முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறி ஆங்கிலேயரை தாக்கிய கெப்பெட்டிபொல | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறி ஆங்கிலேயரை தாக்கிய கெப்பெட்டிபொல

ஆங்கிலேயர் ஏற்றுமதிக்கான பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊவா பிராந்தியம் மலையும் சார்ந்த வனப்பிரதேசமாக காணப்பட்டதோடு அங்கு தம்பான, பிந்தென்னை முதலிய பகுதிகளில் ஆதி வாசிகளாகிய வேடுவர்களும், சிங்கள மக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். எனினும் திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாந்தோட்டை ஆகிய கிழக்கு மற்றும் தென்கிழக்கு கரையோரங்களிலிருந்து மத்திய மலைநாட்டுக்குள் புடவை, உப்பு முதலிய அத்தியாவசிய பண்டங்களை எடுத்துவந்து விற்பனை செய்த முஸ்லிம்கள் ஓரளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். முஸ்லிம்களுக்கெதிரான பிரபுகளும் பிரதானிகளும் மேற்கொண்ட கலவரங்களின் மூலம் நிகழவிருந்த முஸ்லிம்களின் ஆபத்துகளை தடுத்து நிறுத்தியவன் கெப்பெட்டிபொல.  

கண்டி பிராந்தியத்தில் பிரபுக்கள் வம்சத்தவனாகிய எக்னெலிகொடை நடத்திய கொள்கைகள், சூறையாடல்கள் போன்று கெப்பெட்டிபொலையும் வன்முறைகளைக் கையாண்டிருப்பின் ஊவாவில் முஸ்லிம்களின் நிலைமை மோசமாகியிருக்கும். இலங்கை வரலாற்றில் ஒப்பிடமுடியாத சுதந்திரபோராட்ட வீரனாகிய கெப்பெட்டிபொல அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடினானே தவிர நாயக்கர்களையும், முஸ்லிம்களையும் துன்புறுத்துவதற்கு அவன் முன்வரவில்லை.  

அங்குராங்கெத்தையில் தளதா உற்சவத்தைவெகு சிறப்பாக துரைசாமி நாயக்கனின் தலைமையில் கெப்பெட்டிபொல நடத்தியமை காரணமாக சுதேசிகளாகிய சிங்கள மக்கள் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதன்காரணமாக கண்டியை அண்மித்த தும்பறை, ஹேவாஹெட்ட, உடுதும்பறை மற்றும் அதனையண்டிய பகுதிகளில் கெப்பெட்டிப்பொலையின் கிளர்ச்சி நடவடிக்கைகள் தலைவிரித்தாடின. ஊவாவிலும், கண்டி பிராந்தியத்திலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை அச்சமகற்றி நிம்மதியாக இருக்குமாறு அறிவுறுத்தினான் கெப்பெட்டிப்பொல. மாறாக வெள்ளையர்களுக்கு எதிரான தாக்குதல்கள் வெகுவேகமாக அதிகரித்தன. அங்குரஸ்கெத்தையில் தளதா உற்சவத்தின்போது தெரிவிக்கப்பட்டவாறு ஒவ்வொரு பிராந்திய திசாவைமாரும் தத்தமது பிரதேசங்களுக்குச் சென்று கிளர்ச்சிக்கு தூபமிடலாயினர். கிளர்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தாக்குதல் வியூகங்கள் பற்றியும் போர் நிபுணரான எல்லேபொல நிலமே தக்கவாறு பணிப்புரைகள் வழங்கி நின்றான். ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றிய நாள் முதல் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வந்தவன் இந்த எல்லேபொல. எனவே அவனை கைது செய்வதற்கு அல்லது கண்ட இடத்தில் அவனது உயிரைப் பறிப்பதற்கு சகல இராணுவ அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது.  

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் மன்னனின் குடும்பத்தின் நெருங்கிய நண்பனாக விளங்கிய எல்லேப்பொல 1815ம் ஆண்டிலேயே தீர்த்துக் கட்டப்பட வேண்டியவனாக ஆங்கிலேய அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. நாயக்கர்கள் மீது அன்பும் கண்டியின் இந்து தேவாலயங்களாகிய ‘சத்தர தேவாலய’ எனப்படும் நான்கு கோவில்களின் மீது பக்தி சிரத்தையும் கொண்டவனாக இருந்த ‘கஹந்த மஹத்தே நவரத்தின விக்கிரமசிங்க முதியான்சே’ என்னும் பெயர்கொண்ட எல்லேபொல மாத்தளை பிராந்தியத்தின் ‘மஹாநிலமே’ என்னும் உயர்பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு ஆங்கிலேயரும் இடமளித்திருந்தனர்.  

