சந்திரிகா தலைமையிலான சு.க. அணி 5 ஆம் திகதி கூடுகிறது | தினகரன் வாரமஞ்சரி

சந்திரிகா தலைமையிலான சு.க. அணி 5 ஆம் திகதி கூடுகிறது

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் உருவாக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணியில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாளை மறுதினம் 5ஆம் திகதி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்பதை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார். 

இதற்கான பிரமாண்ட கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சுகந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அவரது அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க சு.கவின் மத்திய செயற்குழு எதிர்வரும் 5ஆம் திகதி இரவு 7 மணிக்கு சு.கவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. 

ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. இதில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான ‘சுரகிமு நிதஹஸ் பக்சய பலய’ அமைப்பும் இணைந்துகொண்டது. 

சந்திரிக்காவின் இந்த அதிரடி நகர்வு காரணமாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

சு.கவை ஐ.தே.கவிடம் அடகுவைக்க சந்திரிக்கா தலைமையிலான அணி முற்படுவதாக விமர்சித்துள்ளனர். 

இவ்வாறான பின்புலத்தில்தான் சு.கவின் மத்திய செயற்குழுவை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், அன்றையதினம் காலை சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக சந்திரிக்கா தலைமையிலான அணி அறிவிக்கவுள்ளது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments