நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே, விவேகமும் வேகமும் கொண்ட அசகாயசூரர்களாகிய அன்பர்களே, உங்களது திறமைகளை நிரூபிக்க நல்ல காலம் பிறந்துள்ளது. இதுவரை இழுபறியாய்க் கிடந்த காரியங்களைத் தூசி தட்டி, நடத்தி முடிக்கவே வேண்டும். தாங்கள் சோம்பேறிகளே இல்லைதான், ஆனால், வேகத்திற்கும் அனாவசிய பதற்றத்திற்கும் வித்தியாசம் விளங்காமல் முட்டி மோதிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏராளமாய் வந்திருக்கும். எம்மீது குறைபட்டுப் பயனில்லை, சில உண்மைகளைச் சுட்டிக் காட்டினால் அதனால் வரும் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்பதற்காகவே இங்கே, உங்களது முறைப்பையும் பொருட்படுத்தாமல் எழுத வேண்டி இருக்கிறது. சுற்றி உறைந்து கிடந்த பல விவகாரங்கள் லேசாக உலர்ந்து போகும், ஆனால் தாமும் சில இடங்களில் சமரசமாக நடப்பதும் மேலும், நடைமுறையை எளிமைப்படுத்தும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, உங்களுக்கு அப்படி யொன்றும் இந்த வாரம் சந்தோஷமாக இருக்காது. பிரச்சினைகள் முதுகைத் தட்டிக் குசலம் விசாரிக்கப் போகும் காலம் வந்திருக்கிறது. அந்தத் தட்டுகள் தாங்க முடியாத குத்துக்களாகவும் உருவெடுக்கும், தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டியதும் அவசியமாகும். மற்றவர்கள் மேல் எரிச்சலைக் காட்டுவது பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் ஆகாது. அத்துடன் சுற்றாடலில் இதுவரை சேர்த்திருக்கும் நல்ல பெயரைக் கெடுக்கத்தான் உதவும். போதாக் குறைக்கு என்னையும் கவனிக்க வேண்டும் என்று தேகமும் சிறுசிறு பிணிகளைக் காட்டும். குடும்பமும், உறவுகளும் உங்கள் வழிக்கு வரமாட்டார்கள். எனினும் போதியளவு பணப்புழக்கமும் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, கடந்து வந்த பாதையில் சந்தித்த இட்டுக்கட்டுகள் அப்படியொன்றும் முற்றாக விலகிப்போகவில்லை என்றாலும், தற்போது நிலைமை சீரடைந்து வருகின்றது என்பதே உண்மை. பங்காளிகள் வேண்டா வெறுப்பாக உதவிகள் செய்வார்கள். கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாமல் போன சமாசாரங்களை மீண்டும் தொடருங்கள். அது புதிய தொழில் முயற்சிகளாயினும் சரி, திருமணம் போன்றவைகளானும் சரி பலன் உண்டு. இன்று வரை சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்த சில காரியங்களில் இருந்து விடுபட முடியாது. அவைகளைச் சந்தித்தே ஆகவேண்டும். குடும்ப உறவுகள் படு மோசமான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு முன்னேறும். இது இப்போதைக்குப் போதுமானதாகும். கை நீட்டிக் கடன் வாங்காதீர்கள். திருப்பிச் செலுத்துவதற்கு முன் உயிர் போகும் அளவிற்குச் சஞ்சலங்களை அனுபவிக்க நேரும்.  

கடகம்

கடக ராசி அன்பர்களே, வருமானம் தொழில்கள் என்று பார்த்தால் நிலைமை அவ்வளவு பாதிப்புகளைச் சந்திக்காது. சில சங்கடங்கள், உறவுகளிலும், நண்பர்களிடமும் இருந்தும் வரும், அவைகள் பெரும்பாலும் துயர செய்திகளாக இருக்கும். நோய்களும், பெரிதாக உருவெடுக்கும் சலசலப்புகளும் இதில் அடங்கும். வீணாக அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக இருந்தால் போதும். குடும்ப அங்கத்தினர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டாலும் அமைதியாக இருப்பார்கள். இனம் புரியாத பய உணர்வு தாக்கும். விழுந்து அடிபடுதல், யாராவது சிண்டு முடிந்தவைகளால் மனக் கஷ்ட்டம் போன்றவைகள் வர சந்தர்ப்பங்கள் உள்ளன. உறுதியான முடிவுகளோடு பல புதிய விஷயங்களைக் கையாளும் பாக்கியம் வாரக் கடைசியில் கிடைக்கும்.  

