தமிழ் கட்சிகளின் தலைமைகள் தொடர்ந்தும் மந்திராலோசனை | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் கட்சிகளின் தலைமைகள் தொடர்ந்தும் மந்திராலோசனை

பிரதான இரு கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ள சூழலில் யாருக்கு ஆதரவை வழங்குவதென இறுதி முடிவொன்றை எடுப்பது தொடர்பில் தமிழ் தலைமைகளில் தொடர்ந்து மந்திராலோசனை நடத்திவருவதாக அறிய முடிகிறது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைவிட சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமாக உள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் கருத்துகளையும் வெளியிட்டுள்ளன. 

இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழரசுக் கட்சி இன்று வவுனியாவில் கூடவுள்ளது. 

இக்கூட்டம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளதுடன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சரவணபவன் உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.  இதற்கு பாராளுமன்ற உறுப்பினரும் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமை தாங்கவுள்ளார்.

இதுதொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போது,

தலைவர் சம்பந்தன் தலைமையில்  தமிழரசுக் கட்சி இன்று வவுனியாவில் கூடவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இரா.சம்பந்தன் நேற்று வவுனியா வந்துள்ளார். பிரதான வேட்பாளர்களின் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்தும் இங்கு  கலந்துரையாடவுள்ளோம்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பின்னர் யாழ்.பல்கலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் ஐந்து தமிழ் கட்சிகள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். அதன் பின்னரே எமது இறுதி முடிவை வெளியிடவுள்ளோம். இச்சந்திப்புகள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்றார். 

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனிடம் வினவியபோது, 

இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பார்வையிட்டேன். இதில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் அமைந்துள்ளது. 

முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லாத போதிலும் அதியுச்ச அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மற்றும் ஐந்து தமிழ் கட்சியினருடன் பேசி நாம் விரைவாக இறுதி தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கின் தமிழ் தலைமைகளின் மௌனம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணனிடம் வினவிய போது, 

“சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி வீட்டுத்திட்டம், தனிப் பல்கலைக்கழகம், காணி உரிமை மற்றும் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றுவது குறித்து முற்போக்கான அறிவிப்புகள் உள்ளன. மலையக மக்களை பொறுத்தவரை இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளன. 

வடக்கின் தமிழ்த் தலைமைகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிப்பார்களென்ற நம்பிக்கையுள்ளது” என்றார். 

இதேவேளை, தமிழ் தலைமைகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பளார்களும் நிராகரித்துள்ளமையால், அவர்களை ஆதரிப்பதில் எவ்வித பயனும் இல்லை.  அடுத்த வார நடுப்பகுதியில் ஐந்து தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பை ஒருங்கிணைத்து வருகின்றோமென கூட்டத்தை ஒழுங்கு செய்துவரும் யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் கபிலன் தெரிவித்தார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments