மடுத் திருத்தலத்திற்கு கிடைத்த பரிசு | தினகரன் வாரமஞ்சரி

மடுத் திருத்தலத்திற்கு கிடைத்த பரிசு

மதம் தீவிர மதப் பற்றாளனை திசை திருப்பக்கூடியதாக இருப்பதால் மதம் என்பது அபினை போன்றதாகும் என்று சொல்வதுண்டு. காரணம் ஒரு தனி மனிதனோ, அவன் சார்ந்த சமூகமோ மதத்தை பின்பற்றும் விதம் அவனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் ஏனைய மதக் குழுக்களுடன் எவ்வாறான உறவைப் பேண வேண்டுமென தீர்மானிக்கின்றது. அந்தவகையில் இலங்கை வாழ் கத்தோலிக்க மதத்தினர் மாத்திரமல்லாது பெளத்த, இந்து ஆகிய மதத்தவர்களினதும் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நன்மதிப்போடு பல நூறு ஆண்டுகளாக இலங்கைச் சமூகத்துடன் ஒன்று கலந்திருக்கும் ஒரு மத ஸ்தலமாக மடு மாதா திருத்தலம் இருந்து வருகின்றது.  

கத்தோலிக்க மக்களின் முதன்மை திருத்தலங்களில் ஒன்றாக விளங்கிவரும் மடு மாதா திருத்தலமானது, 450 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்ததாகுமென வரலாறு சான்று பகர்கின்றது.

இந்துக்களின் மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கேதீஸ்வர ஆலயத்தை அண்மித்ததாக மடு மாதா திருத்தலம் அமைந்திருக்கின்றமை ஒரு சிறப்பம்சமாகும். முற்றிலும் வேறுபட்ட இரு வேறு மத வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்ட இரு மத ஸ்தலங்கள் ஒரே பிரதேசத்தில் ஒரே திசையில் அமைந்திருப்பதிலிருந்து அப்பிரதேசமானது மக்களின் நீண்டநாள் நம்பிக்கைக்கு பாத்திரமான இறையருள் பாலிக்கப்படுகின்ற ஒரு பிரதேசமாகும் என்பது உறுதிப்படுகின்றது.  

இந்தப் பின்னணியிலேயே வரலாற்றுப் புகழ்மிக்க மடு மாதா திருத்தலத்தை உத்தியோகபூர்வமாக புனித பூமியென பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை 1982ஆம் ஆண்டளவில் அப்போதைய மன்னார் மறை மாவட்ட பேராயராக இருந்த கலாநிதி தோமஸ் செளந்தர நாயகம் அவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தார்.

ஆயினும் அக்காலந்தொட்டு நாட்டில் குறிப்பாக வட, கிழக்கு பிரதேசத்தில் நிலவிவந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக அந்த வேண்டுகோளை நிறைவேற்றுவது அண்மைக்காலம் வரை பிற்போடப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.  

2018ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தமது குடும்பத்தினர் சகிதம் மடு திருத்தலத்திற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்தின்போது மீண்டும் அந்தக் கோரிக்கை தேவாலய நிர்வாகத்தினரால் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

வருடாந்த மடு மாதா உற்சவத்தில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருத்தல வளாகத்தில் சில தினங்கள் தங்கியிருந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி, தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டுவரும் வழக்கமான பின்னணியில் அங்கே வருகை தருகின்ற பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை இயன்றளவு பெற்றுக்கொடுப்பதற்கு அரச அனுசரணையில் திருத்தல வளாகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதே தேவாலய நிர்வாகத்தினது அக்கோரிக்கைக்கு அடிப்படைக் காரணமாகும். இத்தேவையினை உணர்ந்த ஜனாதிபதி அவர்கள் தமது அந்த விஜயத்தையடுத்து அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார். அத்தோடு மடுத் திருத்தலத்திற்கும் இதனை தரிசிக்க வருகின்ற இலட்சக்கணக்கான பக்த பெருமக்களுக்கும் தேவையான நீரை பெற்றுக்கொள்ளும் மடு குளம் பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாது சீரழிந்திருப்பதை நேரடியாக பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், உடனடியாக அக்குளத்தினை புனர் நிர்மாணம் செய்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன், அதன் பலனாக நீண்டகாலமாக நிலவிவந்த நீர்ப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு கிட்டியிருக்கின்றது.  