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, தனித்துவமான சிறப்பம்சம்சங்களைக் கொண்ட உங்களுக்கு இப்போது தனி உற்சாகம் பிறக்க வாய்ப்புள்ளது. மனச்சோர்வுகள் அகன்றும், உதவிக் கரங்கள் நாடி வருவதால் இலக்குகளை எளிதில் அடையலாம் என்ற நம்பிக்கையும் உச்ச நிலையைப் பெற வாய்ப்புகள் உள்ளன. தாரதம்மியம் அறிந்தவர்களின் நட்புகள் இப்போது மிகவும் பிரயோசனமாய் அமையும். இங்கேயிருந்து உதவிகள் கிடைக்குமா எனக் காத்திருக்க, நடைமுறையில் அவைகளைப் பெரும் நேரம் கிடைத்துள்ளது. உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க இப்போதே அடிகோலிக் கொள்ளலாம். எதையும் ஊடுருவித் தெரிந்து கொள்ளும் ஆற்றலும், நல்ல சுழியோடிகளாய் அடி மட்டம் வரை ஆராய்ந்து அறியும் அறிவுத் திறனும் இயல்பாகவே உங்கள் சாதனைகளுக்கு உதவும். கண்டிப்பும் கறாருமாய் நடந்து, தலை நிமிர்ந்து வாழ இன்னுமோர் வாய்ப்பு உங்கள் எதிரே காத்திருக்கிறது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் கவலைப் பட ஏதும் இல்லாத நிலையில் இருக்கிறீர்கள். வெள்ளம் தலைக்கு மேல் ஆகா, ஓகோ என்று ஓடிக்கொண்டிருக்கும் போது, அலட்டிக் கொள்வதால் என்ன பயன்? தொழில் தானாக கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நிலைக்குத் திரும்பும். தொழிலை இழந்து விடுவோமோ, வருமானங்களில் பாதிப்பு வருமோ என்றெல்லம் அல்லல் படத் தேவை இல்லை. எப்பவோ செய்த புண்ணியம், இங்கே வந்து தொழிலையும், கௌரவத்தையும் காப்பாற்றும். உறவுகளை நாடிப் போகாதிர்கள், அவர்களே தேடி வந்து அளவிற்கு அதிகமான தொல்லைகளையும், துன்பங்களையும் தருவார்கள். கனவு கூடக் கான வேண்டாம், அவர்கள் ஒதுங்கிப் போய்விட மாட்டார்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்களுக்கு ஒத்தாசையாக, உங்களோடு முரண்பட்டு இயன்றளவு குழப்புவார்கள்.

துலாம்

துலா ராசி அன்பர்களே, குரு பகவானின் பெயர்ச்சி சில காரிய நஷ்ட்டங்களையும், உங்களது வாக்கிற்குக் கிடைத்த வரவேற்பையும், அனுபவித்த மரியாதைகளில் குறைவையும் ஏற்படுத்த இடமுண்டு. இனிமேல் எதிலும் அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாவீர்கள். வருமானங்களில் பாரிய இழப்புகளுக்கு இடமில்லை என்கின்ற போதிலும், வரவுகள் மந்தமாகவும், அதை அடையும் வழிகள் சிரமமானதாகவும் அமையும். கண்ணும் கருத்துமாய் காரியங்களை நடத்திச் செல்லவேண்டிய கட்டாயங்கள் உண்டாகும். நானா இம்மாதிரியான இடைஞ்சல்களைச் சந்திக்கிறேன் என்று நீங்களே ஆச்சரியப்படும் வகையில் சில சந்தர்ப்பங்கள் நிகழும். பண விரயங்களும், அலைச்சல்களும், ஏமாற்றங்களும் ஒன்றுக்கு ஒன்று மிஞ்சி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் சொல் மேடை ஏறுகிறது என்பதற்காக கடினமான வார்த்தைப் பிரயோகங்களைக் கட்டாயம் தவிர்த்தலே நல்லது. சஞ்சலங்கள் குறைந்த வெற்றிகளும், நிம்மதியும் வருகின்ற நேரம் வந்துவிட்டது. ஆனால் பதற்றங்களை இன்னும் விட்டுவிடாமல் பற்றிக் கொண்டிருப்பது நல்லதல்ல. அர்த்தமற்ற பயங்களுக்கு அடிமையாகாமலும், சந்திக்கின்ற சிரமங்களைப் பெரிது படுத்தாமலும் இருக்கப் பழகிக் கொள்ளுதல் அத்தியாவசியமாகும். இருக்கின்ற சுகங்களையும், வருகின்ற லாபங்களையும் ஏற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்க முயலுங்கள். தொழில் சம்பந்தமாக தெளிவான நிலைப்பாட்டை எடுத்து அதன் படி செயலாற்றினால், எதிர் காலத்தில் பல விதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் அமையும். குறித்த இலக்குகளை அடைய முடியாமல் செலவுகளும், விரோதங்களும் வரத்தான் செய்யும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, தீர்க்கமான முடிவுகள் எடுப்பதிலும், தீர ஆலோசித்துச் செயலாற்றும் திண்மையும், சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளால் ஒன்றும் செய்ய முடியாமல் போவதுடன், இறுதி வெற்றி உங்களுக்கே உரித்தாகும். மனதில் உறுதி பல மடங்கு பெருகிவிட்ட நிலையில் எதுவும், எவரும் என்னை அசைக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள். குறி வைத்த இலக்குகளை அடையும் முயற்சிகள் இன்னும் ஆரம்ப நிலையில், அல்லது ஆரம்பித்த நிலையிலேயே தேங்கிக் கிடந்தாலும் மெதுவாக முன்னேற வழி இனிமேல் வரும். சரிந்து போன பொருளாதார சங்கடங்களுக்கு முடிவுகள் நெருங்கும், நிம்மதியும் வரும். பங்காளிகள் பிரச்சினை எழுப்புவதை நிறுத்தி விடுவார்கள். குடும்ப அங்கத்தினர்களும், உறவினர்களும் ஒத்துழைப்பார்கள்.   

