 3வருடங்களாக இயங்கி வரும் சுவசெரிய 1990இலவச அம்பியூலன்ஸ் சேவை தொடர்பாக இதுவரை காலமும் விளம்பரப்படுத்தப்படவில்லை. அண்மையில் இது தொடர்பாக விளம்பரங்கள் வெளிவந்தன.  வெளிவந்த குறுகிய நாட்களுக்குள் வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கிறதாம். அரச நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது 1990 சுவசெரிய  மிகவும் சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் நிறுவனமாக விளங்குவதோடு, தனியார் நிறுவனங்களையும் பார்க்க சிறப்பானதொரு சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. 1990சுவசெரிய அம்பியூலன்ஸில் இதுவரை 108குழந்தைகள் பிறந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர்.  

ஒரு விபத்துச் சம்பவம்தான் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தது. நானும் எனது குழுவினரும் திருகோணமலையிலிருந்து  மூன்று வாகனங்களில் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தோம். வரும் வழியில் வந்த எமது வாகனங்களில் ஒன்று கந்தளாய் அருகே விபத்துக்குள்ளானது. எம்முடன் பயணித்த வெளிநாட்டுப் பெண்ணொருவர் இவ்விபத்தில் கடும் காயங்களுக்குள்ளானார். அவரது முள்ளந்தண்டுப்பகுதி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். நவலோகவில் அப்போது அவசர விபத்து சேவைப்பிரிவில் தலைமை அதிகாரியாக இருந்தவர் எனது  நண்பர்.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு நோயாளியை எப்படி காப்பாற்றுவது என்பது அவருக்கு நன்கு தெரியும். அப்போது சுகாதார பிரதியமைச்சராக இருந்த லலித் திசாநாயக்கவுடன் தொடர்புகொண்டு பேசினோம். அவர் அருகிலுள்ள தம்புள்ள வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்தார்.  

தம்புள்ளையில் அம்பியூலன்ஸ் தயாராக இருந்தது. அது அம்பியூலன்ஸ் அல்ல, ஒரு வேன். இதில் நோயாளியை எப்படி கொண்டுசெல்ல முடியும் என  அப்போது கேள்வியெழுப்பினார் வைத்தியர் ருவனி குணவர்தன. தற்போது அவர் வைத்திய நிபுணராக இருக்கிறார். அவரிடம் இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.  காயமடைந்தவருக்கு தேவையான முதலுதவிகளைச் செய்து ஒரு வாகனத்தில்  கொழும்பிற்கு கொண்டுவந்தோம். கொழும்பில் டாக்டர் சுனில் பெரேரா   சிகிச்சையளித்தார். நீங்கள் எடுத்த இந்த முடிவின் காரணமாகவே இவரைக் காப்பாற்ற முடிந்தது. இவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்றனர் என்னுடன் வந்தவர்கள்.  

இந்தச் சம்பவம்தான் எனக்கு இவ்வாறான சிந்தனையை ஏற்படுத்தியது. நாடு இதுவரை இவ்வாறான அம்பியூலன்ஸ் வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்காது. 1990அம்பியூலன்ஸ் ஒரு மைக்ரோ ஹொஸ்பிட்டலைப்போல அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.  

மாலபேயிலிருந்து நோளாளியொருவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதானால் குறைந்தது இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கலாம். நேரம் வீணாகும். வாகன போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் தேசிய வைத்தியசாலைக்கு வந்து அந்நோயாளியின் உயிரைக்காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் வீணாகிவிடும்.  

எனவே சகல தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட அம்பியூலன்ஸ் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தோம். இது தொடர்பில் நண்பர் துமிந்த ரட்னாயக்கவுடன் கலந்துரையாடினேன். பேராசிரியர் ஹசித டி சில்வா இந்தியாவுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர். இந்தியாவில் அவ்வாறான சேவை முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார். இந்தியாவிலுள்ள அவரது நண்பர்களும் இதற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக கூறினர்.  நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 109அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியிருந்தார். அத்திட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் இருப்பதாக அறிந்து அவருடன் தொடர்பு கொண்டோம். அவரது பெயர் கார்த்திக். அவரை இலங்கைக்கு வருமாறு அழைத்தோம். அவர் இந்த அவசர அம்பியூலன்ஸ் சேவை தொடர்பான அனைத்து தகவல்களையும் எமக்கு வழங்கினார்.  