அரசு உயர்பதவி வகித்துக் கொண்டே கெப்பெட்டிபொலையுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் அவன் கலந்து கொண்டமை ஆங்கிலேயருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எல்லேபொல துணிவு மிக்க திறமைவாய்ந்த போராளியென ஆளுநர் பிரவுன்றிக் நன்கறிந்து கொண்டிருந்தமையால் 18மார்ச் 19ம் திகதி விசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டான். எல்லேப்பொல மக நிலமேயை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1000இந்திய நாணயங்கள் பரிசளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இச்சந்தப்பத்தில் மாத்தளை நாலாந்தா இராணுவ முகாமின் தளபதியாக இருந்தவன் லெப்டினண்ட் கேர்ணல் கெலியாகும். அவன் மார்ச் 19ம் திகதியே லக்கலையை நோக்கி படையணியொன்றை அனுப்பிவைத்தான். அத்தருணம் மடுகல்ல மற்றும் (இளைய) பிலிமத்தலாவை ஆகியோரினால் மாத்தளை, தும்பறை ஆகிய இடங்களில் அமைந்திருந்த சுதேசிகளின் முகாம்களுக்கு மேலும் ஆட்பலம் சேர்க்கப்பட்டிருந்தது. அவ்விடுபவரும் மாத்தளையை முற்றுகையிட்டு ஆங்கிலேயரிடமிருந்து அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக கெலி அறிந்து கொண்டான். லக்கலையை நோக்கி அனுப்பப்பட்ட படையணியின் முக்கிய நோக்கமாக மடுகல்ல – பிலிமத்தலாவை ஆகியவர்களை கைது செய்வதாகவே இருந்தது.  

மத்திய மலைநாடு முழுதும் மலேரியா வியாதி பரவியிருந்த கலாகட்டம் அது. 1818ம் ஆண்டு நடுப்பகுதியில் வெல்லஸ்ஸ, பிந்தென்னை, ஊவா, வலப்பனை ஆகிய இடங்களில் அமைந்திருந்த முகாம்களில் தரித்திருந்த இராணுவ வீரர்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.  

மிகவேகமாக பரவிய இவ்வியாதி அக்டோபர் மாத அளவில் முழு மத்திய மலைநாடு பூராவும் அமைந்திருந்த இராணுவ முகாம்களை ஆக்கிரமித்தது. இச்சந்தர்ப்பத்தில் வியாதிக்குள்ளாகா திருக்கும் இராணுவ வீரர்களின் கடமை; மலேரியாவினால் அவதியுறும் சிப்பாய்கள் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்குள்ளாகாது பாதுகாப்பான முகாம்களுக்கு அவர்களைக் கொண்டுவந்து சேர்ப்பதாக அமைந்தது.  

ஒருபுறம் மடுகல்ல, பிலிமத்தலாவை ஆங்கிலேயரின் தாக்குதல்களுக்கும் மறுபுறம் கெப்பெட்டிபொல, மன்னன் துரைசாமி ஆகியோரின் தாக்குதல்களுக்கும் ஈடுகொடுத்தவாறு முகாம்களுக்குள்ளேயே வியாதிக்குட்பட்ட வீரர்களை பாதுகாப்பதில் ஆங்கிலேய இராணுவம் பெரும் சிரத்தை கொண்டது.  

கெப்பெட்டிபொலையின் போராட்டத்துக்கு வாய்த்த அவனது சகாக்களாகிய மடுகல்லே, பிலிமத்தலாவ, எல்லேப்பொல ஆகியோரின் வழிகாட்டலில் மாத்தளை நாலந்தா படைமுகாம் மீது பலத்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மேஜர் டொலட்ரி அச்சமயம் நாலந்தா முகாமுக்கு தலைமை தாங்கினான்.

போராளிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது மேஜர் டொலட்ரி அங்கிருந்து வெளியேறி தனது முகாமை அழித்துவிட்டு தன்னுடன் இருந்த இராணுவத்தினருடன் குருணாகலையை நோக்கி ஓடினான். பாதுகாப்பிடம் நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஆங்கிலேயே இராணுவத்தின் மீது பின்தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டனர் கெப்பெட்டிபொலையின் சுதேச போராளிகள். குருணாகலையை வந்தடைந்த போது மேஜர் டொலட்ரி தனது முறிந்துபோன கையை கழுத்தோடு தொங்கவிட்டபடி காணப்பட்டான்.  

வழியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் மரணமடைந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இவர்களில் இருவரின் சடலங்களை மாத்திரமே அவர்களால் எடுத்துவர முடிந்தது. ஏனைய பத்து வீரர்களின் உடல்களை நடுவழியில் விட்டுவிட்டு வரநேர்ந்தது. நான்கு பேர் படுகாய மடைந்திருந்தனர். இந்த காலங்களை மேஜர் டொலட்ரி தனது குறிப்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்தான்.  

நிர்மூலமாக்கப்பட்ட நாலந்தா முகாமிலிருந்து எவ்வித தகவல்களும் கிட்டாததால் எத்கால முகாமில் தரித்திருந்த இராணுவத்தினர் பெரும் பீதிக்குள்ளாகினர். கேப்டன் ரேப்பியர் இம்முகாமுக்கு தலைமை தாங்கினான். நாலந்தா முகாமின் தற்போதை நிலவரம் பற்றி அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேப்டன் ரேப்பியர் கோரப்பட்டிருந்தான்.  

தனது படையணியுடன் நாலந்தா நோக்கி எத்கால இடுக்கின்வழியே சென்று கொண்டிருந்த ரேப்பியரின் அணி பலத்த தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க தேர்ந்தது. தாம் கடக்க வேண்டிய இருபது மைல் தூரத்தை அவர்கள் பன்னிரண்டு மணித்தியால பயணத்தை மேற்கொண்டு அடைய நேர்ந்தது. அவர்கள் நாலந்த முகாமை அண்மித்த போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  

அங்கு நிர்மூலமாக்கப்பட்ட இராணுவ முகாமின் எச்சங்களே தென்பட்டன. இரவு ஏழுமணியளவில் ரேப்பியர் தனது படையுடன் அவ்விடத்தை அடைந்தபோது அருகே தென்பட்ட மலையை நோக்கி தனது வீரர்கள் சகிதம் தவழ்ந்து செல்ல முயற்சித்தான். இயன்றளவு மலையில் தவழ்ந்து சென்று நள்ளிரவு வரையிலும் அங்கு தரித்திருந்தனர்.  

ஓய்வு பெற்றபின்னர் ரேப்பியரும் குழுவினரும் சூரியோதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர். தமது எத்கால முகாமை நோக்கி அவர்கள் திரும்பி வரும் பயணமும் எளிதாக அமையவில்லை. போராளிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் நடந்து வந்தனர். இச்சந்தர்ப்பத்தில் வலுவுடன் காணப்பட்ட சுதேச போராளிகளின் தாக்குதல்கள் பலத்த சேதங்களை ஏற்படுத்தின. இறந்து போன தனது படைவீரர்களின் உடல்களை எடுத்துவர ரேப்பியருக்கு அவகாசம் கிட்டவில்லை. இரவு முழுதுமாக கடும் தாக்குதல்கள் நிகழ்ந்தப்பட்டன. உயிர்தப்பிய வீரர்கள் தமது எத்கால முகாமை அடையும் போது மறுநாள் காலை எட்டுமணியாகியிருந்தது. பலர் படுகாயங்களுடன் காணப்பட்டனர். நாலந்தா இராணுவ முகாமின் முடிவை ஆங்கிலேயர் எதிர்பார்த்திருக்கவில்லை.  

வலப்பனை முகாமுக்கு தலைமை தாங்கிய கேர்ணல் ஹூக் தனது படையணியுடன் பின்வாங்கிச் செல்ல நேர்ந்தது. அவன் தனது படையுடன் ஏழுகோறளையை நோக்கி ஓடினான். தும்பனையும் இச்சந்தர்ப்பத்தில் பெரும் கிளர்ச்சிக்குள்ளாகிய பிரதேசமாக விளங்கியது. இராணுவ தலைமையகம் அமைந்திருந்த கண்டியுடன் தொடர்புகள் மேற்கொள்ள இயலாத நிலை காணப்பட்டது.(தொடரும்)

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(கண்டிச் சுதந்திர போராட்டங்கள்)
சி.கே. முருகேசு

Comments