மகரம்

மகர ராசி அன்பர்களே, எல்லை கடந்த செலவினங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதில் சில சுபச் செலவுகளாகவும், ஆன்மீகச் செலவுகளாகவும் அமைவதினால் அமைதி கொள்ளுங்கள். குடும்ப வட்டத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும். தலைக் குனிவு வரத்தக்க விவகாரங்களில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். விரோதிகள் பற்ற வைத்த வதந்திகள் பற்றி எரிந்து துன்பங்களைத் தரும். குந்தகம் விளையும் போது அமைதி காத்தல் அவசியமாகும். தொழில் வருமானங்களை யாராலும் அசைக்க முடியாமல் போகும். இதனால் மன அமைதி கொள்ளலாம். திடீர்ப் பயணங்கள், சோக நிகழ்வுகள் சிக்கல்களை உண்டாக்கும். இயன்ற அளவு நீசர்களின் உறவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.நீச வருமானங்களைவிட வம்புகளே அதிகமாக இருக்கும்.  

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, மனதில் இருந்த தடுமாற்றங்கள் படிப்படியாக மறையத் தொடங்கும். நிலையாகத் தொழில் செய்வோம் எனும் ஈடுபாடு ஏற்பட்டு, உற்சாகத்துடன் தொழில் செய்ய ஆரம்பிப்பீர்கள். புதிய திருப்பு முனையாக அசையாத சொத்துக்கான வீடுகள், காணிகள் வாங்க முயற்சிகள் செய்தால் பலன் அடைவீர்கள். பலவிதமான மன இறுக்கங்களுக்கு உள்ளான போதிலும், அவைகளில் இருந்து விடுபட்டு புதுப் பொலிவு பெறுவீர்கள். பொருளாதார சகாயங்கள் மூத்த உறவினர்களிடம் இருந்து கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. திருட்டு போவது அல்லது கைப் பொருளை மறந்து இழப்பது போன்றவைகளும் நடக்கும் கவனம். குடும்பத்துச் சலசலப்புகள் மனதை வருந்தச் செய்யும். உதவும் உறவினர்களால் நன்மைகளும் வந்தமையும். சிறு பிணிகளால் தேக சுகம் பாதிப்படைந்து நிவர்த்தியாகும்.  

மீனம்

மீன ராசி அன்பர்களே, சிக்கல்களையும், எதிர்பாராத எதிர்ப்புகளையும் சந்திக்கத் தயாராகுங்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் மாத்திரமே அவைகளை எளிதில் வென்று தப்பலாம். மிக நெருங்கிய நண்பர்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள்வரை மறை முகமாகவே எதிராக இயங்குவார்கள். யார் எதை ஏன் செய்கிறார்கள், சொல்கிறார்கள் என்பதை அப்படி ஒன்றும் இலகுவாகப் புரிந்து நடவடிக்கை எடுக்க இயலாமலே இருக்கும். உங்களது தனிப்பட்ட திறமையும், சாதுர்யமுமே கை கொடுக்க முன்னேற்றங்களை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். தவறினால் தடுமாற்றங்களே மிஞ்சும். சரியாகச் செய்திருந்தாலும், இன்றைய சூழலில் சட்டவிரோதமாகவே கணிக்கப்படும். காலை வாரிவிட ஏரானமானோர் காத்திருக்கிறார்கள் என்பதை அடி மனதில் ஆழப்பதிய வைத்துக் கொண்டே காரியங்களில் இறங்குவதே நலமாகும்.

Comments