2015பொதுத் தேர்தலின் பின் மார்ச் முதல் வாரத்தில் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரியவந்தது. அவரது முதலாவது இலங்கை விஜயம் என்பதால் நட்பின் அடையாளமாக எதையாவது செய்ய வேண்டுமென விரும்பினாராம் மோடி. அப்போது இலங்கை வெளிவிவகார அமைச்சினுௗடாக பல்வேறு கோரிக்கைகள், திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கல்வி, பாடசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, பாலங்கள் கட்டுமானம் என பலராலும் பலவிடயங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது அமைச்சரவை அமைச்சராக நான் இருக்கவில்லை. பிரதியமைச்சராக இருந்து முயற்சி செய்தேன். பிரதமர் ரணிலிடம் இத்திட்டம் தொடர்பான யோசனைகளை முன்வைத்தேன். அவரும் என்னைப் பாராட்டிவிட்டு இது நல்லதொரு திட்டம், ஆனால் உடனடியாகச் செய்ய முடியுமா தெரியாது என்றார். ஆனால் எனது முயற்சியை கைவிடவில்லை. இந்தியப் பிரதமர் மோடியை பாராளுமன்றத்தின் லொபியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மோடியிடம் எனது இந்த  அம்பியூலன்ஸ் சேவை திட்டத்தை முன்வைத்தேன். அவரும் ஏன் முடியாது செய்யலாம். அப்போது இந்தியத் தூதுவராக இருந்த யஸ்வந்த் சின்ஹாவிடம் பேசுமாறு கூறினார். இந்த திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான அறிக்கையை சமன் ஏக்கநாயக்க  ஊடாக உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தேன். இதனைத் தொடர்ந்து இந்திய இலங்கை பிரதமர்களுக்கிடையே முறையான கடிதப் பரிமாறல்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.  

பின்னர் நாம் வேறொரு திட்டத்தை முன்னெடுக்கப்போகிறோம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். நான் அவசர சேவை அம்பியூலன்ஸ் தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினேன். அப்போது இந்தியப் பிரதமர் முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கலாம். பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கலாம் எனவும் இந்த திட்டத்தை முன்னெடுக்க உதவியளிப்பதாகவும் இதனை முன்னெடுக்கப் போவதாகவும் உறுதியளித்தார். குஜராத்தில் முன்னெடுப்பது போன்று இலங்கையிலும் செய்ய வேண்டும் அதற்கான கள ஆய்வுகளையும் தேவையான பயிற்சிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஒரு குழு வந்து இதற்கான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி தெற்கிலும் மேல் மாகாணத்திலும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 88அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு  7.75மில் டொலர் தேவைப்பட்டது. அதனை மோடி அன்பளிப்பாக வழங்கினார். 

இந்த முன்னோடித் திட்டம் தென் மாகாணத்திலும் மேல் மகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. அம்பாந்தோட்டையில் ஆரம்பமான 1990இலவச அம்பியூலன்ஸ் சேவை பின்னர் மாத்தறை, காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டபோது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர். 1990அம்பியூலன்ஸ் சேவையை உடன் நிறுத்துமாறு கோரினர். எமது இந்த திட்டத்துக்கு உதவியாக இருந்தவர்கள் தாக்கப்பட்டனர். இதன் காரணமாகவே இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம். முதலாம் கட்டத்திற்கான ஆட்சேர்ப்பின்போது தனிப்பட்ட ரீதியில் என்னைத் தாக்க ஆரம்பித்தனர். இந்திய உதவிகள் வேண்டாம் என்றனர். அம்பியூலன்ஸ்களை வைத்தியசாலைகளில் நிறுத்த அனுமதிக்கக்கூடாது என்றார்கள். நாம் வேறு வழியில்லாது  பொலிஸ் நிலையங்களில் அம்பியூலன்ஸ்களை நிறுத்த முடிவெடுத்தோம். இது சிறந்த முடிவுதானே.  அம்பியூலன்ஸுக்கு பாதுகாப்புதானே!  

நான் வெளிவிவகார அமைச்சுக்கு மாற்றப்பட்டேன். மோடியை இரு தடவைகள் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரும் ஏற்றுக்கொண்டார். அரசாங்கம் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப உதவியாளர்களுக்குப் பதிலாக இலங்கையர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். இந்தியாவுடனான  இலங்கையின் நெருங்கிய உறவு தொடர்கிறது.  இப்பிரிவுக்கு தலைவராக டாக்டர் ஸ்ரீலால் டி சில்வா உள்ளார்.  அவரே பிரதான பயிற்சியாளர். நேரம் காலம் பார்க்காமல் தொண்டர்கள் அப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது அதனை வரவேற்கிறார்கள். இதனை தனியொரு ஹர்ச டி சில்வாவினால் மட்டும் செய்துவிட முடியாது. திட்டங்கள் பலராலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒரு சிலவே தொடர்ந்து செயல்படுகிறது.  

