தெரிவாகும் புதிய ஜனாதிபதி சிறந்த தேசிய கொள்கைகளை வகுக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தெரிவாகும் புதிய ஜனாதிபதி சிறந்த தேசிய கொள்கைகளை வகுக்க வேண்டும்

மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்கும் வேட்பாளரையே ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.  

அதேநேரம், எதிர்கால ஜனாதிபதியும் அரசாங்கமும் சிறந்த தேசியக் கொள்கைகளை வகுக்க வேண்டுமென்றும் ஆயர்கள் பேரவை கேட்டுள்ளது.  

இது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து மக்கள் புத்திசாதுரியமாகவும் தைரியமாகவும் செயற்படுவதுடன் தெரிவு செய்யும் வேட்பாளர் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்து மக்கள் அனைவருடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றக்கூடிய ஒருமைப்பாடுமிக்கவராகவும் இருக்க வேண்டும். மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்கும் வேட்பாளரையே ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.  

உயிர்த்த ஞாயிறன்று எமது அப்பாவி மக்கள் அனுபவித்த மிருகத்தனமான தாக்குதலை கருத்தில் கொண்டு எமது நாட்டில் மதவாதம் மற்றும் இனவாதம் ஒழிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஈடுபட்டு உழைக்கவும், நம் நாட்டிலுள்ள அனைத்து இன, மத மக்களிடையே சகவாழ்வு ஏற்படவும் வழிசமைக்குமாறு அனைத்து தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.  

எதிர்கால ஜனாதிபதியும் அரசாங்கமும் சிறந்த தேசிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மத சுதந்திரம், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் இயற்கை வளங்களின் பொறுப்புமிகு மேலாண்மை ஆகியவற்றை மையப்படுத்திய கொள்கைகளை வகுத்து அடுத்தடுத்து தலைமுறையினருக்குச் சேவை செய்வதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வழிவகுக்க வேண்டும்.  

எதிர்கால அரசியல் தலைவர்கள் மக்களின் நிலை அல்லது அவர்தம் பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் சமமாக இருக்கும் வகையில் அனைத்துக் குடிமக்களுக்கும் அமைதியை உறுதி செய்யுமாறு நாங்கள் மனதார கேட்டுக்கொள்கிறோம். இந்நிலையில் இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஜனநாயக உரிமையுடன் கூடிய தமது மகத்துவமான வாக்கையளிக்க வேண்டுமென அனைத்துக் கத்தோலிக்கர்களுக்கும், குடி மக்களுக்கும் அறிவுறுத்துகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

Comments