மடு திருத்தலத்தினை புனித பூமியாக பிரகனப்படுத்துகின்ற விடயம் இத்திருத்தலம் அமைந்திருக்கும் பிரதேசம் காரணமாக வனப் பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்புபட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு அவர்களின் அனுமதியைப் பெற்று உத்தியோகபூர்வமாக அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக தற்போது மடுத் திருத்தலத்தின் சமய நடவடிக்கைகளுக்காக கட்டிடங்களை நிர்மாணித்தல், தேவாலய விஸ்தரிப்பு, பக்தர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக திருத்தலத்தைச் சூழ்ந்த 300 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், மடு திருத்தலத்தைச் சுற்றி பாரிய இயற்கை காட்டுப் பிரதேசம் காணப்படுவதால் மேற்குறிப்பிட்ட 300 ஏக்கருக்கும் மேலதிகமாக 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பாதுகாப்பதற்காக மடு மாதா திருத்தலத்தின் நிர்வாகத்திடம் வர்த்தமானி அறிவித்தலினூடாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களின் பின்னர் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த கோரிக்கையானது யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் மடுத் திருத்தலத்தை சூழ்ந்த பிரதேசத்தின் பெளதீக வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக அமையும்.  

மன்னார் மாவட்டமானது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை வென்ற இயற்கை சூழலை கொண்டிருக்கும் ஒரு பிரதேசமாக இருந்தபோதிலும் அப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.

ஆகையால் குறிப்பாக இப்பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வண்ணத்திலான விடுதி வசதிகளை செய்துகொடுப்பதற்கு தேவாலய நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்குமாயின் அது பெருமளவில் அப்பிரதேசத்திற்கு வந்துபோகும் வெளிநாட்டு பக்தர்களுக்கும் நம் நாட்டைச் சேர்ந்த பக்தர்களுக்கும் பெரும் உதவியாக அமையும்.  

இலங்கையில் குறிப்பாக முன்னணி வழிபாட்டுத் தலங்கள் சில புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்களின் அனுசரணையும் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களையும் பெற்று பெளதீக ரீதியிலான துரித வளர்ச்சியை அடைந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அநுராதபுர நகரில் அமைந்திருக்கும் எட்டு அம்ச வழிபாட்டு தலங்கள் மற்றும் கதிர்காம கோயில் வளாகம் ஆகியன புனித பூமியாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் துரித அபிவிருத்தியைப் பெற்றிருப்பதைப்போல் மடுத் திருத்தலத்தின் அபிவிருத்தி பணிகளுக்கும் அரசாங்கத்தின் தாராள பங்களிப்பு கிடைக்கப்பெறுமாயின் ஏற்கனவே சகல மத பக்தர்களினதும் நன்மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு பொதுமக்களிடையே பிரசித்தி பெற்று விளங்கும் மடு மாதா திருத்தலத்தின் நீண்டகால நிலையான இருப்பிற்கு பெரும் துணையாக அமையும்.  

அந்தவகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 15, 16 வயது இளைஞனாக இருந்தபோது தமது அயலவர்களுடன் இறையருள் நாடி யாத்திரை மேற்கொண்டிருந்த மடு மாதா திருத்தலத்தின் வளர்ச்சிக்காகவும் இதன் நிலையான இருப்பிற்காகவும் இன்று நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் அத்திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தியிருப்பது தனிப்பட்ட ரீதியில் அவருக்கு கத்தோலிக்க மதத்தவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் செய்த மிகச் சிறந்ததோர் பணியாக நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்.   

ரவி ரத்னவேல்    

Comments