ஆபத்திலிருக்கும் ஒரு நோயாளியை அம்பியூலன்ஸில் ஏற்றிவந்து வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான சிறந்த வழியாக 1990சுவசெரிய திட்டம் அமைந்திருக்கிறது. உயிரைக்காப்பாற்றும் வைத்திய உதவிகள் நாட்டுக்குத் தேவை அதனை நான் செய்திருக்கிறேன். வேறு எவரும் இவ்வாறு செய்திருக்க முடியாது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் குறைந்த காலப்பகுதியில் இவ்வாறானதொரு சிறந்த நீண்டகாலத் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறேன் எனப் பெருமையாகக் கூறமுடியும். அன்று கந்தளாயில் நடந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்திருக்காவிட்டால் இன்று இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. என்னை சிந்திக்கச் செய்திருக்கிறது. நாம் சாதித்து காட்டியிருக்கிறோம். நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையையும் காப்பாற்றும் இந்தப் பணியை செய்திருக்கிறோம். உரிய பயனையும் அடைந்திருக்கிறோம்.  

தினமும் 24மணி நேரமும் செயற்படும் வைத்திய சிகிச்சையுடனான இவ்விலவச  அம்பியூலன்ஸ் சேவையை, பொது மக்கள் 1990என்ற தொலைபேசி இலக்கத்தை எந்நேரத்திலும் அவசர வேளைகளில் அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பதினொன்றரை நிமிடங்களுக்குள்ளும் கொழும்பு பகுதிகளில் எட்டரை நிமிடங்களுக்குள்ளும் வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  

1990அம்பியூலன்ஸ் சேவையானது அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் சேவையாக கருத வேண்டாம். பாராளுமன்ற கட்டளைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தபோது எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்க்கவில்லை.   தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட மிகமுக்கியமானதொரு செயற்திட்டமாக சுவசெரிய கருதப்படுகிறது.  

ஒன்பது   மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 297அம்பியூலன்ஸ்கள் பொதுமக்களின் உயிர்காக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1990சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள கொடுக்கப்படும் அழைப்பிலிருந்து அதிகபட்சம் 11நிமிடம் 40செக்கனுக்குள்  அம்பியூலன்ஸ் ஒன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பும் திறனை சுவசெரிய கொண்டுள்ளது. 

1990சுவசெரிய அம்பியூலன்ஸ் முதலுதவிக்கு தேவையான உபகரணங்கள் மட்டுமல்லாது உயிர்காக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப உபகரணங்களையும் கொண்டுள்ளது. அத்தோடு அம்பியூலன்ஸில் நோயாளி ஏற்றப்பட்டவுடன் அவரை கண்காணிப்பதற்கான கெமரா உட்பட பல்வேறு தொடர்பு சாதனங்களை 1990சுவசெரிய அம்பியூலன்ஸ் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 900பயனாளர்கள் சுவசெரிய மூலம் பயனடைகின்றனர்.  

இத்திட்டத்துக்கு நிதியுதவியளித்த இந்திய அரசுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்த அமைச்சர் ஹர்ஷ த சில்வா இதனை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் பொருட்டு 1990சுவசெரிய நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் முகாமையாளர் இருவரும் சம்பளம் இன்றி இந்த சேவையை முன்னெடுத்துச் செல்கின்றனர். சுவசெரிய பவுண்டேசன் நூறுவீதம் அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஏழு பணிப்பாளர்களைக் கொண்டு இயங்கி வரும் இச்சபையில் நிதியமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர் உட்பட நால்வர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளின் எவ்விதத் தலையீடுமின்றி இயங்கிவரும் இச்சபையில் துமிந்த ரட்னாயக்க  ஆரம்ப நாளிலிருந்தே தொண்டராக பணியாற்றி வருகிறார். பணிப்பாளர்களுக்கு நூறு ரூபாவையேனும் வழங்குவதில்லை. ராஜகிரியில் அமைந்துள்ள சுவசெரியவின் தலைமையகம் நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு 24மணிநேரமும் இயங்கி வருகிறது.  

நாளொன்றுக்கு 4500 அழைப்புகளை சுவசெரிய பெற்றுக்கொள்கின்றது. அதில் 98.9 சதவீதமான அழைப்புகளுக்கு முதல் தொனியிலேயே (tone) பதிலளித்து அவர்களுக்கான உதவிகளை1990 சுவசெரிய ஊழியர்கள்  செய்து கொடுக்கின்றனர். நாளொன்றுக்கு கிடைக்கப்படும் அழைப்புகளுக்கு செவிமடுத்து அவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சேவை வழங்குனர் நிலையத்தில் 20 பேர் வரையில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பி. வீரசிங்கம் 

Comments